வெள்ளி, 31 அக்டோபர், 2008

பொங்கலும் வேண்டும்!அப் பொங்கலை உண்டற்கு
வெங்காப் புலவரும் வேண்டுமே --- தங்குவீர்!
தங்கிப் புனைபாவில் தண்தமிழ் பொங்கிவர
எங்கும் பொலிவாம் இனி!


போடும் படையலுக்குப் பொங்கும் முறைவேறு;
கூடும் விழவுக்கு வேறுமுறை --- நாடுங்கால்
பொங்கல் பலவிதமே; பொன்னான பண்டிகைப்
பொங்கலுக் கீடில்லை போ!


மூண்ட பொழுதெல்லாம் மும்மூன் றெழுதியிட
ஈண்டு மிகுமே இருமடங்கின் --- பூண்டிலங்கும்
எண்ணிக்கை மட்டோ இனிமையும் ஒத்தியலப்
பண்ணுவம் பற்பல பா.


மூண்ட = ஏதேனும் ஒரு நிகழ்வு மூண்ட அல்லது நிகழ்ந்த.



வெண்பா எழுதுதல் வேலை பெரிதில்லை
கண்பார்த்துக் கையால் எழுதுக! --- முன்பார்த்த
சீருக்குச் சீர்பின் சிதைக்காமல் சேர்த்தபின்
யாருக்கும் ஏற்பாமே யாப்பு.
புரைதீர்ந்த பாட்டென்ற போதும் புரியக்
குறைதீர்ந்த உரையாங்கு வேண்டும் --- வரைதீர்ந்த
ஆர்வத்தோர் பல்லோர் அவர்க்கும் புரிந்தாலே
சீர்வற்றா தோங்குந் தமிழ்.
நாளுக்கு நன்மைசேர் நல்ல சுவைப்பாடல்
வேளைக்கு வேளையாய் வெல்தமிழில் --- பாலுக்குத்
தேன்கலந் தாற்போல் தெளிசொற்கள் பெய்தெழுத
வான்மலர்ந்து வாழ்த்தும் உனை!


தமிழ்ச்செங் கதிரோர்க்கெம் தாழ்மை வணக்கம்
அமிழ்தாம் தமிழாலே நன்றி --- கமழ்பூவாய்
ஓங்கும் உணர்வுகள் ஓவாக் களமிங்கே
நீங்கள் நிலைகொள்மின் நேர்.

நீரூறும் மண்ணதன் நீங்கா வளம்போல
ஆரூரன் வெங்கா அனைவருமே --- சேருணர்வு
துள்ளும் களத்தினில் தூயவெண் பாக்கள்நெஞ்
சள்ளும் படிதந்தார் அன்று.

வெண்டுறை வெண்பாவென் றெப்பாடல் ஆயினும்
கண்டுகேட் டின்புற வொன்றேயாம் --- உண்டக்கால்
நாவுக்கே வேற்றுமை நல்வயிற்றுக் குண்டாமோ
தேவுக்கோ யாவும் படைப்பு.

உண்டால் அடங்கும் உறுபசியே; நற்பாடல்
கொண்டால் அடங்கும் குலைவிலா --- வண்டுதேன்
தேர்வேபோல் தேடும் அறிபசி; தேர்வாரும்
ஆர்வம் உடையார் எனின்.


களம்சேர் கருத்தாளர்் காணுங்கால் தங்கள்
வளம்சேர் கருத்துகளை வைப்பில் --- குளம்போல்
வெளிவிடார் எம்மிடுகை வேகம் படித்தே
களிகொளார் கைவிடு வார்.

இப்பாடலுக்கான பதவுரை வருமாறு:

காணுங்கால -- ஆய்வு செய்யுங்கால்;
களம்சேர் கருத்தாளர் -- இணைய களங்களுக்கு வருகை புரியும் கருத்துடையோர்;
தங்கள் -- தங்களுடைய;
வளம்சேர் கருத்துகளை -- வளமிக்க கருத்துக்களை;
வைப்பில் -- (தாங்களே ) வைத்துக்கொள்வதில்;
குளம்போல் -- தன் நீரைத் தானே வைத்துக்கொள்ளும் குளத்தைப்போல;
வெளிவிடார் -- வெளியே விடமாட்டார்கள்:
எம்மிடுகை வேகம் படித்தே -- யாமிடும் இடுகைகளை வேகமாக (மேலெழுந்தவாரியாகப் ) படித்துவிட்டு;
களிகொளார் -- மகிழ்ச்சியும் கொள்ளமாட்டார்;
கைவிடு வார். -- மேற்கொண்டு கவனிக்காமல் விட்டுவிடுவர்.

கருத்துரை: களங்களில் கருத்துப்பரிமாற்றமென்பது மிகவும் அருகியே நடைபெறுவதாகத் தெரிகின்றது.



களம்சேர் கருத்தாளர்் காணுங்கால் தங்கள்
வளம்சேர் கருத்துகளை வைப்பில் --- குளம்போல்
வெளிவிடார் எம்மிடுகை வேகம் படித்தே
களிகொளார் கைவிடு வார்.


கருத்தீடு கண்டு கடிந்தியா தொன்றும்
மறுத்தீடு தந்திட மாட்டார் --- பொறுத்திலார்;
ஓடிச் சிலநாள் ஒளிந்தார்போல் பின்வந்து
நாடினார்் நண்பர் பலர்.


பதவுரை:
கருத்தீடு கண்டு = இடப்பட்ட கருத்தினைக் கண்டு; ஈடு = இடுதல்; முதனிலை திரிந்த தொழிற்பெயர். ஒப்பு நோக்குக: வெளியீடு.
கடிந்தியா தொன்றும = கடிந்து யாதொன்றும்; சினங்கொண்டு ஏதும்;்
மறுத்தீடு = மறுப்பு இடுதல்;
தந்திட மாட்டார் --- தரமாட்டார்;
பொறுத்திலார் = பொறுப்பதும் இல்லாதவர்;
ஓடிச் சிலநாள் ஒளிந்தார்போல் = சிலநாள் ஓடி ஒளிந்துகொண்டவர்போல் பாவித்துக்கொண்டு;
பின்வந்து = பிறகு தோன்றி;
நாடினார்் நண்பர் பலர = பழையபடி நட்பு பாராட்டியவர் அல்லது நட்பினர் ஆனவர் பலர் ஆவார்.

கருத்துரை: பொறுத்துக்கொள்ளவும் முடியவில்லை; நட்பின்காரணமாக மறுத்துரைக்கவும் முடியவில்லை; இந்நிலையில் தற்காலிகமாக ஒளிந்திருந்துவிட்டு மீண்டும் தோன்றும் அருமைமிக்க நண்பர் பலர்.


நலமே நலமறிய ஆவலாய் உள்ளேம்
புலமே பெயர்ந்துவாழ் பொன்னாம் -- குலம்வளர்
நன்னாட்டில் நீங்களும் நற்றமிழ் மக்களும்
எந்நலமும் ஏற்றுவாழ் வீர்.

இன்னிசை வெண்பா

வெங்கா அவர்கள் விரைந்திங்கு வந்துடன்
தங்கள் இருப்பிடத்தில் தானியங்கள் உண்பொருள்
எண்ணெய் இவற்றுக்கே இட்டவிலை செப்பிடுக
உண்மை அறிய உலகு.


இவற்றை அலகிட்டு விளக்குக.

மேலும் முதல் பாட்டில் மூன்றாம் வரியில் "நன்னாட்டில்" என்ற சீரை "நன்னிலத்தில்" என்று மாற்றுவதால் பொருள் வேறுபடுமா , யாது நன்மை என்பதையும் சொல்லுங்கள்.



பக்கத்து நாட்டுப்் படுகொலைக்குக் கண்மூடி
துக்கத்தைத் தூண்டிய பாரதம்தன் --- கக்கத்துப்
பிள்ளைக்கே வந்துதான் பீடித்த நோய்கருமம்
கொள்ளைபோல் மீண்டதோ கூறு.

பக்கத்து நாடு = இலங்கை. கக்கத்துப் பிள்ளை = கைகளில் தூக்கிவைத்திருக்கும் பிள்ளை.
கருமம் = கருமவினை, கொள்ளை = கொள்ளை நோய்.
மீண்டதோ = கர்மாவினால் மீள வந்துற்றதோ.

புதன், 29 அக்டோபர், 2008

சொல்லாக்கமும் புணர்ச்சிவிதிகளும் - 1

சொல்லாக்கத்தில் புணர்ச்சி விதிகள் முழுமையாகப் பின்பற்றப்படா. உண்மையில் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள் கூறும் விதிகள் சொல்லாக்கத்திற்கு உரியவை அல்ல. அவை முழுச்சொற்கள் புணர்தல் பற்றியவை.


நாடு + அன் = நாடன். இச்சொல் மலையாள மொழியில் பெருவழக்கு. தமிழில் இலக்கிய வழக்கு உடையது.

நாடு + ஆர் = நாடார்.

நாடு+ ஆன், நாடு+ ஆர் = நாட்டான், நாட்டார். (வேறு சொல்லைப் பிறப்பிக்க வேறுவகையாகப் பு ணர்த்த்தப் பெற்றது எனலாம்)

நாட்டார் என்பது ஒரு பட்டப்பெயர்: எ-டு: அறிஞர் வேங்கடசாமி நாட்டார்.

ஆனால் வேற்றுமைஉருபு ஏற்கும்போது,

நாடு+ இல் = நாட்டில; நாடு + ஐ = நாட்டை ......் என இரட்டிக்கும்.

முழுச்சொற் புணர்ச்சி விதிகள் சொற்றொகுதி வளர்ச்சிக்கு ஒரு தடையாக நிற்கவில்லை என்பது பெற்றாம். அவை வேண்டியாங்கு ்டியாங்கு விலக்கப்பட்டன. இதற்குக் காரணம் இவ்விதிகள் முழுச்சொற்கள் புணவர்வது பற்றியவை.

இது நான் முன் எழுதியது:

மனத்தை ஒன்றன்மேல் இடுவதுதான் இட்டம் எனப்பட்டது. இச்சொல் இடு + அம் = இட்டம் என்றாகியது. இதைச் சங்கதச் சொல் என்பதும், பின் இதை இஷ்டம் என்று எழுதுவதும் தவறு. தமிழ்ப்பண்டிதர்கள் தாம் சிறு அகவையின்போது சொல்லப்பட்டதையொட்டியே பண்டிதரான பின்பும் சிந்திக்காமல் செயல்பட்டு இதைச் சங்கதமொழி என்றனர்.

கடுமையான நிலையைக் குறிப்பதே கட்டம் என்பது. கடு+ அம் = கட்டம்(1). இதுவும் பின் கஷ்டம் என்று பிறழக் கூறப்பட்டது. கட்டு + அம் என்பதும் கட்டம்(2) என்றே முடியும். ஆனால் அதன் பொருள் pattern என்பது போன்றது. கட்டம் கட்டமான சட்டையணிந்துள்ளான் என்பதுண்டு.( chequered shirt.)
கட்டம்1 என்பது கஷ்டம் என்று மாறியபின் கட்டம(்2) முன்போலவே கட்டம் என்றே இருந்தது.

படிப்பறிவு குறைந்த மக்கள் "இக்கட்டான" நிலை என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்களே! இது "இழுக்கட்டு" என்றிருந்து பின் இக்கட்டு ஆகிற்று என்று தெரிகிறது. இழுத்துக் கட்டிவைத்ததுபோன்ற நிலையைக் குறிப்பதாகவோ அல்லது இழுக்கு என்பது இச்சொல்லின் முன்பாதியாகவோ இருந்து மருவியிருக்கலாம்.

இதை இங்கு மறுபதிவு செய்தது ஏன் என வினவலாம்.

இடு+ அம் = இடம்.

இடு + அம் = இட்டம். (இங்கு டகரம் இரட்டித்தது).


நாடன், நாட்டான் என்பவற்றோடு ஒப்பு நோக்குக.

சங்கதத்தில் இஷ், இஷ்டதாஸ், இஷ்டயாமன், இஷ்டி, இஷ்டு முதலிய விரும்புதல் தொடர்புடைய சொற்கள் உள. இருக்கு, அதர்வண வேதங்களிலும் இவை இடம்பெற்றுள. பாரசீகத்தில் "அப இஸ்தன"், " காமிஸ்தன்" முதலிய சொற்கள் உள. அவை ஆராயத்தக்கவை.

இட்டம் என்பது மன ஈடுபாடு. இடு > ஈடு> ஈடுபாடு. இடு> இட்டம். இஷ் , இஸ் எனப் பிறமொழியில் வருவன இவ்வடியில் தோன்றியவை என்பது தெரிகிறது.

இலத்தீன் அகரமுதலி தருபவை:
voluntas, voluntatis N (3rd) F 3 1 F [XXXAX]
will, desire; purpose; good will; wish, favor, consent;

lubido, lubidinis N (3rd) F 3 1 F [XXXAO]
desire/longing/wish/fancy; lust, wantonness; will/pleasure; passion/lusts (pl.);

libido, libidinis N (3rd) F 3 1 F [XXXAO]
desire/longing/wish/fancy; lust, wantonness; will/pleasure; passion/lusts (pl.);

adpeto, adpetere, adpetivi, adpetitus V (3rd) TRANS 3 1 TRANS [XXXAO]
seek/grasp after, desire; assail; strive eagerly/long for; approach, near;

appeto, appetere, appetivi, appetitus V (3rd) TRANS 3 1 TRANS [XXXAO]
seek/grasp after, desire; assail; strive eagerly/long for; approach, near;

capto, captare, captavi, captatus V (1st) TRANS 1 1 TRANS [XXXAO]
try/long/aim for, desire; entice; hunt legacy; try to catch/grasp/seize/reach;

புணர்ச்சி விதிகளும் சொல்லாக்கமும் - 2

*


நகு+அம் = நகம் என்று வரும் ஆகவே நக்கத்திரம் என்று வராது என்பது சரியான வாதம் அன்று. இதற்கு ஐராவதம் மகாதேவன் நகு+அம்= நக்கம் என்று வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளது மட்டுமன்று, கீழ்க்கண்ட என் எடுத்துக்காட்டுக்களையும் கண்டு தெரிந்துகொள்ளவும்:

பகு+ ஐ = பகை (பக்கை என்று வரவில்லை).
ஆனால்:
பகு+அம் = பக்கம்!! (பகம் என்று வரவில்லை).
வேறுபாடு நோக்குக:
தக்குதல்: தக்கு+அம் = தக்கம்.

நகு+ஐ = நகை.
ஆனால்: நகு+ அல் = நக்கல் (சிரிப்பு).
நகு+அல் = நகல்.(சிரிப்பு).

இப்படிப் பல.
இதை எல்லாம் ஆய்வு செய்து பின் குறை சொல்லட்டுமே!

புதன், 22 அக்டோபர், 2008

கூரையா விழுந்தது?

கூரை விழலாம் விழுந்தநாள் தொட்டு அசை
சீரைத் தளையைச் சிறப்புடனே --- ஆரணியே
சேரக் கவிபாடச் செய்தமை ஓருங்கால்
யாரே கவலைகொள் வார்.

[இளங்கவி ஒருவர், எழும்புமுன் கூரை விழுந்துவிட்டது...ஆகையினால் களத்திற்கு வர இயலவில்லை என்பதுபோல் பாடலொன்று புனைந்திருந்தார். ஆனால் கூரையினால் அவர் "பாதிக்கப்" பட்டதாகத் தெரியவில்லை. இப்பாடல் அவருக்குப் பதிலாக அமைந்து, கூரை விழுந்ததும் கவி பாடத் தொடங்கி விட்டீர், இனி யார் கவலைப்படுவார் என்று வினவுகிறது.]

செவ்வாய், 21 அக்டோபர், 2008

கொடிய விலங்குகள்..............

கொடிய விலங்குகள் கொல்தொழிற் காட்டில்
விடிய விடிய விழித்துக் --- கடிகாவல்
முன்கொண்டு தாமே முனைப்போடு வாழ்ந்திட்ட
வன்மைசேர் காலத்தில் மாண்டோரும் --- பன்மையோர்!
ஒண்மை அறிவியல் ஓச்சும் அரசுயர்
தன்மை உடையவிந் நாளிலே -- புன்மைசேர்
குண்டுகளால் துன்பக் குறுநேர்ச்சி தம்மினால்
பண்டுபோல் மாண்டோரும் பல்லோராம் --- என்றுமே
மாளவே பற்பல காரணங்கள் அல்லாமல்
மாளுதலில் மாற்றமென் றொன்றில்லை --- கேளுமே!
போவ துறுதி! புதுப்புதுக் காரணங்கள்!
நாவில் தவழ்சொல்லும் நல்லதே -- மேவினோ,
ஆவதோர் குற்றமும் ஆங்கில்லை நோவதேன்?
கூவுக தேவனின் பேர்.

திங்கள், 20 அக்டோபர், 2008

சிறு குடில் அழகு

அழகியதோர் ஏரிதனை அண்டுசிறு குடிலே,
அரக்குநிறக் களிமண்ணால் ஆனதுவே சுவரும்;
தழைகளையே தரித்திட்ட மழைக்கூரை;
தனியேநான் இக்குடிலில் தங்குவதென் ஆசை.

உமையவளின் அழகினையே ஊருக்குக் காட்டி
உள்ளமைதி தருகின்ற குடிலருகில்,
இமைப்போதும் வண்டுகளும் நிறுத்தாமல் முரலும்.
என்கருத்ததைத் தேன்கூடு பகலெல்லாம் கவரும். பக்49

ஏரிதன்னின் நீர்ப்பரப்பில் சீறிவரும் காற்றால்
இக்கரைமேல் எழுந்தூர்ந்து கைதட்டும் அலைகள்!
பாரிலிது போலமைதி எங்குகிட்டும்?
பயக்குமொரு 'நித்' 'திரை'யால் "திரைநிற்றல்" கூடும்.

நாளுக்கொரு வெண்பா

ஒவ்வொரு நாளும் ஒருவெண்பா பாடினையேல்
செவ்விய பாத்திறன் கைவருமே -- கௌவ்விக்
கடிக்கப் பொடியாகும் கெட்டியுண்டை நெல்லும்
இடிக்க இடிக்கவே தூள்.

இந்தப் பாடலை வேறு சொற்களால் முடித்திருந்தேன். அது உணர்வுகள் களத்தில் வெளியிடப்பட்டது. இப்போது நினைவில் உள்ளவாறு பதிப்பிக்கபெறுகிறது.

சனி, 11 அக்டோபர், 2008

வெண்பாக்கள்

தேனூறும் வெண்பா தெளிந்த செழுந்தமிழில்
நானூறு தந்திடுவேன் நன்றாக --- காணூறும்
ஆன்பால் கறந்தே அதனோடு பாகுபருப்
பானயிவை யாவும் கலந்து!!

வருகவந் தென்னோடு வாகாய் வடித்துத்
தருக திரியிதனில் தண்மை --- பெருகிவரும்
நல்ல தமிழ்வெண்பா நாளும் மகிழ்ந்திடுவோம்
வெல்க உலகில் தமிழ்.

வெள்ளி, 10 அக்டோபர், 2008

"நீ"யில் முடிந்த பாடல்கள்.

நீயில் முடிய நிமிர்த்திய பாடல்கள்
நாவில் தவழ நலம்கண்டேன் --- நோவிலாது
ஆக்கி மனங்களை ஆள்கின்ற நற்றமிழ்
தேக்குவம் நீர்நிலை போல்.

மிதுலருக்கும் பாராட்டு

உள்ள உணர்வுகள் ஓரிரு சொற்களில்
குள்ள வடிவாகக் கோலமுடன் -- சொல்லவே
செல்ல உறுப்பினர் சீர்சான்ற நன்மிதுலர்
அல்லரேல் ஆரே பிறர்.

வெள்ளைப் பாட்டில்் உங்கள் கருத்து

உங்கள் கருத்தை ஒருவெள்ளைப் பாட்டினால்
இங்கு பதிக்க எழுந்தோடித் --- தங்குதடை
ஏதுமில்லை வந்தே இனிப்புணா போல்தந்து
மாதறியச் செய்வீர் மறுத்து.

இனிப்புணா - மிட்டாய். வெள்ளைப் பாட்டு = வெண்பா.
மாதறிய = (யான் அறிய).


உரை: மறுத்து = என் கருத்தை மறுத்து; உங்கள் கருத்தை ஒரு வெள்ளைப் பாட்டினால் இங்கு பதிக்கத் தங்குதடை ஏதுமில்லை; எழுந்தோடி வந்தே; இனிப்புணா போல்தந்து = மறுத்து எழுதுவதால் கசப்புணர்வைத் தூண்டாத வண்ணமாய் மிட்டாய்போல்; தந்து; மாதறியச் செய்வீர் என்று தொடர்களை மாற்றிப்போட்டு உரைகொள்க. இதுவே "சொற்றொடர் முறைமாற்று" உரை உத்தியாகும்.

மூடிபோடா மோடியின் வெற்றி.

மூடியொன்றும் போடா முகத்தாராய் மக்கள்முன்
மோடிசென்று பேசி முனைப்போடு --- ஈடில்லா
வெற்றி அடைந்திட்டார்; வீழ்ந்தாரே இந்துஎன்னும்
பற்றில்லார் காணீர் பலர்



இப்பாடல், குசராத் தேர்தலில் நரேந்திர மோடி பெற்ற வெற்றியின் காரணத்தைக் கூறுகிறது. இவ்வெற்றி இந்து சமய ஆர்வத்தின் அடிப்படையிலமைந்தது என்பது குறிப்பு. இ·ஃது இஸ்லாமிய தீவிரப்போக்குக்கு ஒரு மட்டுறுத்தல் எனலாம்.

பாடலும் பொருளுரையும்.: "போனார் திரும்புவதும்"

இந்த எனது வெண்பா பற்றிய குறிப்புரை:

போனார் திரும்புவதும் புண்ணியமே; சொல்மதியைப்
பேணார் திருந்தவரும் கண்ணியமே; -- நாணிலாராம்
பெண்டிரும் மாறிடிலோ பேறுகளில் மேல்கண்ணாற்
கண்டுரைப் பாரே கரி.



போனார் = இறந்து போனார் என்று எண்ணப்படுபவர்;
திரும்புவதும் புண்ணியமே = மீண்டு வந்தாலும்் அது அவருக்கும் அவர்பால் அன்புடையாருக்கும் ஒரு புண்ணியமாம்.
சொல் மதியை = கூறப்படும் நல்ல அறிவுரையை; பேணார் திருந்தவரும் = கேட்டு அதைப் பயன்படுத்திக் கொள்ளாதவர் திருந்திவிட்டால் அதனால் உண்டாவது;
கண்ணியமே = பிறர் உயர்த்திப் போற்றும் நிலையாகும்;
நாணிலாராம் பெண்டிரும் = (பாலியல் தொழில் முதலானவற்றில் ஈடுபடும் ) நாணம் துறந்த பெண்டிரும்;்

மாறிடிலோ = மாறி மறுவாழ்வு பெற்றால்;
பேறுகளில் மேல் = பாக்கியங்களில் மேலானதே; ்கண்ணாற்
கண்ணாற் கண்டுரைப்பாரே கரி. = கண் கண்டபடி கூறுபவரே சாட்சி எனத் தகும்.


எப்பொருளும் கிட்டுமோ?

அப்படி என்றால் அழகுதொரன் றோவிலே
எப்பொருளும் கிட்டுமோ எண்மையாய் -- செப்படி
வித்தைதான் யாதோ விலையேறா மைக்கென்றே
மெத்தமகிழ் வோடுரைப் பீர்.

கட்சியினர் கூறும் திட்டங்கள்..

ொல்வதெலாம் நடந்திட்டால் "சொர்க்க பூமி"
சுவைசேரும் நல்வாழ்வு மக்கட் கெல்லாம்!
கொள்கையிலே பல்வேறு பாட்டைக் காட்டும்
குறையற்ற சொல்லடுக்கில் நெஞ்சை யள்ளும்
ஒல்கரிய பெரும்புகழின் கட்சிக் காரர்
உலகுக்கும் நாட்டுக்கும் சாற்றும் திட்டம்,
மல்குகணீர் ஏழையரின் வாழ்வில் கொஞ்சம்
மாறுதலும் தருமாயின் ஆறு தல்காண்!்

பாக்கிஸ்தான் நிகழ்வு பற்றிய பாடல்

அரிய நிகழ்வு.

மனைவியை இழந்தோர் மண்ணில்
மாபெரும் துயரம் பூண்டு
நினைவினைத் தவிர்க்கொ ணாது
நிலைகெட, மாண்டு போவர்;
அனைவரும் வியக்கும் வண்ணம்
அரசினைக் கைப்பற் றிப்பின்
இணையறு தலைவ னாதல்
இது நிகழ் வரிதே சொல்வேன்!

[ இது பாக்கிஸ்தான் இன்றைய அரசுத்தலைவர் சர்தாரி குறித்த பாடல் ]

மதுவிலக்கு

மதுவிலக்கு

மண்ணுலகின் நாடுகளில்
மது விற்பனை இலா நாடு
எண்ணிடலாம் விரல்விட்டே!
இதுதானே உள்ள நிலை.

விற்பனைக்கு உளதெனினும்
வேண்டிமது அருந்திடுவோர்
சிற்சிலரே பிற இனத்தில்!
செந்தமிழ் நாட்டினிலே :

மதுவினால் உருக்குலைந்தோர்
மா நிதியம் இழந்தவர்கள்,
முதுமைவரை மனைவியரை
மொத்திமொத்தி எடுத்தவர்கள்

பல்லோரோ ஆகையினால்
பயனில்லா மதுவொழிக்க
உள்ளகட்சிக் காரர்கள்,
ஓங்கிடவே குரல்கொடுத்தார்?

தமிழரிடை மட்டுமிந்த
தலைதடு மாற்றமென்ன?
எமக்கது வேண்டாமென்று
ஏன் ஒதுங்க இயலவில்லை!

பிறர்போல் குடிக்காமல்,
ஏனிருக்க முடியவில்லை?
பிறர்போல் அளவருந்த
ஏனிவர்க்கு முடியவில்லை?

அரசியல் பேசுவோனும்
அரசும் காவலரும்
பிறரும் உரைக்காமல்
பிழைக்க அறியாதவனோ?


--------------------

வியாழன், 9 அக்டோபர், 2008

Paradise Lost a small part translated.

ஹோமர் முதலாகிய பெருங்கவிகளின் காப்பியம்போல் அல்லது அக்கவிகளை மிஞ்சிய நிலையில் ஒரு காவியத்தைப் படைக்க வேண்டுமென்பது ஜான் மில்டனின் எண்ணமாயிருந்திருக்கக்கூடும். அதுமட்டுமன்று, ஷேக்ஸ்பியர், விவிலிய நூலின் இலக்கிய நயம் முதலியவற்றை மில்டன் கவிதையின் சில கூறுகளில் விஞ்சிவிட்டார் என்றுதான் இலக்கிய அறிஞர்கள் கருதுகின்றனர். சொர்க்கதத்திலிருந்து வீழ்ந்த பேய்கள் தம் புகழுக்கு மில்டனுக்கு நன்றி நவிலக் கடப்பாடுடையவை (The devil owes everything to Milton) என்று ஷெல்லி சற்று நாணத்துடன் குறிப்பிட்டுள்ளார். காரணம் விவிலியத்தில் இல்லாத சில பேய்த் திறமைகளை மில்டன் தன் காவியத்தில் அடுக்கி அணிசெய்திருப்பதுதான். மில்டனின் காப்பியத்திற்கு மூலக்கதை தந்தது விவிலிய நூலே ; ஆயினும் மில்டனின் பெருங்கற்பனை கதையில் புகுத்தப்பட்டுள்ளது. தன்னையறியாமலே ஓர் உண்மைக் கவியாகிய மில்டன் பேய்களின் கட்சியில் சேர்ந்துவிட்டார் என்றும் ( A true poet of the Devil's party without knowing it" - William Blake) கூறப்பட்டதுண்டு.

மில்டனின் சமயத்தைப் பற்றிய கொள்கைகள் இயல்பு நிலையிலிருந்து சற்று வேறுபட்டவை என்று இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் கருதுவர். ஆன்மீக உள்ளுணர்வுத் திறத்திற்கும் இயற்கை ஆற்றலுக்கும் இடையில் மில்டன் எந்த வேறுபாடும் உள்ளதாக ஒத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இவர் சமயத்தூய்மை கடைப்பிடிப்பவராய் (puritanism) இருந்தார், இவர் பெற்றோரும் இக்கொள்கை உடையோரே.

மில்டன் 1608ல் பிறந்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மிகுந்த முனைப்புடன் கல்வி கற்று, "இளங்கலை"ப் பட்டமும் (BA) மற்றும் "முதுகலை"ப் (MA) பட்டமும் பெற்றார். பல காவியங்களைக் கற்று அவற்றில் வல்லவரானார். "இழந்த மேலுலகம்" தவிர, இன்னும் பல நூல்கள் இயற்றியுள்ளார். இறுதி நாட்களில் கண்பார்வை இழந்தவர். இழந்தபின், 1655ல் "இழந்த மேலுலகம்" பாடினார். "சொர்க்கத்தின் மறுபேறு" (Paradise Regained) பின் பாடப்பெற்ற நூல். 1674ல் கவி மறைந்தார்.

இக்காவியத்தின் கருப்பொருள்: மனிதன் தன் கீழ்ப்படியாமையினால் இணையற்ற வானுறை வாழ்வினை இழந்தான் என்பது. காவியத் தொடக்கத்தில் மில்டன் இறைக்காப்பினை வேண்டுகின்றார்: உரை நடையிலோ கவிதையிலோ இதுவரை காணாத ஓர் ஈடு இணையற்ற காவியத்தைப் புனைய அருளுமாறு அவர் இறைஞ்சுகின்றார். இது ஓர் மரபுசார்ந்த வேண்டுதலேயாகும். நம் முன்னோர் இறையுலகை இழப்பதற்குக் காரணம் தீயின் திறனார்ந்த பாம்பு வடிவெடுத்த தேவப்பேய்தான் என்கிறார். லூசிபர் மற்றும் அவருடன் நின்று இறைவனை எதிர்த்த தேவதூதர்கள் ஆகியோர் நடத்திய போராட்டம் காவியத்தில் சுருக்கமாக வரணிக்கப்படுகின்றது.

இங்கு நான் மொழிபெயர்த்திருப்பது காவியத்தின் முதல் படலத்திலுள்ள சிறு பகுதியையே!! இக்கூறு, "கட்டவிழ் பேய்கள் முனைவு" (The Pandemoniam) என்பதாகும். (pan = அனைத்து, demoniam = பேயகம் எனலாம் ). இச்சொல் இப்போது பெருங்கூச்சலும் குழப்பமுமான நிகழ்வினைக் குறிக்க வழங்கப்படுகின்றது. நரகம் சென்றபின் அவை முனைந்து நின்று ஒரு பெருமன்றக் கட்டிடத்தைக் கட்டின. எங்ஙனம்? அதையே இக்கவிதைப் பகுதி எடுத்துக்கூறுகின்றது. இதை ஒரு வினயமான காவிய முயற்சி எனக் கருதவேண்டாம். ஒரு குழந்தை விளையாட்டு முயற்சி என்றே கொண்டு குறைகளைக் கருதமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்
தருகின்றேன்.

கம்பன்போலும் பெருங்கவிஞன்கூட, கவிதைகளில் வழுக்கள் தோன்றுமாயின், வையகம் ஏசும், மாசு தனக்கு ஏற்படுமே என்று கவலைப்பட்டதாக தன் நூலின் அவையடக்கத்தில் கூறுகின்றான்!! எழுதுகிற எவருக்கும் உள்ள அச்சம் எனக்குமட்டும் இல்லையா என்ன? அதுவும் மில்டன் போல ஒரு பெரும் நல்லிசைப் புலவனின் கவியை தமிழில் கூறுவதென்றால் விளையாட்டல்லவே!! உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டிக்கொள்கின்றேன்.


பாடல்:


மலைசிறிய தாகும·து தொலைவில் இல்லை
மண்டினதீ புகைகொடிய முகடு தன்னில்,
வெளியருகில் பளபளக்கும் பிடர்த்துண் டைப்போல்
வேறிலது கந்தகம்தான் கருக்கொண் டாலே
விளைவிதுவாம்! விரைந்தனதம் சிறகி னோடு
விதவிதமாய் படைப்புலங்கள்! புதுமைத் தொண்டர்
களைபிடுங்க மண்பிளக்கக் கருவி ஏந்தி
கடுகிவரும் காட்சியைப்போல் காண லாகும். (1)


அரண்புகுவார் அகழிக்குள் பதுங்கி நிற்பார்
அருங்கோட்டை தகர்த்திடுவார் அன்ன வேகம்!
பொருட்பூதம் அவர்தம்மை நடத்தும் நாயன்!
பொன்துறக்கம் போய்வீழ்ந்த கொடிய பேயன்.
அருட்பரனின் உலகத்தில் குனிந்து நோக்கி
அங்கிருந்த செல்வங்கள் நயந்த தீயன்!
திரள்தங்கப் புதையல்பொன் னொழுங்கை கண்டு
தெருள்மருவு பேரின்பம் பிறழ்வ தானான். (2)



நிலமகளின் நடுவண்நன்கு மறைவாய் நின்ற
நெடும்புதையல் கொடுங்கரத்தால் துருவித் தேடி
புலம்பெயர்த்துத் திருடிவிட்டார் முன்மாந் தர்தாம்!
பொருட்பூதன் மருட்பேச்சால் குருட்டுக் காட்டால்!
சிலநாளில் குன்றுருவிப் பெரும்புண் தோண்டி
செதுக்கினபொற் செம்பாளம் பதுக்கிக் கொண்டார்.
உலவாதீர் நரகத்தை உயர்வாய் உள்ளி;
உயிரழிக்கும் ஒருநஞ்சு பயிலார் நல்லார். (3)



அழிவனபால் ஆசைகொண்டு புகழ வேண்டாம்
அணிபேபல் கோபுரத்தை எகிப்து மன்னர்
பொழிசெல்வக் கலைதம்மைப் போற்ற வேண்டாம்!
பொய்ப்புகழ்சேர் புன்கலைகள் மாடம் கூடம்
விழைவதுநீர் விடுதல்நேர்! விலக்கித் தேவன்
விட்டுவிட்ட கெட்டொழிந்த பேய்கள் ஒற்றைக்
குழைமணிக்குள் இவைதம்மைக் கூடி நின்று
குறையின்றி நிறைவேற்றி அமைக்க லாகும். (4)



எண்ணிறந்த கைகளுடன் இழுக்க மில்லா
எடுத்ததனை விடுத்திடாத உழைப்பி னாலே
ஒண்ணுதலில் லாததனைப் பண்ணும் ஆற்றல்!
ஒட்டியுள்ள சமவெளிபால் அறைகள் கீழாய்
மண்ணடியில் குழாய்களிலே ஒழுகும் தீயும்
மடைதிறந்து பாயுமங்கே இரண்டாம் கூட்ட
முன்னணியும் பொன்மண்ணை உருக்கிக் கொண்டு
முனைந்துபல வகைப்படுத்திச் சுருட்டிக் கொள்ளும். (5)

தரைப்படிவக் கண்ணறைகள் தம்மில் நின்று
தளர்ந்துருகிக் கொதித்துமுறை உணரா வண்ணம்
உறுப்பிசையின் பேழையினுள் பாய்வ தொக்க
ஒருவீச்சில் காற்றைப்போல் புகுந்து தேங்கி
நிறைப்புறுமே நிரல்நின்ற குழல்கள் உள்ளே;
நேரிசையும் பொருந்திவரும் அவற்றி னின்று !
உரைப்பதிது நடப்பதுவும் அரங்கம் மூன்றில்;
உருகிப்பல வெற்றிடத்துப் பெருகி நிற்கும். (6)


அடுத்து:



ஒரு மூச்சில் கோவிலைப்போல்
பெருமாடக் கட்டிடத்தை
உருவாக்கி அணிசெய்தன:
முனைநான்காய்த் பலதூண்கள்!
வளைந்த பொன்விட்டங்கள்.
நிலைநின்ற கடுந்தூண்கள்!
பூவேலை மச்சின்கீழ்,
நாவுயர்த்தும் சிற்பங்கள்!
கூரையெங்கும் ஆர்பொன்னே!!
இன்குரல்கள் மெல்லிசையோ
டியைந்தோடிக் கலப்பதங்கே.
கெய்ரோவும் பாபிலோனும்
மெய்சிலிர்க்கும் உய்சிறப்பின்
செழிப்பிலும் செல்வத்திலும்
தங்கடவுள் பேலுவுக்கும்
பொங்குசர பீசுக்கும்
அணிவித்துக் கண்டறியா
அழகன்றிப் பிறிதில்லை!!
எகிப்துவும் சிரியாவும்
மிகுபுகழ் தம் மன்னர்க்குப்
போர்த்தி அறியாப்பொன்
ஆர்த்த கவின்குவையாம்!!
குன்றுபெறும் ஏற்றம்போல்
நன்றுயர்ந்த அரசக்குவை!!
இன்றிதற்கே ஈடோ எவை?
கடைதிறந்து புக்குநோக்க
புரைசொர்க்கம்!! விரிநடைகள்,
கோணறியாச் சமன்செய்த
மாணுடையன!! மந்திரத்து
மெல்லழகுப் பதக்கம்போல்
உள்பதிந்து, விளக்கு அணிகள்
உடுக்கள்போல் மினுக்குவன!
மிடுக்குயர்ந்து வெட்டம்தரும்
கருங்காரை, கீலெண்ணெய்
நெடுங்கம்பத் தீவட்டிகள்
வான்வழியாய் வருமொளிபோல்
தாம்நின்று மிக்கொளிர்வன!!
விரைந்தனவாம் பெருங்கூட்டம்
புகுந்ததுமே புகழ்ந்தனசில
சித்திர அழகமைப்பை!!
மெத்தவுமே போற்றினசில
கட்டிடக் கலைஞன் தனை!!
உலகியற்றிய திருவுடையான்
பலகிளைகள் அரசுமுறை
முன்னமைக்கப், பொன்னணைமேல்
தேவர்கள் தேவதைகள்
மேவியே கோலோச்சிய
தாவறியா மேலுலகத்தினில்
வானுயர்ந்த கோட்டைகளை
தானுயர்த்திய கையுடையான்.
கலைஞன் முல்சிபர்தன்
நிலைத்த பெரும்புகழும்
பழங்கிரேக்கம் அச்சோனியம்
அலங்காரம் இந்நாடுகளில்.
சொர்க்கத்தி னின்று வீழ்ந்த
வர்க்கத்தில் இங்குபட்டான்.
வியாழன் விரைந்துவந்து
வெண்பளிங்கு மதில்மேலே
சினங்கொண்டு வீசிவிட்ட
விதங்கண்டால் வியப்புமிகும்!
உச்சியில் நின்ற உடு
எச்சத்தால் வீழ்தல்போல்
நிலைதானும் குலைந்ததனால்
இலுமோசு தீவகத்துள்
கோடையிலே ஒருநாளில்
காலைப்போதில் தொடங்கி
நண்பகல் காறும்பின்
வெண்பனி வீழும்வரை
கதிரவனுடன் சாய்ந்தே
உதிர்ந்து விழுந்துவிட்டான்
பெரும்பிழையின் விளைவெனவே
திறம்படவே இ·துரைப்பர்!!
எதிர்த்தாடிய பேய்க்கூட்டம்
முதுநாளில் முன்வீழ்ந்தது!
இதுபோலும் கோபுரமனை
அடிநாளில் அமருலகில்
முடியாத தொன்றாகுமோ?
இயங்குபொறி எனைத்தொன்றும்
பிணங்கியோட வழிதரவிலை!
அதனால்,
தலைகுப் புறவே நிலையின் இழிந்துதம்
கலைசேர் குழுவுடன் நரகினில் கோபுரம்
மலைவுற யாவரும் மயங்க
நிலையுற நிறுத்தின நெடும்பேய்க் கூட்டமே! (7)


குறிப்புகள்:

பாடல் 1 (வெளி = சமவெளி; plains. பிடர்த்துண்டு = scarf).
பாடல் 2: (பொன் துறக்கம் போய் வீழ்ந்த = பொன்னான சொர்க்கம் கைவிட்டுப் போய் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட. பேயன் - devil. நாயன் = படைத்தலைவன். படைநாயகம். அருட்பரனின் உலகத்தில் = சொர்க்கலோகத்தில். நயந்த = விரும்பிய (கவர்ந்துகொண்ட எனும் பொருட்டு) see usage: piRan manai nayaththal. ஒழுங்கை = சிறியவீதி. பொன்னொழுங்கை = பொன்னால் ஆன ஒழுங்கை. பேரின்பம்: இறைவனுடன் உறையும் சுவர்க்க இன்பம்.)
பாடல் 3: (குருட்டுக் காட்டால்! = குருட்டுத்தனமான எடுத்துக்காட்டால். புண் = தரைக்குப் புண்போன்ற குழி. பொற் செம்பாளம் = ribs of gold. )
படல் 4: (குழைமணிக்குள் = within a soft hour. (the word soft is used here to show 'nothing hard and the job was easily accomplished.'). அணி பேபல் = beautiful Babel tower. எகிப்து மன்னர் பொழிசெல்வக் கலை = எகிப்து மன்னர் தங்கள் செல்வங்களைப் பொழிந்து உருவாக்கிய கட்டிட, இதர வேலைப்பாடுகள் : the works of Memphian kings.)
பாடல் 6: (உறுப்பிசையின்பேழை = organ (a musical instrument). )
பாடல் 7: ஒருமூச்சில் - ஒரே மூச்சில் ( மிக விரைவாக நிறுத்தம், தயக்கம் இன்றி). முனை நான்காய் = square. மச்சின்கீழ் = ceiling. நாவுயர்த்தும் - போற்றும். அரசக்குவை = stately height (heap). அமருலகில் = அமரர் உலகில். in heaven.

புதன், 8 அக்டோபர், 2008

காயப் புலவர்

காயப் புலவர் கடிதில் இவண்வந்தே
ஏயப் பதில்சொல்வார் என்றல்லோ --- வாய்பொத்திக்
கீச்சென் றொலியும் செயலின்றி ஓய்வுற்றேன்்
பேச்சுமூச்சு இல்லாத தேன்?

காலை எழுந்து குளம்பி குடித்ததுமே
வேலையென் றோடிவிட்டா ரோ?

காயப்புலவர் = வெங்காயமென்னும் புனைப்பெயர் கொண்ட ஒரு கவிஞர்.

எல்லாளன் பின்னோரே

எல்லாளன் பின்னோரே ஈழத் தமிழர்
இதுவேநல் வரலாறென் றுள்ள பொழுதில்,
வல்லாளர் சட்டத்தை ஞால முழுதும்
வழங்கியவர் வழுவாதோர் என்றே புகழும்
சொல்லாடும் பிரித்தானி ஆண்டார் குழுவும்
சோர்ந்துற்ற அறிவாலோ ஈழ நிலத்தை,
அல்லாடும் சிங்களவர் கையில் கொடுத்தே
அன்முறைதான் செய்ததற்கு மாற்றும் உளதோ?

தமிழர்கள் எண்ணிக்கை எடுத்தல்.

கொழும்பில் தமிழர்கள் எண்ணிக்கை கொண்டால்
அழும்புசெய் வோரை அடக்கிடலாம் --- விழும்புலிகள்

சேர்ந்தியங்கும் செய்கைபச் சேசொன்னான் இவ்விதம்!்
ஊர்ந்துவரும் இன்னல் உருக்குலையும்--- தேர்ந்தமொழி

இந்தவொரு கட்டளை என்றுகை தட்டினர்!
தந்தேய மக்கட்கோ இந்தவிடர்? --- சொந்தமற?

இந்த இடர்களை ஏற்படுத்தல் கூடாதென்(று)
எந்தப் பெருநாட்டின் தோழரும் --- முந்திவந்து

சொல்லவே இல்லையோ! சோர்வுறுத்தும் சோகமே!

அல்லதைச் செய்யும் அகத்தியமும் -- இல்லையன்றோ
நல்லதைச் செய்தந்த நாட்டை நடத்தினால்?

மெல்லவே மேவும்நாள் எந்நாளோ!---நல்லறிவும?்
செல்லக் கிளி நீயே சொல். ்
(13 lines).


குறிப்புகள்:

அகத்தியம் = அவசியம்.

இது இந்தச் செய்தியைப் பற்றிய பாடல்: Census of Tamils in Colombo.

வியாழன், 2 அக்டோபர், 2008

A bird in agony: நண்பரை இழந்த துன்பம்...

நல்ல கனிமரமே - அதில்
நானொரு சிறுபறவை.
சொல்ல வொணாஇன்பம் - ஒரு
சோர்வின்றி இருக்கையிலே,

அந்தப் பெருமரமும் -- அதன்
அடியொடு தொலைந்திடவே,
நொந்து விழி நீரே -- உகுத்து,
வேதனைக் கடல்வீழ்ந்தேன்.

சுற்றி இருந்தவையாம் -- நல்ல
சுறுசுறுப் புடன்பறக்கும்,
உற்றஇன் நட்பினரை -- நான்
முற்ற இழந்துழந்தேன்.


என்றவற்றைக் காண்பேன்? -- நான்
எங்கு பறந்துசெல்வேன்?
வென்ற மனிதர்களும் -- எனை
விரட்டி அடிக்குமுன்னே!