புதன், 19 டிசம்பர், 2012

a stab for a kind-hearted act of an old man...


மனமிரங்கித் தண்ணீர் தந்தவர்க்கு.............

மனமிரங்கித் தண்ணீர் தந்தவர்க்குக் கத்திக் குத்தா?



நீர்தருக என்றார்க்கு நீரைத் தந்தார்.
நீர் குடித்து நன்றிசொன்ன நிமையம் அந்தோ
கூர்நெடிய கத்திதனை குறித்து நீட்டிக்
கும்பிகலங் கிடவொருத்தன் குத்தினானே!
பார்வைதடு மாறுகின்ற முதியோர் கண்டு
பாய்ந்தோட முடியாத காலோர் பாங்கில்
நேரிரங்கும் நெஞ்சிலையோ திருட்டுக் கும்பல்
நிகழ்த்தியதை நினைத்தாலே பதைக்கும் நெஞ்சம்.

செய்தி: மலேசிய நண்பன் 8.12.2012.

நிமையம் = நிமிடம்.

வியாழன், 13 டிசம்பர், 2012

இணங்கி நடந்து............


இணங்கி நடந்து வணங்கிக் கிடந்தால்
சுணங்கிச் சுருளாத வாழ்க்கை--- பணங்குறையா
நன்னிலை என்றாலும்  உண்மையே மேற்கொண்டு
தன்னிலை தாழாமை  நன்று.

வெள்ளி, 7 டிசம்பர், 2012

pre- islamic showcase


pre- islamic showcase

இஸ்லாமின் முன்கலை ஈடில் பொருள்கள்
இசைவாகக் காட்சிக்கே இட்டார் --திசைதோறும்
யாவரும் கண்டின் புறுமா றதுகண்டு
நாவரும் பாட நலம்.

http://www.voanews.com/content/saudi...d/1555885.html


இஸ்லாமின் முன்கலை -  இஸ்லாம் மதத்தின் தோற்றத்திற்கு முன்னிருந்த கலைகள்   
நாவரும் பாட நலம்.-  நலம் பாட நா  வரும் 


சனி, 24 நவம்பர், 2012

ரத்து




ரத்து என்ற சொல்  தமிழன்று என்பதே பொதுவான கருத்தாகும். ஆனால் தமிழ் மூலங்களை உடைய சொல் என்பதை முன்பு வேறோர் இணையதளத்தில் காட்டியிருந்தேன். அந்தத் தளம் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.
இப்போது மீண்டும் அந்தச் சொல்லைக் காண்போம்.

இறு > இறுதல்=  முடிதல்.
இறு > இறுதி  என்பதைக் காணவும்.
அறு> அறுதல்  :  அறுந்து போதல்,  அற்றுப்போதல்.
அறு > அற்று  என்பது வினை எச்சம்.
அறு > அற்று என்பது  அத்து என்று பேச்சு வழக்கில் வரும்.
இறு+ அத்து = இறத்து  >  றத்து > ரத்து.
தலை போய் அடையாளம் தெரியாமல் ஆகிவிட்டதால் அது வேற்று மொழிச்சொல் போல் தோன்றுகிறது.
அற்று இறுதல் என்பதே  இறு அத்து  என்று முறைமாறி அமைந்துள்ளது.
இதேபோல்  அமைந்த ரவிக்கை என்ற சொல்லையும் கண்டு தெளிக.
முறை மாறி அமைந்துள்ளதால்,  இதைத் தமிழெனல் ஆகாது என்று இலக்கணியர் கூறலாம்.
சொல்லை ஆய்ந்து எழுதுவது மட்டும்தான் நம் வேலை.  முறைப்படி அமையாவிட்டால் இப்போது நாமென்ன செய்வது?

புதன், 14 நவம்பர், 2012

அன்னாசிப் பழம் < அருநாசிப் பழம்


அன்னாசிப் பழம் என்பதைச் சிலர் அருநாசிப் பழம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். வாத்தியார் சொல்வது  "அன்னாசி".
மக்கள் மொழி: அர்நாசி. மலாய் மொழியில் "நாநாஸ்"

இதிலும் அரு > அன் திரிபைக் கவனிக்கவேண்டும்.

அரிய மூக்குப்போன்ற முட்டுக்களை உடையதும், உள்ளே மூக்குப்போன்றே துளைகளை உடையதும் ஆன இப்பழத்திற்கு இப்பெயர் இட்டவருக்கு நாம் பாராட்டுக்களைத் தெரிவிக்கவேண்டும்.
அவர் யாரென்று நமக்குத் தெரியவில்லை.

அரு+ நாசி  > அருநாசி >அன்னாசி.

நாசி என்பதும் அழகிய சொல். மூக்கு இல்லையானால், நாவினால் ஒழுங்காகப் பேசவராது.  நாவிற்குச் சீர்தருவது  நா+சீர் = நாசீர்? நாசி. நோஸ் என்ற ஆங்கிலம் வரை இதற்கு உறவு உண்டு.

இப்போது அரு(ந்து) > அன்(னம்) தொடர்பான திரிபுகளை @ இன்னொருமுறை கவனித்துக்கொள்ளுங்கள். *

@(சில விரைவில் வெளியிடப்பட்டும் )


தீபாவளியே மீ ண்டும் எப்போது வருகிறாய் ?



come again

வாரநாள் தன்னில் வந்ததீ பாவளிப்பெண்
கூர்ந்துநான் நோக்கக் குசும்பாகப் -- பேர்ந்தோடிக்
கண்ணிற் படாமல் கதவிடுக்கில் போய்மறைய
இன்னுமினி என்றென்றேன் நான்.

தீபாவளியே!


ஓராண்டுக் காலம் உனக்காகக் காத்திருந்து
சீராக உற்றார்நம் நண்பருடன் ---தீராத
நன்மகிழ் வோடுநாம் நண்ணிய தின்பண்டம்
பொன் திகழும் நாள்தந்த தே.




குசும்பு = குறும்பு.




திங்கள், 12 நவம்பர், 2012

தீபாவளி வாழ்த்துக்கள்

நாபா ரிதுபார்க்கும் நன்னீலன் தாள்போற்றித்
தீபா வளிஆர்க்கும் தேஞ்சுவையூண் --- ஆன்பாலும்
உட்கொண் டிமைப்போதும் ஓர்துயரும் தீண்டாமல்
கட்கண் சிறக்கவாழ் வீர்.


நா = நாவு. பாரிதுபார்க்கும் - இவ்வுலகைக் காக்கும்.
நன்னீலன் -விட்ணு ( விஷ்ணு). ஆர்க்கும் - தரும்.
தேஞ்சுவையூண் - இனிய உணவு வகைகள். ஆன் பால் - பசும்பால். கட்கண் - வாழ்வின் எல்லா முனைகளிலும்.

அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள் உரியனவாகுக !  

வியாழன், 11 அக்டோபர், 2012

கண்> கரு > கருணை


வீரம், காதல், இரக்கம் போன்ற  பலவேறு பண்புகளும், கண்களின் வழியாகவே வெளிப்படுவனவாகத்  தமிழன் கருதினான்.
தமிழனின் மொழியில் அமைந்துகிடக்கும் சொற்கள் பலவும் இக்கருத்தையே நன்கு படம்படித்துக் காட்டுகின்றன.

வீரம் குறிக்கும் "தறுகண்மை" என்னும் சொல் கண்ணினையே நிலைக்களனாகக் கொண்டதாகும். காதலுக்கும் கண்ணுக்கும் உள்ளதாக இலக்கியங்கள் கூறும் தொடர்பினை ஈண்டு விரித்துரைக்கத் தேவையில்லை.

இரக்கம், மனநெகிழ்வு முதலிய கண்ணினின்றே வெளிப்படுவன என்று இலக்கியம் கூறும். கண்ணோடுதல், கண்ணோட்டம் என்ற சொற்களை ஆய்ந்து இதனை அறியலாம்.கண்ணோட்டம் என்பது இரக்கம்.

கண் என்பது கரு என்று திரியும் என்பதை நாம் மேலே ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளோம்.

கண்> கரு > கருணை.

முகத்தின் ஏனை உறுப்புகட்கு இல்லாத ஒரு  திறம்  கண்ணுக்கு உண்டு. கண் கலங்கி நீர் சிந்தி அழக்கூடியது. கண்ணிலிருந்து (கண் என்றசொல்லில் இருந்து)  கரு என்பதமைந்து கருணையில் முடிந்தது மிக்கப் பொருத்தமுடையதாகும்.

நெய்(தல்) என்ற சொல்லே "ணை" என்று மாறி சொல்லீறாக நிற்கின்றது. கண் சென்று ஈடுபாடு கொள்ளுதல் என்பது பொருள்.

கண்> கரு > கருநெய் > கருணை.

எண்ணெய என்ற சொல் எண்ணை என்று வழங்குதல் காண்க. தமிழ்ப் புலவன் இதை எண்ணெய் என்றே எழுதவேண்டுமென்றாலும் எண்ணெய் வணிகர் கேளார். திரிபு வழக்கில் உள்ளது.

அங்ஙனமே, கருணை என்ற திரிபையும் புலவர் ஏற்கமாட்டார்.எனினும் சங்கதத்தில் நல்ல  இடப்பிடித்துக்கொண்டு இது மீண்டும் தமிழுக்கு வந்து வழங்குகிறது,


குறிப்பு: கண்+ எய்(தல்) =கண்ணெய் > கருணை எனினும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

சிறு > சின். etc


See last twi posts on etymology and continue:


இந்த இணைமொழிகளையும் ஆராயுங்கள்:


சின்னஞ் சிறிய குடில்

இதில்: சிறு > சின்.

பென்னம்பெரிய மனிதர்

பெரு > பென்.

கன்னங் கரேல் என்றிருப்பான்.

கரு > கன்.

மேலும், கரு என்பது கண் என்றும் திரியும்.

கரு > கருப்பு > கருப்புசாமி.

கரு > கண்> கண்ணன்.

வருணம் என்ற சொல் வண்ணம் என்ற வடிவிலும் இலங்கும்.

வரு<> வண்.

இவற்றுள், ரு, று, ந், ண் வேறுபாடின்றித் திரிந்தன மேற்கண்டவை.

வரு(வான்) > வந்(தான்) (வந்)

இவ்வினை முற்றுகளில் வரு என்பது வந் (=வன்) என்று திரிதல்
காண்க.

These changes support aru(nthu) > an(nam) change.

In Tamil, annam only refers to cooked rice The Sans and Pali annam include fish, meat and also rice.
Is this a substantial difference? If so, the tamil annam is different from vadamozhi annam. 

There are a number of persons in China having the name Nannan. There are also persons having this name in Tamil Nadu, India. We must therefore conclude that the Tamil Nannan is not the same word as the Chinese Nannan or European Nannan for that matter!!

விண்ணப்பம்

(Tto continue reading from the last post. connected issues, )


விண்ணப்பம். விரு > விண்.

விரும்பி மேல்செலுத்துவதே விண்ணப்பம். இதில் உள்ள விண் என்ற சொல்லைக் கவனிப்போம்.


விரு > விண்.

இதுவும் மேலே சொன்ன கரு > கண் என்ற திரிபின்பால் பட்டதே.

விழைந்து முன்னே அல்லது மேல் (அதிகாரிக்கு அல்லது கடவுளுக்கு) ச் சமர்ப்பிக்கப்படுவது,

விண்+அ+பு+அம்.

அ என்பது சாரியை போன்று பகுதியையும் விகுதிகளையும் இணைப்பது.

அனுப்பு என்ற சொல்லும் அகரச் சுட்டுச் சொல்லினின்று எழுந்ததே.

எனவே, இங்கு அகரம் மிகவும் பொருத்தமான இணைப்பெழுத்து ஆகும்.

அன்றி, விடுத்தல் கருத்துடைய விள் என்பதினின்றும் இதற்குப் பொருள் கூறலாமாகையால், இஃது இருபிறப்பி எனலும் கொள்ளத்தக்கதே.

ஒரு நீண்ட கருத்தைச் சுருக்கி இச்சொல் ஆக்கப்பட்டுள்ளதென்பதை அறிகிறோம்.

வியாழன், 4 அக்டோபர், 2012

annaasi


அன்னாசிப் பழம் என்பதைச் சிலர் அருநாசிப் பழம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். வாத்தியார் சொல்வது  "அன்னாசி".
மக்கள் மொழி: அர்நாசி. மலாய் மொழியில் "நாநாஸ்"

இதிலும் அரு > அன் திரிபைக் கவனிக்கவேண்டும்.

அரிய மூக்குப்போன்ற முட்டுக்களை உடையதும், உள்ளே மூக்குப்போன்றே துளைகளை உடையதும் ஆன இப்பழத்திற்கு இப்பெயர் இட்டவருக்கு நாம் பாராட்டுக்களைத் தெரிவிக்கவேண்டும்.
அவர் யாரென்று நமக்குத் தெரியவில்லை.

அரு+ நாசி  > அருநாசி >அன்னாசி.

நாசி என்பதும் அழகிய சொல். மூக்கு இல்லையானால், நாவினால் ஒழுங்காகப் பேசவராது.  நாவிற்குச் சீர்தருவது  நா+சீர் = நாசீ(ர்) >    நாசி. நோஸ் என்ற ஆங்கிலம் வரை இதற்கு உறவு உண்டு. ( சீகாரம் 'சி'  ஆகும். ரகர ஒற்று கெடும்).
இங்கு சீரென்றது ஒலிக்கு உண்டாம் சீரினை. நாசி என்பது திரிசொல்.  இறுதி ரகர ஒற்று பெரும்பாலும் வீழ்வது.  வரு> வார் > வா என்பதில் கடைசி இரண்டு திரிசொற்களைக் காண்க. வாருங்கள் > வாங்க என்பதில் ருகரமும் ளகர ஒற்றும் தொலைந்தன. தமிழ்மொழி இயன்மொழி ஆயினும் திரிசொற்களுக்குப் பெயர்போனது ஆகும். இத்திரிபுகளின் கூட்டமே தனிமொழிகளாய்விட்டன.

இப்போது அரு(ந்து) > அன்(னம்) தொடர்பான திரிபுகளை இன்னொருமுறை கவனித்துக்கொள்ளுங்கள்.

குறிப்பு:

 "நா+சீர் = நாசீர்?" :-
 இது முன் இவ்விடுகையில் ஓரிடத்தில் காணப்பட்ட நிலை. இக்குறி
எம் பழைய முன்வரைவுகளில் இல்லையாதலால் இன்று நீக்கப்பட்டது.
கள்ளப்புகவரால் இக்குறி இடப்பட்டதென்பது தெரிவிக்காமல் புலப்படும்.

8.5.2020 3.03 பகல்.

சனி, 22 செப்டம்பர், 2012

எவ்வாறு ?

Now, on a recent funny criminal case in TN.


ஒருவனிடம் உண்மை விளம்பி -- அவன்
ஒருபோதும் ஏலா உலகமீதில்
பலரிடமும் பொய்யைத் துணிந்து--- அவள்
பகர்ந்தாளோ எவ்வாறு அறிகிலேனே!

மடுத்தசெவி எல்லாம் விழுந்து --அணல்#
மறுத்தோத மாட்டா மெழுகுமாகி
விடுத்தகணைக் கெல்லாம் இலக்காய்---மண
விலங்கேற்றார், எவ்வாறு ? அறிகிலேனே.

மணவினைக்குள் மாட்டினாள் மற்றும்-- வழி
மறுத்திட்ட ஆண்கள் அனைவருக்கும்
நினைவுவரு முன்பாய் அகன்று -- பிற
நிலைகொண்ட தெவ்வாறு? அறிகிலேனே!



Notes

#அணல் -தொண்டை, வாய்

ஏலா - ஏற்காத. உண்மை சொல்கையிலேயே ஆடவர் பலர் ஏற்காமல் வாதம் புரிகிறார்கள். அவள் பெரும்பொய் சொன்னபோது எப்படி நம்பினார்கள் என்பது கருத்து.

மணவிலங்கு - மணவாழ்வு என்னும் கைவிலங்கு (. கைக்கட்டு )

வழி = மணவாழ்க்கை நிலையிலிருந்து அவள் தப்பிச் செல்லும் வழி.
பிற நிலை - மணவாழ்வில் இல்லாத தனியாள் நிலை.

பரிபூரணானந்தமே!



பார்க்குமிடம் எங்குமொரு
நீக்கமற நிறைந்துள்ளாய்
பரிபூரணானந்தமே! --- நானும்
நோக்குமிட ம் ஒவ்வொன்றும்
ஈர்ப்பதெது கவனமதை
மக்கள்சிலர் ஆர்ப்பாட்டமே!

படைத்தவன்நீ உலகமிதை,
துடைத்தழிக்கும் பலமுடையோன்,
கருத்துமிது பொருத்தமன்றோ--- நீயும்
இடைத்துலக்கித் துயர்போக்கி
இவர்களெலாம் அமைதிபெற
ஏன் உய்க்க மறந்துவிட்டாய்!

இவர்களைநீ விலக்கிவிடு
இனிநீயே மேற்கொள்வாய்
இவருதவி உனக்கெதற்கு -- நல்ல
தவம்பிழைத்த நெறிசெல்வார்!
தண்ணருளைப் புறம்வைத்தார்
தலைதடு மாற்றமுற்றார்.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

different views


பற்றாயம் பட்டு மீண்ட
பாழெலி தனக்குக் கண்ணில்
உற்றன அனைத்தும்  ஊறே
உய்த்திடும் பொறியாய்த் தோன்றும்
குற்றமொன்  றறியாக் கொள்கைக்
குரிசிலுக் கெல்லாம் நன்மை
பற்றின வாகும் என்றே
பகர்தலும் வேண்டா மன்றோ!

பற்றாயம் -  எலிப்பொறி, கண்ணில் உற்றன =  கண்ணிற் பட்டவை  ஊறு = துன்பம்  உய்த்தி டும் = ஏற்படுத்தும், 

வியாழன், 6 செப்டம்பர், 2012

தாயவட்கோ ஈடொன் றில்லை,



சென்றுவிட்ட தாயுடலைப் புதைத்தல் இன்றி
சீரூட்டிப் பேழைக்குள் கிடத்தித் தானும்
பொன்றுமட்டும் தன்னறைக்குப் பக்கம் வைத்த
புதல்வனுமே தாய்ப்பற்றுக் கெடுத்துக் காட்டாம்.
இன்றெவரும் செய்தற்கோ  உரிய தன்றே
என்றாலும் நெஞ்சகத்துள் பொங்கும் அன்பாம்
மன்றறியக் காட்டியதோர் மகனே என்போம்
மாநிலத்துத் தாயவட்கோ ஈடொன் றில்லை,

http://news.bbc.co.uk/2/hi/south_asia/4308306.stm
Twenty years with mother's corpse
By Omar Farooq
BBC News, Hyderabad                     

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

multiple marriage scam

Now, on a recent funny criminal case in TN.


ஒருவனிடம் உண்மை விளம்பி -- அவன்
ஒருபோதும் ஏலா உலகமீதில்
பலரிடமும் பொய்யைத் துணிந்து--- அவள்
பகர்ந்தாளோ எவ்வாறு அறிகிலேனே!

மடுத்தசெவி எல்லாம் விழுந்து -- அதை
மறுத்தோத மாட்டா மெழுகுமாகி
விடுத்தகணைக் கெல்லாம் இலக்காய்---மண
விலங்கேற்றார் எவ்வாறு அறிகிலேனே.

மணவினைக்குள் மாட்டினாள் மற்றும்-- வழி
மறுத்திட்ட ஆண்கள் அனைவருக்கும்
நினைவுவரு முன்பாய் அகன்று -- பிற
நிலைகொண்ட தெவ்வாறு அறிகிலேனே!


#அணல் -தொண்டை, வாய்.  அதை : இங்கு " அணல்  " என்ற சொல்லைப் பயன்படுத்தி வேறிடத்தில் எழுதியுள்ளேன் 

ஏலா - ஏற்காத. உண்மை சொல்கையிலேயே ஆடவர் பலர் ஏற்காமல் வாதம் புரிகிறார்கள். அவள் பெரும்பொய் சொன்னபோது எப்படி நம்பினார்கள் என்பது கருத்து.

மணவிலங்கு - மணவாழ்வு என்னும் கைவிலங்கு (. கைக்கட்டு )

வழி = மணவாழ்க்கை நிலையிலிருந்து அவள் தப்பிச் செல்லும் வழி.
பிற நிலை - மணவாழ்வில் இல்லாத தனியாள் நிலை.

திங்கள், 3 செப்டம்பர், 2012

கண்ணுக்குள் காதலி


கண்ணுக்குள் காதலி சென்றமர்தல் கற்பனையே
பெண்ணுக்குப் பேதலிப்பு ஏற்படுத்த -- மண்ணுலகில்
ஆடவர்செய் தந்திரம் அஃதென்றே நான்சொல்வேன்
ஓடுவளோ பெண்ணவர்கள் பின்.


code:14 - 14 - 13 - 9

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

உட்டணம் (உஷ்ணம்)


உஷ்ணம் என்ற சொல்.

உட்டணம்

தணல் >  தணம்

ஒப்பு நோக்குக: திறல் > திறம்.

இவற்றுள் இறுதி லகர ஒற்று மகர ஒற்றாக மாற்றுரு அடைந்தது.

உள்+ தணல்  =  உட்டணல் > உட்டணம் >


உட்டணம் >  உட்ணம்> உஷ்ணம்.



---------------------------------------------------------------------------------------------------
அந்தணர்  என்ற  சொல்லில் நடுவிலுள்ள பதம் "தணல் " என்பதே என்று திருக்குறள்   புதிய உரையாசிரியர் டாக்டர் செல்லையா கருதுகிறார்.   அவர் ஆய்வில் "தணல்"  > >தணம்  > தணர்  அல்லது தணலர் >   தணர் என்று வந்தது என்பார் போலும்.  ஒப்பு நோக்குக   

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

கலைவாணர் விளக்க வரிகள்



பாரதியாரின் கவிதை பற்றி எடுத்தியம்ப தனித் திரிகள்  உண்டு. ஆனாலும் பலசுவைக் கவிதைகளையும் நாம் நுகர்ந்து வருவதனால், அவருடைய கவிதை ஒன்றிரண்டை அவ்வப்போது தொட்டிணைத்துக்கொள்வதில் தவறொன்றும் இல்லையென்றே கருதுகின்றேன்.

நாம் இன்று படித்தின்புறும் அவர் வரிகள் இவை:

நீலத் திரைக்கடல் ஓரத்திலே -- நின்று
நித்தம்  தவம்செய்த குமரிஎல்லை -- வட
மாலவன் குன்றம் இவற்றிடையே -- புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு.

இந்த வரிகளுக்கு நகைச்சுவை அரசு என்று பெரும்புகழ் வாய்ந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் வரைந்திருந்த சில விளக்க வரிகள்,இலக்கிய நோட்டம் (திறனாய்வு )  என்னும் தகுதிக்கு நன்கு ஏற்புடையன என்னலாம்.

அவ்வரிகள் இவை:

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் யோகசாலிகள்தான். தமிழென்றாலே இனிமை என்பது பொருள். தமிழில் சில வார்த்தைகளுக்கு இரும்பைக் காந்தம் இழுக்கும் தன்மைபோன்ற சக்தியுண்டு. இது கற்பனையல்ல. கடைந்தெடுத்த அனுபவ உண்மை.

"மண்டி" என்ற சாதாரண வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வார்த்தையில் விசேஷமாக ஒரு சக்தியோ கவர்ச்சியோ இருப்பதாகத் தோன்ற வில்லை அல்லவா? சிறந்த கலைஞர்கள் இவ்வார்த்தையைக் கையாண்டு எத்தனை ஆச்சர்யகரமான அற்புத சக்தியை ஏற்படுத்தி விடுகிறார்களென்பதைப் பாருங்கள்.

பாரதியார் பாடலொன்றில் ("புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு" {என்கிறார் } )1...... புகழ் மண்டிக் கிடக்கிறதாம். புகழானது கொழித்து, கொப்பளித்து, உறைந்து, ஊறித் ததும்பி எங்கும் பரந்து நிரம்பிக் கிடக்கிறதாம். இந்த ஒரு வார்த்தை கவிதையில் ஜீவகளையைப் படம்பிடித்துப் படிப்போர் கருத்தைப் பரவசமாக்குகிறது. இன்னும் பல உதாரணங்கள் காட்டலாம்.

என். எஸ். கிருஷ்ணன். கட்டுரை. ஜூன் 1952,


1 பிறை க்கோட்டுக்குள் உள்ளவை என் இணைப்புச் சொற்கள். 

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

அதிகாரி ஊழல்!


கீழுள்ள அதிகாரி ஊழல் செய்து
கிளறியது மேலெழவே வழியில் லாமல்
வாழில்லம் வளம்பண்ணிச் செல்வான் ஆயின்
வாய்மைதனை வேண்டுவதும்  வெற்றுப் பேச்சாம்!
மேலுள்ள மந்திரியின் கண்ணில் பட்டு
மிதிபட்டு மடியாத கலையில் வல்லான்
நூலுள்ளும் நீதிக்கும்  பிறழ்ச்சி தந்து
நுனிக்கொம்பில் கொடிகட்டிப் பறக்கக் கண்டீர்.


மந்திரியும் எதை எதைத்தான் பார்த்துக் கொள்வார்
மாண்புமிக்க அவருக்கும் தோன்றா வண்ணம்
தந்திரரும் கையூட்டில் ஊன்றிப் பெற்றால்
மந்திரியின் தலைக்கன்றோ போகும் கல்லும்?
மந்திரியும் என்செய்வார்!மக்கள் சேர்ந்து
மாற்றிடலாம் மந்திரியை!ஊழல் செய்த
தந்திரியை மாற்றிவிடத் தக்க பாதை
தந்திடுமோ அமைப்பாட்சிப்  போக்குத் தானே


நூல் உள்ளும் =  சட்ட நூல்களின் படி செல்கின்ற.
உள்ளுதல் = எண்ணுதல்,


தந்திரர் என்றது  தந்திரம் உடைய ஊழல் பேர்வழிகளை. தந்திரி என்றும் வரும்.


மந்திரிக்குத்  தேர்தல் வருகிறது  கீழதிகாரிக்குத்  தேர்தல்  இல்லையே  என்றபடி




திங்கள், 20 ஆகஸ்ட், 2012

பிழைப்புக்கு வேட்டுவைத்தால்,,,,,,,


on destruction of the natural habitat of some animals and consequences 

காட்டை அழித்துவிட்டார் -- அந்தக்
காட்டுக் குரங்குகள் வீட்டின் மருங்கிலே
கூட்டமாய் வந்தனவே -- அவை
கூரைக்குக் கூரை இருந்துகொண்டே வீட்டின்
ஓட்டை அகற்றினவே -- கீழே
ஒதுங்கக் கிடந்தது குப்பைப் பெருந்தொட்டி
ஆட்டிக் கவிழ்த்தனவே -- அதை
அள்ளி இடுதற்கே உள்ளாரோ யாருமே!

இருப்பிடம் போனதென்று ---அதில்
ஏற்பட்ட கோபத்தின் பாற்பட்டிவ் வண்ணமாய்
தெருக்களில் கூரைகளில் -- ஏறித்
திரண்டதோர் சேட்டைகள் செய்தனவோ இவை!
பொறுப்புடன் செய்தக்கதோ --பிடித்துப்
போக்கிட வேண்டுமே காட்சிசேர் காப்பகம்!
பிழைப்புக்கு வேட்டுவைத்தால் --வந்த
பீதியில் போரிடல் யார்க்கும் இயல்பன்றோ!

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

மாதமோர் வெண்பா

மாதமோர் வெண்பா மதிபெறப் பாடினும்
சாதனை யாகிடும் சின்னாளில் -- யாதொன்றும்
தீதில்லை; தென்மொழியின் தேனைப் பருகிடத்
தோதில்லை என்பதோ பொய்.


வெற்றுத் தலையொடு நீச்சல் அடித்தேனா!
கற்றார் பொறுத்தல் கடன்.



வெற்றுத்தலை - சிந்தனை அற்ற தலை(மண்டை)
நீச்சல் அடித்தல் - வெண்பா எழுத முயலுதலைக் குறிப்பது.
பிழை இருந்தால் பெரியோர் பொறுக்க வேண்டும் என்றபடி.
பிழை ஏதும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.


உரைநடையில் மாதமொரு என்று வரற்பாலது, கவிதையில் மாதமோர் என்று மெய்முதலாகிய வருமொழியின்முன் வரும்.  வ்+எ = வெ.

நடிகைகளைக் கைவிட்ட இரசிகர்கள்

பாவம், சில பரிசு நடிகைகளைக் கூட, இப்போது காணமுடியவில்லை. அத்தனை பட்டங்களையும் கொடுத்துப் பாராட்டுக்களையும் கொடுத்துவிட்டு,இந்த இரசிகர்கள் எப்படி ஒரேயடியாக கைவிட்டுவிடுகிறார்களோ

மணந்தால் சிறப்பினை இழப்பவள் நடிகை
மணவாது சிறப்பினை இழப்பவள் குடிப்பெண்.


நல்ல குடியிற் பிறந்தால் காலாகாலத்தில் கல்யாணம்செய்துகொண்டாலே சிறப்பாம், Why such trends occur?........







Reserved

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

செல்வத்துப் பயனே....


தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய  ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே.

புறநானூறு 189

இது, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
பாடியது.

இதன் பொருளை  அறிந்துகொள்ள உள்ளோம். ஈதல்  (தருமம்) செய்தல்பற்றிய பாடலென்பது படிக்கும்போதே அறிந்துகொள்ளலாம்,

தெண்கடல் வளாகம் = கடலால் சூழப்பெற்ற இவ்வுலகின்  பல நிலப்பகுதிகள்,

பொதுமை இன்றி =பிறருக்கு உரிமையுடையதல்ல, எமது தனியுரிமையே என்று,

வெண்குடை  நிழற்றிய     = அரசு ஓச்சிய,

ஒருமை யோர்க்கும் =  பேரரசர்களுக்கும்,

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் = இரவிலும் பகலிலும் உறங்காமல்,

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் = குதிரையைப்
பார்த்துக்கொள்ளும் கல்வியறிவில்லாத ஒருவனுக்கும்,

உண்பது நாழி =  உண்பதற்கு வேண்டியது, ஒரு நாழியே;

  உடுப்பவை இரண்டே = உடுக்க வேண்டியது மேலாடையும் இடுப்புத்  துணியும் ஆகிய இரண்டே;

பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே = பிற எல்லாமும்
எல்லார்க்கும் சமமே;

செல்வத்துப் பயனே ஈதல் =  சேர்த்தவற்றின் பயன் யாதென்றால், தருமம் செய்வதே;

துய்ப்பேம் எனினே தப்புந பலவே.= எல்லாம் யாமே அனுபவிப்போம் என்றால், இப்படி எண்ணி பிழைபட்டு நினைத்தது நடவாமல்போனவர்கள்,  துயர்வலையில் வீழ்ந்து கழிந்தோர் பலராவர்  என்றபடி.

ஈதல், இசைபட வாழ்தல், அதுவல்லது ஊதியமில்லை உயிர்க்கு என்றார் பெருநாவலரும்.



ஒரு நாழி என்பது, 8 உழக்கு ஆகிய முழுமையில் நாலில் ஒரு பகுதி, எனவே இரண்டு உழக்கு அளவு என்பர்.   நால் > நாழி என்று சொல்லமைந்தது என்
று தெளியலாம். தமில் > தமிழ் என்று அமைந்தது என்று கமில் சுவலபெல்லும் தேவநேயப் பாவாணரும் கூறியுள்ளதனால், நால் > நாழி என்பது பொருத்தம் என்று தோன்றுகிறது. ல்>ழ் திரிபு.


 நடு நாள்:   ஒரு பகலோன் உதயத்திற்கும் அதற்கடுத்த உதயத்திற்கும்  நடுவானதால், நடு நாள் - நள்ளிரவையும் குறிக்கும்.  யாமம் - ஆழ்ந்த  உறக்கத்தில் உயிர்களைப் பிணிக்கும் நேரம். யாத்தல் -கட்டுதல். யாமம் : உறக்கம் கட்டும் நேரம்.
நடு நாள் யாமம் - நள்ளிரவு யாமம் என்றறிக.இக்காலத்தில் இவ்வழக்கு இல்லை.

"ஒருமையோர்" -   பன்னாடுகளையும் பிடித்து ஒரு குடைக்கீழ் ஆளும் பேரரசரை "ஒருமையோர்" என்றது இனிய சொல்லாட்சி. Emperors, empire builders.

will continue in the next post


வியாழன், 2 ஆகஸ்ட், 2012

பல்சுவைத் துணுக்குகள்


இவை சென்ற ஆண்டில் எழுதப்பட்டவை. இங்கு மறு வெளியீடு காண்கின்றன

Date of composition is given as well.

(ஒரு கதை சொல்லத் தொடங்கிய இணையக் கவி யொருவருக்கு, அவர் சற்று விரைவு குறைந்தபோது  சிவமாலா சொல்லிய குறள்:- )

எல்லாம் அழகென் றெடுத்தகதை செல்லுகமேல்!
உள்ளாரே கேட்கப் பலர்!

18th September 2011, 08:59 PM

நடிகை தேவிகா ஓவியப் பாவை,  நடிகை  காஞ்சனா தீஞ்சுவை என்றவர்க்கு யாம் சொல்லியது :


மழுக்கட்டில் தந்த மயக்கிதுவோ நும்கண்
விழக்கட் டழகியர்தம் வேடு.

மஸ்கட் என்னும் நகரை "மழுக்கட்டு" என்று திரிபு செய்துள்ளேன் .

(மஸ்கட்டில் உள்ள கட்டழகியர் முக்காடிட்டு மறைத்துக் கொள்வதால், அந்தக் குழப்பத்தில், வேறு சிலரைப் பாராட்டுகிறீர்களோ? )
vEdu = veil.

மழுக்கட்டில் = in the city of Muscat.

திரைக்காதல் ஒப்பதோர் தேம்பாயும் தன்மை
உரைத்திட்ட உங்கள்பா ஒண்மை -- அரைத்திட்ட
சந்தனம்போல் வீசும் சலிக்கா எழுத்து நடை
வந்திணைவோர் வாய்போற்று வார்.


14th September 2011, 04:37 PM

துணுக்குக் கதைத்திறன் தோய்த்துவெண் பாவில்
இணக்கி இன்புறுத்து முறையும் --- இனிக்கிறதே
பாணி தனிச்சுவையில் பளிச்சிடவே மேற்சென்றீர்
ஏணிப் படிகளிலே நீர்.

இன்னும் எழுதி இவணுலவு நேயரைப்
பின்னும் மனமகிழச் செய்வீரே -- பன்னும்
கவிதை சிறக்க; கருத்தாழம் காணும்
நவைதீர் பயணம் செல.

10th September 2011, 02:51 AM

வயதாகிவிட்டது, முன்போல் எழுத இயலவில்லை, என் வயது எட்டு தாண்டி ஒன்பது ஆகிவிட்டது என்றார்க்கு இப்படிப் பதில் எழுதினேன் :  


எட்டு ஒன்பது என்பவை என்னவென்று தெரியவில்லை. ஒரு வேளை  40 அல்லது 50 இருக்கலாம் என்பது என் கணிப்பு:  8 x 5 =40,  9x5=45 !!

எட்டகவை வெண்பா புனைகலை எட்டித்தேன்
சொட்டுவபோல் பாக்கள் சொரிந்திடலாம்!-- எட்டுடன்
ஒட்டினால் ஒன்றினைக் கொட்டிக் கவிமழையால்
முட்டும் சுனாமி முனை.

அருஞ்சொற்பொருள்::  எட்டகவை  = எட்டு வயதில் ' எட்டி  = அடைந்து , எட்டுடன்  ஒட்டினால் ஒன்றினை  -  ஒன்ப,து வயதில்.  புனை  கலை  -  புனையும் அல்லது பாட்டுக்கட்டும் கலை. கவி மழை கொட்டி நில முனையில் சுனாமி போல் வந்து கரையை முட்டும் என்பது பொருள்

12th September 2011, 06:01 PM

வருடம் பலமுன் வருடிவழி வெண்பா
நெருடேதும் இன்றி நிகழ -- மருள்தீரத்
தந்தவர்க்கு நன்றி தருகவே பல்சுவையால்
இந்தநாள் முன்போல் இனி.
8th September 2011, 07:23 AM

வருடம் பலமுன் வருடிவழி -=   பல ஆண்டுகளைக் கடந்தபின் வந்து இங்கு  தோன்றிய  ( வெண்பா )

 இது ஒரு காலமாகிவிட்ட  சிற்பியைப்  பற்றியது :  
இவர் வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர்  சிலை முதலியவை அமைத்தவர்.என்று அறிகிறேன்

செயற்கரிய நற்சிலைகள் செய்தார் அவர்க்குச்
செயற்குரிய நன்றி செயல்.


கலைவடிவம் காட்டி நலமே நயந்தார்,
நிலைபெறுக அன்னார் புகழ்.


உற்றார் உறவினர் உற்றார் துயரவரால்
உற்றிலரோ வற்றாப் புகழ்.


இரங்கும் மனமே இறப்பறிந்து நோவற்க
பிறங்கும் உலகில் புகழ்
8th September 2011, 07:34 AM

உரையாடிய கவிக்குப்  பாராட்டு :


தத்தித் தொடரும் தமிழ்க்கதைப் பாடலில்
குத்திய கூலத்துக் கோதகற்றி --- வைத்தாற்போல்
கொஞ்சமாய்க் கொஞ்சமாய்க் கூர்ந்தெண்ணி நன்கெழுதி
விஞ்சுதன் ஆர்வம் வெளிப்படவே -- அஞ்சா
திடுகின்ற உங்கள் இடரணையாச் செய்கை
எழுகின்ற வெண்ணிலவு போல வளர்க
ஒழுகுசீ ரோடே உடன்

28th September 2011, 10:01 PM

கூ ல ம்  -  தானியம் ;   கோதகற்றி = உமி  அகற்றி .

ஞாயிறு, 29 ஜூலை, 2012



பணிப்பெண் அன்பும் சேவையும்.



an affectionate  maid....


என்கால் தன்மடி மீதுவைத்தாள்
இனிதாய்த் தடவி வேதுவைத்தாள்
தன்கால் மொத்தடி பட்டதுபோல்
தான்மனக் கவலை உற்றுவிட்டாள்.

சின்னக் கண்ணனும் எனைத்தேற்ற
சேர்ந்தே பெண்ணவள் எனைப்போற்ற.
அன்னை மூவராய் ஆனதினால்
அதைத்த நோவதும் போனதன்றோ!

அன்பினர் யாரும் எட்டநின்றால்
ஆன வலியெலாம் கிட்டவந்து
பண்பில் எருமைபோல் முட்டநிற்கும்
அன்பினர் குறுகிடில் விட்டகலும்

இரவில் வலியும் ஏறிடுமோ
என்பால் தோழியும் கூறிடுவாள்
வருவது வரட்டும் என்செய்வது
வைத்தியம் என்பது பின்செய்வது


வேது = இளஞ்சூடு கொடுத்தல்.
மொத்தடி - மொத்து அடி.
அதைத்த= வீக்கம் ஏற்பட்ட.
நோவு = வலி. நோவு அதும் = நோவு அதுவும்
கிட்ட - பக்கத்தில். அருகில்.
பண்பில் - பண்பு இல் - பண்பு இல்லாத
அன்பினர் - அன்பு உடையோர்

குறுகிடில் -  நெருங்கி வந்தால் 

திங்கள், 23 ஜூலை, 2012

பாஷாணம்

நஞ்சு அல்லது உண்ணக் கொல்லும் பொருள்  பலவகை, சில பச்சையாகவே உண்டு  சாவினை  வரவழைத்துக் கொள்ளும்  திறம்  தருவதாம்  இதற்குரிய சொல் :

பச்சைநஞ்சு என்பதாம்,

 பச்சைநாவி  என்பது இன்னொரு நஞ்சின்  பெயர் .(aconite)

இனி பாசாணம் (பாஷாணம் ) என்ற சொல் எங்ஙனம்  அமைந்தது.?

ஆணம் என்பது  குழம்பு போல்  காய்ச்சப்படுவது.

பசுமை +  ஆணம் =  ; பாசாணம் .>  பாஷாணம். (இங்கு  முதனிலை நீண்டுள்ளது )

(இன்னோர் எடுத்துக்காட்டு  பசுமை + இலை = பாசிலை.)

அதாவது பச்சிலையை அவித்தெடுத்த நஞ்சு அல்லது  நஞ்சுக் குழம்பு என்பதாம்.

 இப்போது இது பொதுப்பொருளில் வழங்குகிறது,    


  காய்கறிக் குழம்பைப் "பச்சைக் கறி "  என்பது மலையாள வழக்கு.    


பாஷாணம் என்ற சொல் சமஸ்கிருத அகரமுதலியில் காணப்படவில்லை.





Poison என்ற ஆங்கிலச் சொல், ஒரு குடிக்கும் நீர்ப்பொருள் என்று பொருள்படும் சொல்லினின்று வந்ததாகக் கூறுவர்.:-


(potion, ,  a portion of a drink,  a drink in general.


குடிக்கத் தரப்படுவது (=gift)  என்று பொருள்தரும் சொல்லிலிருந்து பல ஐரோப்பிய மொழிகளில் இதற்குச் சொல் அமைந்துள்ளதென்பர்.


தமிழில் " பச்சிலை",  "வேகவைத்தல்" முதலிய கருத்துகளின் அடிப்படையிலேயே சொல் அமைந்துள்ளது.



மலாய்மொழியிலும் பல தமிழ்ச்சொற்கள் வழங்குகின்றன.
பாசாணம் குறிக்கும் ராச்சூண் என்னும் மலாய்ச்சொல்,
அரைச்சுண் (அரைச்சு உண்) என்பதன் திரிபு போல் தோன்றுகிறது. இது மேலும் ஆராய்வதற்குரியது. தற்கொலை செய்துகொள்வோருள், பச்சிலைகளை அரைத்து உண்டு மாண்டவர்கள் பலர்.
Poison  என்ற ஆங்கிலமும் பாசாணம் ("பாyசாண்") என்பதனோடு சற்று ஒலியொற்றுமை உடையதே.
இவற்றைப்பற்றி இங்கு ஏதும் கருத்துக் கூற முற்படவில்லை.






வியாழன், 19 ஜூலை, 2012

சங்கப் புலவர் கொல்லன் அழிசியார் " பனிப்புதல்"



பனிப்புதல் இவர்ந்த பைங்கொடி அவரைத்
கிளிவா யொப்பின் ஒளிவிடு பன்மலர்
வெருக்குப்பல் ருவின் முல்லையொடு கஞல,
வாடை வந்ததன் தலையும்  நோய் பொரக்
கணடிசின் வாழி தோழி தொண்டிரைக்
கடலாழ் கலத்திற் றோன்றி
மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே.


கொல்லன் அழிசியார், குறுந்தொகை  240.

இவ்வழகிய பாடலின் பொருளை  இனி நோக்குவோம்.




அருஞ்சொற்பொருள்


புதல் - புதர். பனிப்புதல்:  பனிப்பொழிவின் காரணமாக மிகக் குளிர்ந்துவிட்ட புதர்  இவர்ந்த = பற்றி  ஏறிய.  பைங்கொடி அவரை = பசுமையான அவரைக் கொடி.  கிளிவாய் ஒப்பின் = கிளியின் அலகினை ஒத்த.
ஒளிவிடு பன்மலர் = ஒளிவிடுகின்ற பல மலர்கள்.
வெருக்குப்பல் = காட்டுப் பூனையின் பல். உருவின் = உருவத்தை ஒத்த.  முல்லை - முல்லைமலர். கஞல = செறிய.  வாடை = வடக்குத் திசையினின்றும்  வீசும் குளிர்காற்று. பொர = வருத்த. *தெண்டிரை = தெண் - திரை, தெளிந்த அலைகள்,
கடல் ஆழ் - கடலில் மூழ்கும்.  கண்டிசின்  =  காண்பாயாக .


இவர்தல்- (கொடியைக் குறித்து இச்சொல் பயன்படும்போது, மிக அடர்த்தியாகவும் உயரமாகவும் அக்கொடி மேலேறுதலை உணர்த்தவல்லது.  கண்டிசின் - காண்பாயாக என்பதாம். இசின் என்ற இடைச்சொல் இப்போது வழக்கில் இல்லை.  சில ஆய்வாளர்கள் இதை கங்கையாற்றுப் பகுதிகளில் வழங்கும் எழுத்துமுறையற்ற ஒரு திராவிட மொழியில் வழங்குவதாகக் கூறி யிருந்தனர். இக்குறிப்பு தற்போது என்னிடமில்லை.


கண்டு+ ஈகு + இன்  = கண்டீகின் > கண்டீசின்  கண்டிசின்   எனத் திரிந்திருக்கலாம் என்பர். ஈதல் = ஈகுதல், தருதல் பொருள்.  காண்க, காண்தருக என்பன  ஒத்த பொருள்  உடையன  எனலாம்., . 



தெள் - தெளி - தெளிவு.





தெள் - தெள்ளு,   தெள்ளுதமிழ்.
தெள் - தெள்ளத் தெளிந்த (மரபுத் தொடர்.)




தெள்+மை = தெண்மை.= தெளிவு.
தெண்மை+ திரை=  தெண் திரை = தெண்டிரை.




மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே என்பது.


தலைவியின் வீட்டிலிருந்து பார்த்தால் காதலர் வதியும் நெடுங்குன்றம் மாலையில் செஞ்சுடரோனின் ஒளிவெள்ளத்தில் அழகு மிளிரநிற்கின்றது.  மணி - அழகு, ஒளி என்பது பொருள். அவர் மணி நெடுங் குன்றம் : காதலர் வாழும் அழகொளி வீசும்  நெடிய  சிறு மலை. அவர் அருகில் இல்லாவிடினும், அவ்வழகிய நெடுங்குன்றையாவது நோக்கிய வண்ணம் தலைவி தன் மனத்தை ஆற்றிக்கொண்டிருந்திருப்பாள் .    .மாலை போகப்போக, இரவின் இருள் கவியக்கவிய, மலை மறைந்துவிடுமே! அவரும் இங்கில்லை. கண்டு மனங்களிக்க அவரது மலையும் மறைந்துவிட்டால், இத்துன்பத்தை எங்ஙனம் தாங்கிக்கொள்வது. இப்போது இரவு வருவதுதான் பெருந்துன்பமாகிவிட்டது. மாலை மாலையாகவேயாவது இருந்துவிடக்கூடாதா?


மாலை  என்பது  ஒளி யும்  இருளும் கலக்கும்  நேரம்  ஆகும் . இங்கு  மாலை  என்றது  இந்த  நேரத்தின்  விளிம்பைக்  குறிக்கிறது ,  மால் > மாலை.


தோழியிடம், "அதோபார், அந்த மலை மாலையில் மறைந்துவிடுமே....!. ""ஒளி குன்றக் குன்ற மலையும் கொஞ்சம் கொஞ்சமாக மறையுமே"  என்கிறாள் 


மாலையில் அவன் வாழும் மலைகூடக் கண்ணுக்கு மறையக்கூடாதா? அத்துணைக் காதலா? புலவர்  அழிசியாரின் பாடல் வெகு"ஜோர்" என்றுதான் சொல்லவேண்டும். என்னே நம் சங்க இலக்கியங்களில் வரும் காதற் சித்திரங்கள்.....





இனிப் பாடலின் முழுப்பொருளையும் காண்போம்.


குளிர்ந்த புதரில் பற்றி ஏறியுயர்ந்த அவரைப் பசுங்கொடி  கிளியலகினை ஒத்த ஒளிவீசுகின்ற பல மலர்களைத் தாங்கி நிற்கிறது.  வடக்கிலிருந்து வாடைக் காற்று  (குளிர்காற்று) வீச,  காட்டுப் பூனையின் பல்போன்ற முல்லை மலர்கள் அவரைப் பூக்களுடன் சென்று செறிகின்றன.   இயற்கையில் இவை இங்ஙனம் ட்கலந்துறவாடவே, எதிர் தோன்றும் மலையில் வாழும் காதலன் அருகில் இல்லாமையால், தலைவியைப் பிரிவுத்துயர் வருத்துகிறது.  போகட்டும், அவருடைய அழகிய ஒளிசெய்யும்  சிறு மலையையாவது  பார்த்துக்கொண்டே துயரை ஆற்றிக்கொண்டு    இருந்துவிடலாம் என்றால் மாலை வந்துவிட்டது. கடலில் கலம் மூழ்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆடி ஆடி உள்ளிறங்கி மூழ்குதல் போல, மலையும் இருள் கூடக்கூட மறைந்துவிடும். தோழி, அவர் வாழ்க,நீயும் யாவரும் வாழ்க! இனி நான் எதைப் பார்த்து ஆற்றுவேன்? காதலெனும்  நோயுடன் அன்றோ நான் போராடிக்கொண்டிருக்கிறேன்....."
{நோய்  பொர   என்பது  புலவரின்  தொடர் .} 




என்பது தலைவி கூற்று.


நோய்  எனை  வந்து  வருத்துகிறதே .....என்பது பொருள்   பொருதல்  = சண்டை இடுதல் என்றும் பொருள்படும் சொல்,  காம  நோய்  அவளுடன்  போராடுகிறது  என்பது  பொருத்தமான உரை.  வாட்டுகிறது  என்றும் கூறலாம் .. காம நோய்க்கு  அவள்  ஒன்றும்  பலியாகிவிடவில்லை  என்பது  நன்கு தெரியும்படி """'பொ ர "  என்றார்  புலவர்.


அந்த மலை மறைவதுபோல, அந்தக் கலம் மூழ்குவதுபோல தலைவியும் துயரில் மூழ்கி வாடை தரும் குளிரில் வாடுவதுபோல் வாடி,
துன்பமே உருவாகிவிடுவாள்..... பாவம்....




புதன், 18 ஜூலை, 2012

அற்புதம்


அற்புதம் என்பதோ ஓர் அற்புதமான சொல். இச்சொல்லின் அடிச்சொற்கள் யாவை என்று ஆய்வோம்.

அருமை, புதுமை என்ற சொற்கள் நீங்கள் அறிந்தவையே.

அரு + புது  + அம்.
தமிழாசிரியர்கள் இவற்றை அரும்புதுவம் என்று புணர்த்தி யிருப்பார்கள்.

இங்கேதான் சொல்லமைப்புப் புணர்ச்சி வேறுபடுகிறது.

அரு >அர்.> அற்.
புது > புத். (இங்கும் உகரம் கெட்டது).
அம் -விகுதி. அம் என்பது அழகு என்றும் பொருள்படும்.

அர்+புத்+அம் = அற்புதம்.

அரு என்பதன் மூலவடிவம் அல் என்பது. இதற்கு விளக்கம் உண்டு எனினும் பின்பு காண்போம்.

ஆகவே  அல்+புது+ அம் = அற்புதம் என்பதுமாம்  .

லகரம் ரகரமாய்த் திரியும். பகரத்தின்முன்  லகர ஒற்று றகரம்   ஆகும்           

அல் ஒரு சொல் விகுதியுமாகும்.

எனவே,  இச்சொல் அழகிய அரும்புதுமை என்ற அளவிற்குப் பொருள்விரிக்க இடம்தரும்.



இது திரித்துப் புனையப்பெற்ற சொல் என்பது சொல்லாமலே விளங்கும்.

செவ்வாய், 17 ஜூலை, 2012

நம்பிக்கை யாவுமே வீண்தானோ!!


இங்குதானே இருந்தாய்
பொங்கும் மகிழ்வுடன்!
வேறு கவனத்தில்
நூறு கோடி எண்ணங்களின்
கெடுபிடி தன்னில் தவித்துவிட்டு,
இல்லம் திரும்பி என்
செல்லமே நானுன்னை
மீண்டும் தரிசிக்க எண்ணுகையில்
எங்கோ மறைந்தனையே....
எங்குதான் சென்றாயோ
மீண்டும் நானுனைக் காண்பேனோ!
நம்பிக்கை யாவுமே வீண்தானோ!!


இன்றிரவு என் கனவிலாவது வரமாட்டாயா!

எனை நீங்கி,
முன்பின் அறியா இடத்தில்
மிளிர்வதும் உனக்கு அறமோ.
தளர்வுற்றுத் தாழ்வதென்  தரமோ!
இதுவே நான் வாங்கிவந்த வரமோ!

வெள்ளி, 13 ஜூலை, 2012

தொல்காப்பியம் பெயர்க்காரணம்.



தொல்காப்பியம் பெயர்க்காரணம்.
கடல்கோளால் தமிழர் நிலங்கள் அழிந்து, மக்கள் பலர் மாய்ந்ததுடன், தமிழ் நூல்களும் மிகப்பல அழிந்துபட்டன. அப்புறம், பாண்டிய மன்னன் வடக்கில் இருந்த பல நிலப்பகுதிகளை வென்று பிழைத்தவர்களை அங்குக் குடியேற்றினான். அவன் " நிலந்தரு திருவிற் பாண்டியன் " எனப்பட்டான். அழிந்துபோன இலக்கண நூல்களை நன்கறிந்திருந்த தொல்காப்பியனாரும் பிழைத்தவர்களில் ஒருவர். அவரை அழைத்து,  அழிந்தவற்றில் நினைவில் நின்றவற்றைக் காத்தல் பொருட்டு, ஒரு புதிய இலக்கணம் பாடும்படி கேட்டுக்கொண்டான். அதற்கிணங்க, தொல்காப்பியனாரும் தம் இலக்கண நூலை இயற்றியருளினார்.

இங்ஙனம் தொன்மை காத்தற்பொருட்டு இயற்றப்பட்டதாகலின், அது " தொல்+ காப்பு+ இயம் " = தொல்காப்பியம் எனப்பட்டது.

சிலர், காப்பியம் என்பது சமஸ்கிருதம் என்று வாதிடுவர்.தொடர்கதைப் பாடல்களை குறிக்கும் "காவ்யா" என்ற சொல்லினின்று காப்பியம் வந்ததென்பர்,

தொல்காப்பியம் என்பது ஒரு காவியம் அன்று. அது இலக்கண நூல்.  ஆதலின், காவியம் என்பதிலிருந்து காப்பியம் வந்து, பின் தொல்காப்பியமாயிற்று என்பது வீண்வாதமாகும்.

இதை நிலைநாட்டும்பொருட்டு, தொல்காப்பியர் காலத்தைக் கிபி 8ம் நூற்றாண்டு என்று கூறுவதும்  பொருந்தாதது ஆகும்.

காப்பியம் என்ற சொல்லும் ஏனை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் இல்லை. சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்று வெள்ளையர் கருதுவதால், காப்பியத்துக்கு இனம ஆன சொல் மேலை நாட்டில்  வழங்கினால் தவிர, அது சமஸ்கிருதமாகாது.

மேலும், காப்ய என்ற சமஸ்கிருத்ச் சொல்  "காபி என்பவனின் வழிவந்தோன்" {   a descendant of Kapi ( a person) } என்று பொருள்படும்.  காப்ய காவ்ய என்பன தொடர்பற்றவை என்பது தெளிவு,


காவ்ய என்பதை காப்ய என்று மாற்றினால் பொருள் வேறுபட்டு,  காவியத்தைக்கூடக் குறிக்காது. பின்பு எங்ஙனம் அது ஓர் இலக்கண நூலைக் குறிக்கும்?

தொல்காப்பியருக்குத் திரணமாதக்னி, அல்லது திரணமாதுக்னி என்ற பெயரும் இருந்ததாகக் கூறப்படுகிறது.   திரண என்பது உள்ளது தக்கவைத்தல், பாதுகாத்தல் என்பதாம்.  மாத  என்பது எழுதப்பட்டதைக் குறிக்கும் (composed). . அக்னி என்பது பொன்னையும் குறிக்கும்.எழுதப்பட்டவற்றை  அல்லது முன் பாடப்பட்ட இலக்கணங்களைக் காக்கும் பொன்னானவரென்று பொருள் தருகிரது. தொல்+காப்பு+இயம் என்பதும் அதே காப்பகப் பொருளைத்  தான் தருகிறது. இதனாலும், தொல்காப்பியத்தில் வரும் காப்பியம், எழுத்தில் காக்கப்பட்டதைக் குறிக்குமே யன்றி ,கதைகளைப்பற்றிய  காப்பியத்தைக் குறிக்காது.

காவ்ய என்ற சொல்லும் கவித்தல் (குவித்தல்) என்பதன் மகவு ஆகும்.



Related topics:

Please see posts dated 29 June 2012:

*  Tolkappiyam Timeline.

*  அதங்கோடு ஆசான்


Note:-

In fact all inscriptions in India were in Prakrit till the early centuries AD : " They were not in Sanskrit, the later polished language 










செவ்வாய், 10 ஜூலை, 2012

due appreciation or praise


பாராட்டத் தக்கவரை பாராட்டாமல் விடுதலும்
குற்றமே


யாரோடும் மானிட நேயம் --- பொலிந்திட
யாத்திடும் பாக்களில் காத்திடும் பண்பினில்
பாரினில் செந்தமிழ் மேவி -- குழைந்திடப்
பயக்கும் கருத்துகள் தேனுள் தினைத்துகள்

இத்தகு பாவலர் தம்மைப் --- புகழ்ந்தி
இனிய சிலச்சில பணிவில் சொலத்தகும்;
பத்தொடும் ஒன்றெனக் கும்மி --- அடித்தொரு
பக்கல் களைந்திடில் பொக்கம் விளைந்திடும்.



குறிப்பு :--தேனுள் தினைத்துகள் = தேனும் தினைமாவும் போல இனிமையானது.
பக்கல் - (ஒரு ) ஓரமாக;  களைந்திடில் = வீசிவிட்டால்.
பொக்கம் - குற்றம்'  அல்லது பிழைபடுதல்




பலியிடத் தயங்காப் பாழ்மனத் தோர்நிறை
உ;லகிடை உலவியும் ஓருயிர்க் கிரங்கி
எலியென்றும் எள்ளாது நலிவொன்றும் கொள்ளாது
மலைக்கும் மனம்தரு கனம்சிறு கண்ணன் 


குறிப்பு :-


எலிக்கும் வீட்டில் இடம் வரையாது வழங்கினார்
மலைக்கும் நிலைக்க இடம் தருக என்றார்.
சிறந்த உள்ளம் உடையார்......
.






சுந்தர ராசனார் சொல்லாட்டோ இத்திரியில்
மந்திர நன்மொழிபோல் மாண்புற்றுச் -- செந்தமிழை
வெல்பரந் தாமரின் வெள்ளியல் மாறாத
நல்விருந்தாக் கிற்றே நமக்கு.

குறிப்பு 


சொல்லாட்டு - சொல்விளையாட்டு. 
வெல் பரந்தாமர் - ஒரு தற்கால இலக்கண ஆசிரியர்.
வெள்ளியல் - வெண்பா இலக்கணம்.




குறள்வெண்பா :


பக்கமலை போனாலென் தக்கசின்னக் கண்ணனையே
ஒக்குமலை ஒன்றில்லாப் போது!

தொலைமலையால் யாதுயர்? சின்னக்கண் தோன்றல்
கலைமலையாய் முன்னெழுமிக் கால்/




குறிப்பு:  முன்னெழுமிக் கால் =  முன் எழும் இக்கால்,  அதாவது முன்னே தோன்றுகின்ற இப்பொழுது. 

வெள்ளி, 6 ஜூலை, 2012

மனங்கவர் ஷெல்லி


ம ன ங் க வ ர்  ஷெ ல் லி


ஷெல்லியின் கவிதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.
அவனுடைய கருத்தோட்டம் இப்படி யிருந்தது:

வெகுண்டெழுந்த மேற்குக் காற்றே
இலையுதிர் காலனின் மூச்சே
கண்ணுக்குப் புலப்படாமல் இருந்துகொண்டு
காய்ந்த இலைகளை விரட்டுகிறாய்.

இதைக் கவிதை வடிவில் எழுதலாமே என்ற எண்ணம் எழுந்தது  அது இப்படி வந்தது:


உதிர்காலன் எதிர்வீச்சாய் உரத்த மூச்சாய்
ஓங்கித் திசைமேற்கின்வழி வீங்கும் காற்றே,
புதிராகி, விழித்திரைக்குப் புலப்படாமல்
புரட்டிச்சரு கனைத்தும்பேய் விரட்டினாயோ!

ஆனால் தொடர்ந்து மொழிபெயர்க்கவோ, தழுவிப் பாடவோ முயற்சி செய்தேனில்லை.




மெதுவெள்ளை, கறுப்புடனே உறுத்தும் செம்மை
மேவுகின்ற நிறச்சருகுக் குவியல் தம்மை

என்ற வரிகளை, "காய்ந்த இலைகளை" என்பதற்குப் பதிலாக இணைத்திடலாமா என்றும்  யோசித்தேன்.....

வேறு  சோலிகள் வந்து குறுக்கிட்டுவிட்டன.....

nAthi


continue from post titled "anaathai" dated 5.7.12   (அனாதை ) 

நா என்பது அன்மை  அல்லது "அல்லாமை"  (அல்லாதது) குறிக்கும் ஒரு சொல்.ஆங்கிலத்தில் உள்ள "நோ" என்பது  அச் சொல்லுக்குத் "தூரத்துச் சொந்தம்". இந்தோ ஐரோப்பிய மொழிகளில் உள்ள இணையான சொற்களைப் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.

அல்> அலா(தது) > அனா > நா.

ஒப்பீடு:

அம் > அம்மை > அம்மா > மா > மாத்ரு

இப்படித் தலைபோனவை பலவாம்.

தலைபோய் வால் நீண்டவை பல.


நா > நாதி.  (தி விகுதி)

நாதி இல்லாதவன்  என்பதில், உள்ள நா, ஆதரவு  என்று பொருள் தருவது.  வெறும் இன்மை அல்லது அன்மையைக் குறிப்பதன்று.

ஆகவே இந்தோ ஐரோப்பிய நா வேறு. நாதி என்பதில் உள்ள நா வேறு

வியாழன், 5 ஜூலை, 2012

maayOn


மாயோன் குழந்தைப் பருவத்திலே --அவன்
வாயைத் திறந்ததும் ஞாலம்கண்டு
தாயும் அறிந்து  மகிழ்ந்ததுண்டு -- அதைத்
தரணி உணர்ந்து நெகிழ்ந்ததுண்டு,

அனாதை


இதைக் கவனியுங்கள்.

மொழி  -  அன்மொழி.
முறை  >  அன்முறை

இப்போது:

ஆதரவு > அனாதரவு

பின்:  அனாதரவு > அனாத > அனாதை.

நாதி என்பதைப் பின் பார்க்கலாம்.@@

அன் -  என்பது எதிர்மறை முன்னொட்டு.



Note: @@  Please see continuation under heading:  nAthi,   posted date:  7.7.12



புதன், 4 ஜூலை, 2012

அமுதப் பெருநலம் அடையத் தகும்படி....








-
வெயிலும் நிழலும் ஒளியும் இருளும் இன்பமும்
துன்பமும் மண்மிசை இயல்பொருளே;

குயிலும் மயிலும் கூகையும் காக்கையும் கொக்கும்
குறைநிறை அடைதற் குரிபொருளே;

வயலில் பயிரும் வெயிலில் கருகி மழையில்
அழுகி அழிவது தெரிவதனால்,

இயவுள் இயற்றிய கரும வினையென இவற்றை
மனிதனும் நினைப்பதன் பயனறிவோம்.


நடப்பவை யாவும் நடக்கவி வைதாம் நாதனின்
செயலென நடங்துகொண்டால்,

அடைப்பதும் வேண்டுமோ துன்பம் இருள்புகு வாயிலை,
அறிந்திவை கூறிட வேண்டியவாம்'

துடைப்பது கண்ணீர்! அதற்கொரு மேலவன் துணியொடு
நிற்பவன் என்று துணிந்துணர்ந்தால்

மடைப்பளி நின்றிடும் மலைப்புறு வேதனை மாநில
மக்களும் கொண்டிட நடைபெறுமோ?


காரைக் காலவர் கண்டு மகிழ்ந்துயர் வேறக்
குறித்திடும் அம்மையின் வரல்நெறியில்

ஓரைந் தொடுக்கிய சாரத் தொடுதிகழ் வாழ்வைத்
தரித்தவர் யாரும் திறல்பெறுவார்.

தீரத் தெளிந்தவர் தேடும் அனைத்திலும் கூறப்
படுமறம் பொருளொடும் இன்பமிவை

ஆரத் தழுவிய அமுதப் பெருநலம் அடையத்
தகும்படி அணிசெயும் உலகமைப்போம்.





மதிகாண நிதிவேண்டும்


திருவுண்டு எனும்போதும் மதிகாண நிதிவேண்டும்
திருவென் றிருந்தாலே போதும் --- அதில்
திருத்தமே வேண்டாமெப் போதும்!


,

நந்தனாருக்கும் திருபாணாழ்வாருக்கும் கவிதீட்டிய சுதாமருக்குப் பாடியது



நந்தனையே சிவனேற்று நன்மை செய்தார்'-- அது
நாட்டினுக்கே இறையன்பின் தன்மை காட்ட!
விந்தையிதே பாணருக்கும் அந்தமில்லார் -- பத்தன்
வேண்டியதை அருள்செய்தார் மென்மை கூட்ட.

அந்தமில்லார் = சிவனார். பத்தன் = பக்தன்.



எனது கவிகள் சுதாமர் தாத்தாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. பலவற்றை மேற்கோளாகக் காட்டி அவர் என்னுடன் கவிதைகளால் "உரையாடினார்" எனில் மிகையன்று. தாத்தாவே கொஞ்ச நாள் தோழியாகிவிட்டார்.



திருமதியா என்றார்க்கு, மதிகாண நிதிவேண்டும் என்று பதில் இறுத்தது அவருக்குப் பிடித்திருந்தது,

மறைத்திறம் வழுவிடா மானிட மலை

நந்தனோ டெந்தபன் னாயன்மார் வந்துமே
ஒத்தியல் கின்றதாம் மொத்தநற் கருத்திது
மந்தனும் சொந்தவை குந்தமென் கைகளில்
நந்துமோர் நன்னிலை என்றதை ஏற்பனே.


வாழவே பிறந்தவர் வளநலம் கொண்டவர்
சூழுதுன் பனைத்துமே சூழ்ந்துணர்ந் தழிப்பவர்
ஏழ்பிற விகள்வரும் இடர்களைந் தொன்றுடன்
ஆழ்கடல் நீந்தியே அப்பால் களிப்பவர்.


பிறவியின் பயனைஇப் பிறவியி லடைபவர்
துறவியே ஆயினும் இல்லுளார் ஆயினும்
இறையொடு மொன்றியே நிறைகொள நின்றுள
மறைத்திறம் வழுவிடா மானிட மலையவர்.



வருவான் இறைவனே!


ஒருவரோ அல்லர் இருவரோ அல்லர்
அறுபதும் மூன்றுமே ஆனோர் தொகையாம்
திருவினை வாழ்த்தித் திறம்பெற் றவர்கள்
மறுவற நின்றவர் மாதவத் தோராம்.

அனையவர் தந்தவை ஆழ்கடல் அன்ன
இணையறு பாடம் இறைவர்த் தொழுதல்
புனைகதை அன்றிது போற்றிநின் றார்க்குத்
துணையென வந்து துயர்களை வுண்மை.


அன்பும் அறமும் பிறழ்செலவு உற்றவன்
மன்பதை தன்னில் மயக்கழிந் தானெனத்
தென்பட நின்று தெருள்பெறும் காலையே
அன்பரை ஆள வருவான் இறைவனே!       

தாயின் பொறுப்பென



தாயின் பொறுப்பென ஆய யாவினும் ஓய
ஒழிந்திட உதவியொன் றிலாப்படிக்கு

நோயும் நொடியற, காயும் வயிற்றினுக் காயதீம்
பால்தனை வாயில் புகட்டியபின்,

சாயும் காலமும் இராவும் பகலும் பொழுதிவை
சடுதியில் போகதுன் பலைப்படுவாள்,

போயும் இனியும் பொல்லா மகாரினால் புகழும்
தரமும் உலகினில் கொலைப்படுமோ?



மட்டில் மகிழ்வுடன் தொட்டில் குழவிநன் மெட்டில்
இசைபெறத் தாவி அணைத்திடுந்தாய்;

குட்டிக் குரங்கதன் சுட்டித் தனம்மிகக் கட்டிப்
பிடிக்குமப் பெற்ற கிளைக்குரங்கு;

ஒட்டித் திரிநலம் எட்டில் உறழுபத் தெட்டும்
செலும்வரை நெட்டில் வளர்தருமோ?

தட்டித் துரத்துமே முட்டும் சிறுகபி பட்டும்
அறிகிற மட்டம் அடைந்ததுமே!       

செயிர்தீர்ந்த சீர்வாழ்வு பயிர்செய் வோமே.


      We will follow examples set by Nayanmaar in devotional path

இறைகாட்டும் வாழ்நெறியில் நின்று செய்யும்
முறையெல்லாம் மாறாமல் முன்னே செல்லக்
குறையின்றிக் கூறிவரும் கொற்றம் போற்றும்
மறைசார்ந்த மாண்புமொழிக் குரித்தே நன்றி.

கண்காற்றில் தூசிவிழக் கசிந்த போதும்
கண்போற்றி அஃதகற்றிச் செல்லுமாப் போல்
முன்னேற்றப் பாதைபோம் அயர்ச்சி தாண்டி
பின்மாற்றம் ஒப்பாத முயற்சி வேண்டும்.

படியேறிப் படியேறிப் பார்த்த வீட்டில்
குடியேறி வாழகையும் கொடுப்பர் காணீர்!
அடிதொற்றிப் பேருந்தில் படியேறிப் பின்
மடிதொற்றி மாதணைக்கும் குழந்தை யாமே.

தன்வீட்டு வாழ்கூலி தந்து நட்பால்
பின்வீட்டில் முன்வீட்டில் இணக்கம் கண்டு
தன்பாட்டை யார்பிறர்க்கும் இடரே இன்றித்
தான்பாடி வீண்பாடு தவிர்த்து வாழ்வோம்.

சாதணப்பே நேர்ந்தாலும் சார்ந்த வாழ்வே
மாதணைப்பாள் மாதவத்தோன் பாங்கிலுள்ளாள்
நோதணத்தல் அவள்செயலே யாதும் வந்த
போதணைப்பாள் துன்பமெலாம் போம்போம் என்போம்.


நாயன்மார் கண்ணப்பன் நந்தன் பாணன்
நாட்டியதோர் நன்னெறியில் நலிவு நண்ணா,
சேயிருவர்க் காயானாள் சேய்மை செல்லாச்
செயிர்தீர்ந்த சீர்வாழ்வு பயிர்செய் வோமே.

27.9.2010.  Written for Sudha/s reading.
      

The gifts of God



மலைகளைத் தந்தான் மாகடல் தந்தான்
மாட்டுடன் ஆட்டினை, மாபல தந்தான்
இலைதழை செடிகொடி காய்கனி தந்தான்
இன்பமும் கோடியே இனிதுளே வைத்தான்


துய்ப்போன் பால்வினா வைப்போன் அவனலன்,
தோன்றிமுன் தொந்தரை செய்வோன் அவனலன்;
கைப்பொருள் தாவென வேண்டுவன் அவனலன்;
கரும வினையலால் பிறபதி வுறுத்திலன்.







5.10.2010

The greatness of mother.


குட்டியை மாந்தன் குழந்தைக்கே ஒப்பிட்டுக்
குட்டியெனும் சொல்லாலே கூறினீர் --- மட்டிலாத்
தாயின் பெருமையைத் தக்க படிசொன்னீர்
காயும் கனியாம் தரம்.


கனியாம் = கனியாகும். தரம் = தகுதி, நில




These lines were written in praise of Sudhama. 23.10.2010






உனது சொர்க்கம், உன் தாயின் காலடியில் இருக்கிறது.


--- நபிகள் நாயகம்.



செவ்வாய், 3 ஜூலை, 2012

An English poem: Unfamiliar personalities


         These are personalities before,
        With whom I was not so familiar;
        You had taken much great pains indeed
        Inducting ideas well much costlier!
ma.
        For both great persons of yesteryears
        You would be the sole speech writer!
        Just friendly between or crossing spears
        None besides you would e'er be the wiser.


        Whatever be their doctrine or creed
        You may, dear, with all haste just proceed;
        Let me be the spectator indeed,
        And all good things my way I shall heed




This was written  for Sudha.    29.10.2010.

Nandan PaNan conversation poem MY REPLY:

கவலைஒன் றில்லை நெஞ்சில்
கடவுளைக் கடைந்து கண்டால்,
தவலையுள்* தயிரை மத்தால்
தவறாமல் ஆய்ச்சி போலே; 
துவளுறும் துன்ப வாழ்வில்
துறக்கமே காணும் பாதை
சவளறத் தந்த ஐயர்
சாந்துணை ஏத்தத் தக்கார்.


அன்றுள நந்தன் பாணன்

ஆயவர் பேசிக் கொண்டார்
நன்றிவை சொன்ன பாங்கு
நான்மிகப் புகழ்ந்து சொல்வேன்;
ஒன்றது தெய்வம்; மாலும்
உயர்சிவ னாரும் என்ற
தென்றிசை மேலோர் வாய்மை
தெளிவுற நீவிர் சொன்னீர்.



My internet  senior friend  Suda wrote a imaginative poem, in which Nandan and PaNan had a conversation. It was quite interesting. I wrote, this  stanza in appreciation of the poem.  8th November 2010, 07:29 PM