புதன், 19 அக்டோபர், 2011

எலிப்பாவம்

எலிப்பாவம்

(நகைச்சுவைக் கவிதை)


எலிக்கு உண்ண எதுவும் கிடைக்காதபடி எல்லாம் பத்திரப்படுத்தி வைப்பதாக நண்பர் ஒருவர் எழுதினார். அவருக்கு எழுதிய நகைச்சுவைக் கவிதை

எலிப்பாவம் பொல்லாத பாவம் முகமே
சுளிக்காமல் ஊண் ஊட்டு வீர்

தினமும் வரும் எலி தின்னாமல் போனால்
குணமில்லை கூடிவாழ் வார்க்கு.

கூடிவாழ் வார்க்கு.- for the family

வெள்ளி, 14 அக்டோபர், 2011

மங்கும்நன் மாலையே வா.

பாலை வனம்காண் பகலோன் எமன்நட்போ?
காலை எழுச்சியே காய்கிறதே ! -- நூலாடை
இங்கே பயனில்லை; இன்பகல் துன்பமலை
மங்கும்நன் மாலையே வா.

மணற்குன்று (தொடர்ச்சி)

மணற்குன்று (தொடர்ச்சி)

சென்றிமைகள் சேர்ந்திணைய சீறிப் புயல்மணல்
குன்றமைய வீசிடும் கூடாது -- நின்றிடவும்;
அவ்விடம் நீங்க அசைந்தோடக் காலெங்கே?
எவ்விடமும் தூசுமணல் ஏகு!

வியாழன், 13 அக்டோபர், 2011

பாலை மணற்குன்று

வருண பகவான் வலிமையோ டூதி
பெருமணற் பாலையில் குன்றுகளை மேலெழுப்பி
விந்தைகள் செய்திடுவார் வேறெங்கும் காணாத
செந்தீபோல் வேகும் பகல்.

புதன், 12 அக்டோபர், 2011

pleasures from poems

கடின நடையில் வரு கவிதை -- தமிழ்க்
காதல் உடையவர்க்குத்
தென்றல் தரு பொதிகை!

மெதுவு நிலையில் எழு பாடல் -- எளிமை
மேவிக் கவர்ச்சிதரும்
மேலும் முயற்சி அறும்

எளிய தமிழ்க்குரைகள் வேண்டா - கதலிக்
கனியை உரித்துணவே
இனிமை மிகுந்துவரும்!

கடினக் கவிதை மாதுளையே -- ஓடும்
உடைந்த கத்துத்தரும்
சுளைமி குத்தினிமை.

செவ்வாய், 11 அக்டோபர், 2011

Tamil word for date thEthi

சங்க காலத்திலும் (2000 ஆண்டுகளின் முன்) அதற்கு முன் மிகப் பழங்காலத்திலும் தமிழை எவ்வளவு திருத்தமாக மக்கள் பேசினார்கள் என்று தெரியவில்லை. இதை நாமறிய உதவும் ஆதாரங்கள் நமக்குக் கிடைக்கப்போவதில்லை. இலக்கியங்களில் காணப்படும் தமிழை வைத்து, இதை நாமறிய இயலாது என்பது கூறாமலே புரியும்.

திகைதல் என்ற சொல் பெரிதும் வழக்கில் இல்லை என்று நினைக்கிறேன். "விலை திகையவில்லை" என்று கூறுவதுண்டு.

The price has not been determined or settled என்பது இதன் பொருள்.

நாள், நேரமிவை திகைவதற்குத் (to determine) தேதி, மணிக்கணக்கு முதலியவை உள்ளன.


திகை > திகைதி > திகதி.

தி என்பது விகுதி.

கை என்ற எழுத்து, "க" ஆனது, ஐகாரக் குறுக்கம்,

திகதி > தேதி,

பகுதி > பாதி என்பதுபோன்ற திரிபு.

தேதி என்றால், "இன்ன நாள் என்று நிறுவப்பட்டது" என்பது பொருள்.

honey bee

the smart honey-bee

கொங்கலர்தேர் தேனீ



முன்னிருப்ப தொருநச்சுச் செடியாம்
முனைந்துவரும் தேனீயும் அறிந்தே
எண்ணரிய நறுமணமே பரப்பும்
எழில்மலரைத் தான் நாடி அமரும்!

அஞ்சிறையின் கொங்கலர்தேர் தேனீ
அதுதன்னை ஏமாற்றும் வித்தை
தன் சிறைக்குள் தான்கிடக்கும் மாந்தன்
தாரணியில் கண்டறிந்த துண்டோ?

Election & Minister post

தேர்வும் தேர்தலும் ஒன்றுக்கொன்று
திறமான ஒற்றுமைகள் தெரியக்காட்டும்,
ஆர்வம் கூடிவர ஆடிப்பாடி
அகமகிழ அவைபோலச் சிலவே யுண்டு.

தோற்றவர்க்கு மறுவழியில் அமைச்சர் வேலை.
துரைத்தனத்தார் தரவந்த போதும், "வேண்டாம்!
ஏற்றவனாய் மக்கள் எனைக் கருத வில்லை,
இனி எதற்கோ?" என்று நின்றார் அஃதே வீரம்!

On Sathya Sai

கேட்டபோ தெல்லாம்நீ உதவி செய்தாய்,
கேடகற்றி வாழ்வைநீ விளக்கம் செய்தாய்!
ஊட்டமிகப் பெற்றதெலாம் மறக்கப் போமோ?
ஊரறிய விந்தைபுரிந்் துயர்ந்து நின்றாய்.
நாட்டமுடன் நானுனையே வணங்க, இங்கே
யாமிருக்க அச்சமிலை எனவே கையை
ஆட்டியப யம்தந்தாய் அயர்வு தீர்ந்தேன்
அகிலம்நீ நீங்கினையோ என்றும் உள்ளோய்!

உடற்சட்டை களைந்ததனால் ஓய்வ துண்டோ
உன்பற்றா ளர்தமக்குன்் கடைக்கண் பார்வை?
கடல்வட்டம் நிலவரம்போ டிவை கடந்து
கனிந்தஅருள் நீபொழியத் தடைகள் ஏது?
விடலறியார் உமதுதிரு வடிகள் தம்மை
விழைந்தணுகும் நல்லடியார்; சத்ய சாயி,
உடலொருமைக் குள் அடங்கா ஆன்ம ஞானி
உலகில்நீ வலம்வந்தே ஓங்கி நிற்பாய்.

on corruption

ஊழல் இலா ....

ஊழல் இலா நாடெங்கே? -- வான்
உச்சியிலே பறந்தபடி,
ஆழ்கடல்ம லைகடந்து -- தேடி
அலுத்ததே மிச்சமாச்சு.

பற்றாத காரணத்தால் -- ஊட்டுப்
பெற்றாலும் வேறுசிலர்
வற்றாத வசதியரும் -- வாங்க
வழிகண்டார்; ஏன்? செல்வீர்!

செத்தாலும் வாய்க்கரிசி -- வந்து
சேர்பிணமே எரிசேரும்,
எக்காலும் தீர்வில்லா -- ஓர்
இழிநோய்க்குள் இவ்வுலகம்.

god and earthquake

மலர்கள் குலுங்கினால் -- இங்கு
மனமகிழ் வாக்கும் ஒருநிகழ்வாம்;
மலைகள் குலுங்கினால் -- அஃதிம்
மன்பதை மாய்க்கும் குலைநடுக்கம்.

(வேறு சந்தம்.)

அறிவெழு பூங்காவெனும் -- புகழ்
ஆர்ந்தெழும் யப்பான் நிலத்தினிலே;
செறிவுறு மண்பிளந்தே -- மக்கள்
செத்தனரே துன்பம் உறப்பலரே.


பூவெனத் தந்துவந்தான் -- இறை
பூமியைப் பொன்றாத மக்கள்குலம்,
மேவி மகிழ்வுறத்தான் -- பின்னும்
பூவெனவே எண்ணிக் குலுக்கினனோ?

commentary.
தந்துவந்தான் - தந்து உவந்தான்; தந்து
மகிழ்ந்தான்.
ஆர்ந்தெழும் - நிறைந்து எழும்;
செறிவுறு = solid
யப்பான் = ஜப்பான்.

பூமியைப் பூவாக மக்களிடம் தந்தான் இறைவன். அதனால்தானோ, அப்போதைக்கப்போது பூவைக் குலுக்குவதுபோல, பூமியையும் இறைவன் குலுக்கிவிடுகின்றான், ஏற்படும் சேதங்களை மறந்தானோ?

உலகத்தை "மலர்தலை உலகம்" என்பதுமுண்டு. தலை = இடம

எருமைக்கு விருது

பொறுமைக் கெருமை! பொய்யாமோ என்சொல்?
அருமையில் அஃதொப்ப தில்.

கண்டாலும் தன்வழியே போமெருமை தன்னாலே
உண்டாமோ யாதும் இடர்?

பாரூட்டும் பால்தந்து நல்லெருமை! அவ்விலங்கால்
சீர்பெற்றார் செந்தமிழர் காண்!

கடித்த கொசுவையும் கண்டுகொள்ளா உள்ளத்து
எடுத்த தெருமை விருது.

செயற்பால தவ்வெருமை போற்றல் ஒருவற்
குயற்பால தோரும் கொசு.

Elephants யானை

கோலலம் பூர்நகரின் கொஞ்சமப் பால்செல்ல
கோல இயற்கையே கொஞ்சுசர --- ணாலயத்துள்
யானைகள் பற்பல யாரும் மகிழ்வெய்தக்
காணலாம் காண்பீரே சென்று.

அண்மையில் இம்மலை நாட்டில் அமைத்ததுவாம்;
உண்மை! உயிர்களைக் காத்திடும் --- தண்மையினால்
ஆனைக் கரண்செய்தார் அம்முயற்சி நாம்புகழ்வோம்
கூன்படாக் கொள்கை இது.

ஆனைகளை நாம்காக்க ஆனைமுகன் காக்கநமை!
வான்கதிரைப் போல வளர்ந்திடுக --- மேனிலைக்கு!
பானை வயிறன் பரந்த அருட்கொடையால்
யானும்நம் பாவலரோ டிங்கு.

BIRTH DEFECTS

உடற்குறை ஏதுமின்றி -- இந்த
உலகிற் பிறந்துவிட்டால்,
தவக்குறை இல்லையென்று - நாம்
தனிமகிழ் வெய்திடலாம்.

வலிப்பு வளிமுடக்கு --இவை
வந்து துயர்படுவார் -- தமை
நினைப்பினும் நெஞ்சுமிக --ஒரு
நிகரிலாத் துன்புறுமே

பிறவியில் ஓர்சிறுவன் -- அவன்
பிற்பட இக்குறைகள்,
இறைவன் நிறுவினனோ --அதற்கும்
யாதுரை காரணமோ?

வளி - வாயு. முடக்கு - கைகால் முடக்கு.

பாவம் கழுதை

பாவம் கழுதை பளுதூக்கும் நோவதனால்
ஆவ தறியாமல் கீழ்விழுந்து --- கேவிப்
புரண்டெழுந்து கத்துமோ போம்கதி எண்ணி
மிரண்டநிலை மீளுமோ தான்.

This was a response to Mr Chinnakannan wrote:

Quote Originally Posted by chinnakkannan View Post
உடல் வலி தான்.. குப்பை கூளங்களில் கழுதை புரண்டுபார்த்ததில்லை..வைகை ஆற்று மணல் வெளியில் புரண்டு பார்த்திருக்கிறேன்.. கூடவே இலவசமாய் இனிய கானமும் இசைக்கும்..!






.

திங்கள், 10 அக்டோபர், 2011

amiz > tamiz

குமரிமுனைக்கும் தெற்கே குமரிநாடு இருந்ததாகத் தமிழ் நூல்கள் தெரிவிக்கின்றன. சமஸ்கிருத நூல்களிலும் புராண நூல்களிலும் குறிப்புகள் உள்ளன என்பர். இது குமரி(க்) கண்டம் என்றும் அறியப்படுகின்றது.இதை மறுப்பவர்கள் சிலரும் உள்ளனர்.

ஆய்வாளர் சிலர், தமிழ் என்ற மொழிப்பெயர், அமிழ் என்ற சொல்லினின்றும் பிறந்ததாகக் கூறுகின்றனர். குமரி அமிழ்ந்து போயிற்றன்றோ? அமிழ்ந்துபோன நாட்டவரின் மொழி என்ற பொருளில் இங்ஙனம் அமைந்ததாம். தமிழ் என்ற சொல் தோற்றம் பற்றி வேறு கருத்துக்களும் உள்ளன.

உயிர்முதலாகிய சொற்கள் உய்ர்மெய் முதலாகத் திரிதலை முன் இடுகைகளீல் எடுத்துக்காட்டி யுள்ளேன். Pl see http://bishyamala.wordpress.com/2011/10/11/

அமிழ் என்பதுதான் தமிழ் என்று திரிந்து மொழிப்பெயர் அமைந்தது என்பதை ஏற்றுக்கொள்ள இயலுமாயின், இத்திரிபையும், மேற்குறித்த சொல்லமைப்பு விதியின்பால் அடக்கிவிடலாம்.

தெலுங்கு என்ற மொழிப்பெயர் அமைந்ததற்கு பலவாறு ஆய்வாளர் கூறுவதுபோல, தமிழுக்கும் பல கூறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 23 ஜூலை, 2011

புறநானூறு: மோசியாரின் அழகிய பாடல்

.

மெல்லியல் விறலி நல்லிசை செவியிற்
கேட்பின் அல்லது காண்பறி யலையே
காண்டல் வேண்டினை யாயின் மாண்ட நின்
விரைவளர் கூந்தல் வரை வளி உளரக்
கலவ மஞ்ஞையிற் காண்வர இயலி
மாரி அன்ன வண்மைத்
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே. புறநானூறு:133

வள்ளல்களில் ஒருவனாகிய புகழ் மிக்க ஆய் அண்டிரனை சங்கப் புலவர் முடமோசியார் பாடியது. பாடாண் திணை.
விறலியாற்றுப்படை.

விறலியே! ஆய் அண்டிரனின் வள்ளன்மைப் புகழ் அவன் ஆள்கின்ற மலையையும் கடந்து, யாங்கணும் வீசிக்கொண்டிருக்கிறதே! நீ அவ் வள்ளலின் புகழை மட்டுமே கேட்டிருக்கிறாய். அவனை நேரில் பார்த்ததில்லைதானே.... காணவேண்டுமெனில் உன் கூந்தல் அவன் மலையில் வீசும் மாருதத்தினால் மயிற்பீலி போலும் அலைவுறும்படியாக நடந்துசென்று அவனைக்காண்க!
.அவன் மழைபோலும் வாரி வழங்குபவன். தேர்(பல) உடையவன். செல்வாயாக.

11.

சங்கப் புலவர் மோசியார், பெண்ணியம் போற்றுபவர், பெண்டிருக்கு மதிப்பளிப்பவர் என்பது அவர் பாடலில் நன்கு தெரிகிறது. வெறுமனே "விறலியே" என்னாமல் "மெல்லியல் விறலி(யே) " என்று விளிக்கின்றார். மெல்லியல், மெல்லியலார் என்பது இவ் விருபத்தொன்றாம் நூற்றாண்டின் சொற்புழக்கம் (பதப்பிரயோகம்) என்று நீங்கள் நினைத்திருந்தால், அந்தக் கருத்தை இப்போது மாற்றிக்கொண்டுவிடுங்கள். சங்க
காலத்திலேயே அந்தச் சொல்லாட்சி இருந்தது. வேறு ஓர் ஆண்மகனை ஆற்றுப்படுத்தாமல் ஒரு பெண்ணை ஆற்றுப்படுத்தும் துறையில் பாடலை யமைத்ததும் கருதத்தக்கது.

ஆய் அண்டிரனின் மலையில் இனிய மென்காற்று வீசிக்கொண்டிருக்கும். அதிலே நெடிய முடியுடைய பெண் விரைந்து நடப்பதென்றால் அம் முடி கலைந்து காற்றில் பறக்கும், "அவள் ஒப்பனை கலைந்து, அழகு குறையும்" என்று மோசியார் சொல்லவில்லை. மாறாக, முடி காற்றில் பரப்பிக்கொண்டு பறக்க, கலாப மயில் ஒன்று "மலைத்தென்றலில்" தோகை விரித்து நடந்ததுபோல நீ நடந்து செல் என்று சொல்வதிலிருந்து அவள் செல்லும்போதே அழகு மிகுந்து, காண்பாரும் மகிழ்வெய்தும் காட்சியாகுமென்கின்றார்,

இவ் விறலி, மோசியாருக்கு முன்னமே அறிமுகம் ஆனவளா என்று தெரியவில்லை. விரை வளர் கூந்தல் என்பதை. விரை = வாசனை யுள்ள; வளர் கூந்தல் =' வளர்ந்து கொண்டிருக்கிற கூந்தல்' என்னலாம். அங்ஙனமாயின், முன் சற்று நீட்டம் குறைந்திருந்து, இப்போது வளர்ந்துவிட்ட கூந்தல் என்றும் கொள்ளலாம்; "விரைவளர்" என்று எடுத்துக்கொண்டு, "வாசனை மிகுந்த" என்றும் கொள்்ளலாம். எங்ஙனமாயினும், அம் மலைக்காற்றில் கூந்தலின் நறு்மணம் பரவி மற்றோரை இன்புறுத்தியது என்பதே மோசியார் தரும் சொற்சித்திரம்.

சீவக சிந்தாமணி: கோடிக் கோடும் கூம்புயர் நாவாய்

சீவக சிந்தாமணி

இப்போது சீவக சிந்தாமணிச் செய்யுளொன்றைப் படித்து மனம் மகிழ்வோம்.

கோடிக் கோடும் கூம்புயர் நாவாய் நெடுமாடம்
கோடிப் பட்டிற் கொள்கொடி கூடப் புனைவாரும்
கோடித் தானைக் கொற்றவற் காணபான் இழைமின்னக்
கோடிச் செம்பொற் கொம்பரின் முன் முன்தொழுவாரும்
2321.

இது காட்சி வரணனை ஆகும். மாடம் புனையப்பெறுதலையும் மன்னன் வணங்கப்படுதலையும் வரணிக்கிறது,

மேற்படிப் பாடலின் பொருளைச் சற்று நுணுகி ஆராய்வோம்.

கோள் = கோள்களால் ; திக்கு = திசை அறிந்து; ஓடும் = செலுத்தப்-
படுகின்ற; கூம்புயர் = உயர்ந்த பாய்மரங்களையுடைய; நாவாய் =
மரக்கலம் (கப்பல்); நெடுமாடம் = நெடிய மாடிகளையுடைய கட்டிடங்கள்; கோடிப் பட்டில் = புதிய பட்டுத் துணிகளால்; கொள்கொடி கூடப் புனைவாரும் =கொள்ளும்படியாக கொடிகள் சேரப் புனைவாரும்; கோடித் தானை = எண்ணற்ற மறவர்கள் பணியாற்றும் சேனையை உடைய; கொற்றவற் காண்பான் = மன்னர்பிரானைக் காண்பதற்கு் ; இழை மின்ன = தம் உடைகளும் அவற்றின்மேல் பதித்திருப்பவையும் ஒளிவீச; கோடி = வளைந்து; செம்பொன் கொம்பரின் = செம்பொன்னால் ஆன கொம்பு போலும்; முன் = திருமுன்பு; முன்= முந்திக்கொண்டு; தொழுவாரும் = வணங்குவாரும் என்றவாறு.

குறிப்பு :-

கொள்ளும்படியாக எனில், நிறைவும் அழகும் அவண் அமையும் படியாக என்க. "வாளி கொள்ளுமளவு தண்ணீர் பிடி" என்ற வழக்கு நோக்கின், கொள்ளுதல் - உள் நிறைதல் என்ப தறியலாம். "கொள்கலன்" என்ற சொல்லமைப்பும் காணவும்.

கொம்பர் = கொம்பு, மரக்கொம்பு.



மேல் நாம் பார்த்த சீவக சிந்தாமணிப் பாடலின் பயன்படுத்தப் பட்டுள்ள சொற்களின் பொருள் புரிந்திருக்கும். அதைக்கொண்டு பாடலின் முழுப்பொருளையும் அறிந்துகொள்ளலா-
ம். இன்னும் மலைப்பாக இருந்தால், சிறு விளக்கத்தின் மூலம் அதைச் சரிசெய்து கொள்ளலாமே.

முதல்வரியில் உள்ள "கோடிக் கோடும்" என்பதை கோள்+திக்கு +ஓடும் என்று பிரிக்க வேண்டும். பிரித்து, "கோள்களினால் திசையறிந்து மாலுமி செலுத்தும்" என்று விரிக்கவேண்டும். கூம்பு என்றது பாய்கட்டிய மரத்தை. இடையில் விரிந்து மேல்
நுனியில் குறுகிக் கூராக நிற்கின்ற காரணத்தால். உயரம் உடையதனால் "கூம்புயர்" எனப்பட்டது. அத்தகைய நாவாயில் ( மரக்கலத்தில்) கொணரப்பட்ட பட்டுத் துணிகளைப்பற்றி-
ய செய்தி, அடுத்த வரியில் தொடர்கிறது. பட்டுத் துணிகளால் சிறு அலங்காரக் கொடிகள் செய்யப்பட்டு, அவற்றால் நெடிய மாடம் புனைவு (அழகு ) செய்யப்படுகிறது. புதுப் பட்டினை நாவயில் கொணர்ந்து நெடிய மாடத்தை அழகு செய்கின்றனர். இப்போது முதலிரண்டு வரிகளும் மிகவும் தெளிவாகியிருக்கும். இந்த நெடுமாடம் சீவகனின் அரண்மனை
அல்லது அதன் ஒரு பகுதி. இரண்டாம் வரியில் உள்ள "கோடி" புதுத் துணியைக் குறிக்கிறது.

"இன்னா வைகல் வாரா முன்னே ......"

கடல் உடுத்த நிலம் அல்லது கடல் உடுத்த நிலமடந்தை என்பது தமிழ்ப் புலவர்கள் இயற்கையை வியந்து பாடுங்கால் வருந் தொடர்கள்.

சுந்தரனார் தம் பாடலில் " நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" என்று பாடுகின்றார் அல்லரோ?

புறம் ௩௯௩-லும் இந்த அழகிய தொடர் வருகின்றது.

"இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்" என்று தொடங்குகிறது அப்பாடல்.

நிலம்தான் கடலைத் தனக்கு உடைபோல் உடுத்திக் கொண்டுள்ளது என்பார் புலவர்.

பலர் என்று சொல்லவருமிடத்தில் "இடுதிரை மணலிலும் பலர்" என்கிறார். மணலை எண்ண முடியாது அன்றோ?

சாவா மனிதன் எங்குள்ளான்? " வீயாது உடம்போடு நின்ற உயிரும் இல்லை" என்கிறார். அவதார புருடர்களும் மறைந்துவிடுகின்றனர், அந்தோ!

"இன்னா வைகல் வாரா முன்னே
செய் நீ முன்னிய வினையே!"

மரணம் எனும் துன்பம் வருமுன், நன்மையைச் செய்துவிடு என்கிறது புறநானூறு.

அதுவே தமிழன் பண்பாடு ஆகும்.

"363. உடம்பொடு நின்ற உயிரும் இல்லை!
பாடியவர்: ஐயாதிச் சிறுவெண்டேரையார்
திணை: பொதுவியல் துறை: பெருங்காஞ்சி


இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்,
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்
காடுபதி யாகப் போகித், தத்தம்
நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;
அதனால் நீயும் கேண்மதி அத்தை ! வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு.
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
உப்பிலாஅ அவிப் புழுக்கல்
கைக் கொண்டு, பிறக்கு நோக்காது,
இழி பிறப்பினோன் ஈயப் பெற்று,
நிலங்கல னாக, இலங்குபலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.


வைகல் = நாள்.

புறநானூறு "நெடும்பல்லியத்தனார்" பாடல் (64.)

சங்கப் புலவரிற் சிலர், பல்வேறு வாத்தியங்கள் வாசிக்கும் திறமுடையோராக விருந்தனர். அத்தகைய ஒரு புலவரே "நெடும்பல்லியத்தனார்". இயம் என்ற பழந்தமிழ்ச்சொல், வாத்தியத்தைக் குறிப்பது. மணவிழாக்கள் போன்றவற்றில் வாழ்த்தி இசைக்கப்படுவது : வாழ்த்தியம்> வாத்தியம். பல்வேறு இயங்கள் இயக்கப்படின், அது பல்லியம் ஆகும். பல்+ இயம் = பல்லியம். பல்+இயம்+அத்து +அன்+ஆர் = பல்லியத்தனார். அத்து என்பது சாரியை. அன், ஆர் என்பன விகுதிகள்.

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை பல்லியத்தனார் பாடியுள்ளார். வா! நம் கோமான் வழுதியைக் கண்டுவரலாம்....என்று விறலியை அழைக்கின்றது இப்பாடல். தண்ணீரும் கஞ்சியும் உண்டு வாழும் இவ் ஏழை வாழ்க்கைக்கு விடை கொடுத்துவிடுவோம்.
உன் வாத்தியக் கருவிகளை மூட்டை கட்டிக்கொள். வா
என்கிறார் புலவர்.
விறலியின் ஏழ்மை, அவள் அணிந்துள்ள ஒன்றிரண்டு வளையல்களினால் நன்கு புலப்படுகின்றதே! "சில் வளை விறலி!" என்று விளிக்கின்றார் புலவர்.

புற நானூறு: பாடல் 64.

இனிப் பாடலைப் பார்ப்போம்.

"நல்யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கி
செல்லாமோதில் சில்வளை விறலி
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
விசும்புஆடு எருவை பசுந்தடி தடுப்ப
பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமான் கண்டு
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே."

யாழ் சிறந்த இசைக்கருவியாதலின், " நல்யாழ் " எனப்பட்டது. ஆகுளி என்பது ஒரு சிறிய பறை. துயர நிகழ்வுகளின்போது வாசிக்கப்பட்டது போலும். (ஆகுலித்தல் = துயர்ப்படுதல் லி >ளி )
பதலை = ஒரு புறமே வாசிக்கப்படும் ஒரு பெரிய பறை. செல்லாமோ தில் = விழைந்து போகமாட்டாமோ?

களிறு+ கணம் = களிற்றுக்கணம்.களிறு = யானை. கணம் = படைப்பிரிவு, பொருத = போரிட்ட. கண்ணகன் = இடமகன்ற. பறந்தலை - போர்க்களம். விசும்பு = ஆகாயம். ஆடு = பறக்கின்ற. எருவை = பறவை; கழுகுகள். பசுந்தடி = பச்சை ஊன் அல்லது தசை. பகைப்புலம் மரீஇய = பகைவரை வீழ்த்திப்பெருவெற்றி பெற்ற. தகைப் பெருஞ் சிறப்பின் = தக்க உயரிய சிறப்பிற்குரிய. குடுமிக் கோமான் - முதுகுடுமிப் பெருவழுதியை; கண்டு = சென்று சந்தித்து ; நெடுநீர் புற்கை = உண்ணும் நீரும் கஞ்சியும்; நீத்தனம் = இனிமேல் நீக்கிவிடுவோம் ; வரற்கே = வருவதற்கே.

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

Elizabeth Taylor

எட்டுமுறை மணவிலக்கு -- இதற்கே
என்னென்ன காரணமோ?
ஒட்டிவாழும் முனைமுகத்தில் -- எதையும்
வெட்டிப்பேசும் தோரணையோ?

ஆடவனை அடைந்தபின்பே -- அவன்
அசடுவந்து குடைந்ததுவோ?
பாடிவந்த காதல் தேனீ --- வீசும்
பனிக்காற்றில் தெலைந்ததுவோ?

மரணத்தின்பின்தான் சொர்க்கம்
மகிழ்வாய் நீ இனியுறங்கு.

வழக்கு, செய்யுள்

1. எந்த ஆய்வுக்கும் வழக்கு, செய்யுள் ஆகியவற்றை நுண்மா-
ண் நுழைபுலம் கொண்டு நாடுதல் வேண்டும்.

வழக்கு = மக்களிடையே வழங்குவது. (புலவர் வழக்குத்தான் வழக்கு
என்று சிலர் வாதிடுவர். அவர்கள் கிடக்கட்டும்).
செய்யுள் = இலக்கியத்தில் காணப்பெறுவது.
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் எனப்பெறும்.

செந்தமிழ் (திருந்திய தமிழ்) வழங்கும் நிலப்பகுதிகளிலிருந்து இவை
நாடப்பெறுதல் வேண்டும்.

நாம் மக்களிடை வழங்குவது மக்கள் வழக்கு என்றும் செய்யுளில்
வருவது செய்யுள் வழக்கு என்றும் இருகூறாக்கி உணர்ந்து கொள்ளல்
நலமாகும்.

பனம்பாரனார் பாடல் இதை இப்படி விவரிக்கிறது (=விரித்து
வரிகளாக்குகிறது).


தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் 5
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
(தொல். பாயிரம்.)


cheyyuL and vazakku


தொல். சொல்லதிகாரம். 67

இதனையும் கருத்தில் கொள்க:-

செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும்
மெய் பெறக் கிளந்த கிளவி எல்லாம்
பல் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது
சொல் வரைந்து அறிய பிரித்தனர் காட்டல்.

ஞாயிறு, 6 மார்ச், 2011

QUERY AND REPLY : Tamil term for "technology"

Q from a pal:-


Thanks for the explanatory posts but still 100% acceptability is difficult... for example please consider this below:

quote/ நுட்பம் 1. minutenes, fineness; 2. ]subtlety, insight, acuteness; 3. precision, accuracy; 4. an invisible planet; 5. minute point of time; 6. figure of speech which expresses an idea by implication; 7. critical commentary /quote

அவவாறாகின் 'technology' என்பதுடன் 'நுட்பம்' என்பது ஏன் தொடர்பு படுத்தப் படுகிறது...? என்று தெளிவில்லை...

Hope you accept my point of view that: Technology is far ahead from preciseness and accuracy (of information)...



A: பலகைகளை ஒன்றாக இணைத்துப் பெட்டி முதலானவைகளைச் செய்வர். தைத்தல் என்பது இணைத்தலாகும். தைச்சு > தச்சு. > (தச்சுக்கலை.)

இந்தச் சொல், சங்கத மொழியில் "தக்ச". இதுவே கிரேக்கம் வழியாகச் சென்று, "டெக்னோ" என்னும் சொல்லைப் பிறப்பித்துள்ளது என்பர்.

ஆகவே டெக்னோலோஜி (~லாஜி) என்பதை தச்சு நூல் என்று மொழிபெயர்த்தால், பொருட்கேடு விளையும்.

மேலும் டெக்னோலோஜி என்பது தொடக்கத்தில் இலக்கணத்தையே குறித்ததாம். இப்போது அது குறிக்கும் பொருட்கும் அதன் தோற்றப்பொருட்கும் தொடர்பு சிறிதே.

பார்க்கப்போனால், தொழில் நுட்பம் என்னும் சொல் மேலானதென்றே தெரிகிறது. குழம்பிக் கிடக்கும் ஆங்கிலச் சொற்குட்டையோடு நம் சொல்லைக் கொண்டுபோய் இணைத்துப் பார்க்கவேண்டாமென்றே தோன்றுகிறது.

எப்படிப் பார்த்தாலும், டெக்னோலாஜி என்ற சொல்லுக்கான மூலச்சொற்களையும் நம் சமஸ்கிருதமும் தமிழுமே வழங்கியுள்ளன.

தொழில்நுட்பவியல் எனற்பாலது தொழில்நுட்பம் என வழங்கிவருகிறது.

நேரான மொழிபெயர்ப்பானால், (தச்சுத் தொழில் கிடக்கட்டும்) டெக்னோ = கலை, லோஜி = நூல், ஆக : கலைநூல் என்றாகி,பொருள் நிறைவுபெறாதொழியுமன்றோ!

Q:- அவ்வாறாகின் தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் வழங்கப் பட்டு வரும் நவீனப் (பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த) பயன்பாட்டுச் சொற்கள் யாவும் உண்மையில் 'etymology' படி பார்க்கப் போனால் (சற்று) பிழையானதே என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமோ...? அவ்வாறே ஆகின சீர்திருத்தம் தேவை அல்லவா?

EXample: discovery - கண்டுபிடிப்பு, invention - கண்டுபிடிப்பு, finding out - கண்டுபிடிப்பு இம்மூன்றுக்கும் ஒரே பொருள் தான், நடைமுறையில்.... ஆனால் invention தொடர்புடையதான technology என்பது நுட்பவியல் என்றும் industrial technology என்பது தொழில் நுட்பவியல் என்றும் குறிக்கப் படுகின்றன... invention என்பது பொருள் வழக்குப் படி சொன்னால் 'நுட்பவியல் கண்டுபிடிப்பு' என்றே தான் குறிக்கப் பெற வேண்டும் (technological என்பதால்)...

அதுபோலவே, புதிய கண்டுபிடிப்பு சார்ந்த technology - இதற்கு நுட்பவியல் என்று சொன்னாலும் 'நுண்மையான' பார்வையில் பொருளில் பொருத்தம் இல்லை... (modern technology-யில் புலப்படாத நுண்மையான விஷயங்கள் இருந்தாலுமே!!!) கண்டுபிடிப்புவியல் என்றும் கூற முடியாது... வேறு எப்படித்தான் இதனைக் குறிப்பது பொருத்தமான முறையில்? - என்பது கேள்வி. பொறியியல் 'engineering' உடன் தொடர்புடையதால் 'technology'-க்கு கண்டுபிடிப்புப் பொறியியல் என்றோ 'படுபொறியியல்' என்றோ கூறிக் கொள்ளலாம் தானே? technology என்பது usefully applied engineering science என்ற பொருள் கொள்கையின் படி... என் சொல் ஆராய்ச்சியின் நோக்கம் தங்களுக்குப் புரியும் என நம்புகிறேன் இதன் மூலம்... நன்றி...

A: கண்டுபிடிப்பு என்பதே மக்கள் அமைத்த சொல்தானே். உண்மையில் எதையும் பிடிக்கவில்லை. பிடித்தல் என்றால்,
கையால் ஒன்றை எடுத்தல். பிடிப்பு என்ற சொல்லின் நாம் உணரும் பொருள் "கண்டு" என்பதனோடு கொண்டு ஒட்டப்படும் பொழுது,
சற்று மாறிவிடுகிறது. இந்த இரவிக்கை சற்று பிடிப்பாய் இருக்கிறது என்கிறோம். அந்தக் கொள்கையில் அவளுக்கு அவ்வளவு பிடிப்பு
இல்லை என்கிறோம்..... அல்லவா?

டிஸ்கவர் என்றால் மூடியை நீக்குதல் என்று பொருள். அது அடிப்படைப் பொருள். கவர் என்றால் உள்பொதிந்து மூடுவதைக் குறிக்கிறது. டிஸ் எதிர்மறைச் சொல்லாக்க விகுதி.

சொற்களின் தோற்றப்பொருளைவிட, அவற்றின் வழக்கில்வரு பொருளே நாம் பெரும்பாலும் கவனிக்கத்தக்கது. மொழி மூலம் நாம் பிறருக்குணர்த்தும் பொருள் அங்கன்றோ அமைந்துகிடக்கின்றது!்

இங்கிதம்.

இங்கிதம்.

இவ்விடத்து இது பொருத்தம், இது பொருத்தமில்லை, அல்ல-
து இது அழகு, இது அழகன்று என்று அறிந்து செயல்படுதலே
"இங்கிதம்" என்று சொல்லப்படும்.

இங்கு+ இது + அம். = இங்கிதம்.

அம் = அழகு.

"அம்" எனில் "அழகு" என்று பொருளென்பது மேலே விளக்கப்பட்டது.

அழகென்பது வெளியழகை மட்டும் குறிப்பதன்று.

"உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு" என்பதில் அழகு - உடலழகு
தரவல்லது என்பது மட்டுமன்று, உடல் நலமும் தரவல்லது என்பது
பெறப்படும்.

அழகு என்று கூறப்படும்போதும், அது பொருத்தம் என்ற
பொருளும் தருமென்பது காண்க. (This will depend on context)

வழக்கு, செய்யுள் some basic principles

எந்த ஆய்வுக்கும் வழக்கு, செய்யுள் ஆகியவற்றை நுண்மா-
ண் நுழைபுலம் கொண்டு நாடுதல் வேண்டும்.

வழக்கு = மக்களிடையே வழங்குவது. (புலவர் வழக்குத்தான் வழக்கு என்று சிலர் வாதிடுவர். அவர்கள் கிடக்கட்டும்).
செய்யுள் = இலக்கியத்தில் காணப்பெறுவது. " வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்" எனப்பெறும்.

செந்தமிழ் (திருந்திய தமிழ்) வழங்கும் நிலப்பகுதிகளிலிருந்து இவை நாடப்பெறுதல் வேண்டும். நாம், மக்களிடை வழங்குவது மக்கள் வழக்கு என்றும் செய்யுளில் வருவது செய்யுள் வழக்கு என்றும் இருகூறாக்கி உணர்ந்து கொள்ளல் நலமாகும்.

பனம்பாரனார் பாடல் இதை இப்படி விவரிக்கிறது (=விரித்து
வரிகளாக்குகிறது).


தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் 5
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
(தொல். பாயிரம்.)


இதனையும் கருத்தில் கொள்க:-

தொல். சொல்லதிகாரம். 67

செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும்
மெய் பெறக் கிளந்த கிளவி எல்லாம்
பல் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது
சொல் வரைந்து அறிய பிரித்தனர் காட்டல்.



காரணப் பெயர்கள் சில.

இடுகுறிப் பெயர்கள் சில.

காரண இடுகுறிகள் சில.

ஒரு காலத்தில் காரணப் பெயர்களாயிருந்து பின் இடுகுறிகளாய் ஆகிவிட்டனவும் பிறவும் கொள்க. பழங்காலத்திலேயே தமிழிலக்கணமுடையார், இவற்றைக் கூர்ந்துணர்ந்து விளக்கியுள்ளனர்.



குறிப்பீட்டுத் தடுமாற்றம் அல்லது குறிப்பீட்டு ஊசலாட்டமே மொழியின் இயற்கையாகக் காணக்கிடக்கிறது.

-- மேல்நாட்டு மொழியியல் ஆய்வாளர்கள்


பொருட்குப் பொருள்தெரியின் அதுவரம் பின்றே.

(தொல். 874).

பொருளைத் தீர்மானிக்கவியலாத தன்மையே மொழியின் அடிப்படைப் பண்பு. (Derrida, French Philos0pher on linguistics )

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

கொங்கலர்தேர் தேனீ

கொங்கலர்தேர் தேனீ



முன்னிருப்ப தொருநச்சுச் செடியாம்
முனைந்துவரும் தேனீயும் அறிந்தே
எண்ணரிய நறுமணமே பரப்பும்
எழில்மலரைத் தான் நாடி அமரும்!

அஞ்சிறையின் கொங்கலர்தேர் தேனீ
அதுதன்னை ஏமாற்றும் வித்தை
தன் சிறைக்குள் தான்கிடக்கும் மாந்தன்
தாரணியில் கண்டறிந்த துண்டோ?





சிறை = சிறகு; அஞ்சிறை = அழகிய சிறகு.( The other meaning is "prison": "தன் சிறைக்குள் " )
கொங்கு= தேன்.
அலர் = மலர்.
தேர் = தேடிக் கண்டறியும்.
நச்சு = விடம்(விஷம்)

வியாழன், 27 ஜனவரி, 2011

சொல்ல நினைத்ததோ

சொல்ல நினைத்ததோ ஒன்றாம் எழுதுங்கால்
வல்ல பிறிதொன்று தோன்றியதே--வில்லெய்து
தப்பிய பான்மையில் தத்தளிக்க நானாற்றேன்,
செப்பியது சீர்செய்கு வேன்.

Describing a friend's situation.
Presented as though he speaks.


The friend said: வல்ல என்ற சொல் positive அல்லவா. நினைத்ததை விட வல்லதாக ஒன்று தோன்றினால் தத்தளிக்க வேண்டாமே.


Reply: நீங்கள் சொல்வது சரிதான்.....ஆனால், முயலுக்காக அம்பெய்-
த வேடன்முன், செடிமறைவிலிருந்து புலியொன்று தோன்றி-
னால், சமாளிக்க இயலாத அளவுக்குப் பேரிடர் ஆகித்
தத்தளிக்க மாட்டானோ? ஆகவே வேடனின் திறன் இங்கு
கேள்விக்குறி ஆகிவிடுகின்றதன்றோ....
வல்லனவெல்லாம் நல்லனவென்று .... எப்படி......?

"சாய்வில்லா வெண்பா"

சங்கப் புலவரின் சாய்வில்லா வெண்பாவென்
றுங்கள் மனத்திலே உள்ளுணர்வு --- தங்கிற்றேல்
என்னதான் செய்திருப்பீர் சொல்லுவீர் இங்கெவரும்
அன்ன தறியும் படி.

"சங்கப் புலவரின் சாய்வில்லா வெண்பாவென்"


chAyvu 1. slope, declivity, side of a hill; 2. bias, partiality; 3. defect, deficiency; 4. straitened circumstances; 5. going obliquely; turning aside, obliquity, divergency; 6. inclination, bent of mind; 7. death; 8. gradient


கவிதையில் வந்த "சாய்வு" என்ற சொல்லின் பொருள், மேலே தடித்த எழுத்துக்களால் காட்டப்பட்டுள்ளது.

செவ்வாய், 4 ஜனவரி, 2011

மாந்தர் சிறப்பு (kuRaL)

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல;
நாணுடைமை மாந்தர் சிறப்பு.1011 kuRaL.



ஊண் = உணவு; உடை = ஆடை; எச்சம் =( உயிர்களுக்கு) உரிய பிற; உயிர்க்கெல்லாம் = உயிர்களுக்கெல்லாம்; வேறு அல்ல = ஒன்றேதான்;

நாணுடைமை = தகாதவை மனம், மொழி, மெய்களில் தொடர்பு படுதலை எண்ணி வெட்கி விலகுவது;

மாந்தர் = மக்கள் ஆவார்தம் ;

சிறப்பு = வேறுபடுத்திக் காட்டும் உயர்வு ஆகும்.

சில ஓலைச்சுவடிகளில் எச்சம் என்பது அச்சம் என்று உள்ளதாகக் கூறுவர் ஆய்வாளர்

Samy

"சாம் சாம்" என்று சொன்னால், சுமேரிய மொழியில் அது சூரியனைக் குறிக்கும். உலகின் மிகப் பழைய மொழி இதுவென்று மேலை நாட்டு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சூரியன் வணங்கப்படும் பொருளாகப் பண்டை உலகில் இருந்திருக்கிறது.

முதலில் சூரியனாரைக் குறித்துப் பின் மற்ற வணக்கத்திற்குரிய தெய்வங்களையும் குறித்தது என்று தெரிகிறது.

சாம் சாம் > சாம் > சாமி.


Shamash (Akkadian Šamaš "Sun") was the sun god and god of justice in Babylonia and Assyria, corresponding to Sumerian Utu.

Akkadian šamaš "Sun" is cognate to Hebrew שמש šemeš and Arabic شمس šams.


also compare: kami (Japanese).
utu ( Tamil ) : udhayam.

etymology - (linguistics). principles

மொழியியல்:
மொழிகள் பற்றி அறிஞர்தம் கருத்துக்கள் சில, பின்வருமாறு.



குறிப்பீட்டுத் தடுமாற்றம் அல்லது குறிப்பீட்டு ஊசலாட்டமே மொழியின் இயற்கையாகக் காணக்கிடக்கிறது.

-- மேல்நாட்டு மொழியியல் ஆய்வாளர்கள்


Quote:
பொருட்குப் பொருள்தெரியின் அதுவரம் பின்றே.

(தொல். 874).



Quote:
பொருளைத் தீர்மானிக்கவியலாத தன்மையே மொழியின் அடிப்படைப் பண்பு. (Derrida, French Philos0pher on linguistics )
Hi friends,

You are also invited to visit my other blog for more poems and etymology.

http://bishyamala.wordpress.com/2011/01/02/195/.

Have fun....!

anbudan

Sivamala.