வியாழன், 30 ஏப்ரல், 2015

On predicting quakes: "வெள்ளம் எதிர்வர"

வெள்ளம் எதிர்வர  வெல்லும் எறும்புகள்
வள்ளம் நிகர்த்த மிதவைகள் வேய்ந்திடும்,
மாய்ந்திடா வாழ்வு  மகிழ்வுற மேற்கொள்ளும்.
சாய்ந்திடும் தூணெனச் சற்றுமுன்  காண்குரங்கு
கூட்டமாய் ஓடிநிலத் தாட்டம் பிழைத்திடும்.
மாந்தனோ ஈடில்  பகுத்தறி  வுள்ளவனே!
ஏன் தம்  இடர்வர  வின்னவன்  முன்கண்டு
வாழ்ந்தான் மடிவின்றி வையகத் தென்றில்லை?
கோளும் குலுங்கிடக்   காலமாகி  னானென்று
மேலும் இதுவே நிகழுமோ  வரு நாள்?.

தொகுத்தறிந்  துய்வனோ தோமற்  றுலகில்
பகுத்தறி வாளன்மாந் தன்.




வெல்லும் எறும்புகள் :  வெள்ளம் வந்தாலும் எறும்புகள் தம் அணிய  (readiness, preparedness ) ஆற்றலால்  தப்பிப் பிழைக்கும் ஆற்றலுடையவை.
வள்ளம் :  படகு.
வேய்ந்திடும்:  புனைந்திடும், அமைத்திடும்.
 தம் இடர்:  தமக்கு இடர்.
நிலத்து ஆட்டம் :  நில  நடுக்கம்.
ஈடில்  :  இணையற்ற.
இன்னவன் :  இப்படிப்பட்டவன்
காண் :  அறிந்துகொண்ட.
மடிவின்றி :  மடிவு இன்றி:  மரணம் அடையாமல்
என்றில்லை :  என்ற வெற்றித்தன்மை இல்லை.
வையகத்தென்றில்லை::  வையத்தில் என்று இல்லை .  இல் உருபு  தொக்கது.
கோளும் :  பூமியும் .
வரு நாள்:  எதிர்காலத்தில்.
உய்வனோ:  முன்னேறுவானோ .
தோம் அற்று:   குற்றம் அற்று.

புதுக்கவிதை போல் எழுதி பின் மரபுக் கவிதையாய் மாறிவிட்டதே.

edited.




சனி, 25 ஏப்ரல், 2015

புத்தர் பூமியில்..............



நிலைமை யாதென்ற போதிலும்  புவிக்குத்
தலைமை தாங்குவள் இயற்கைத்  தேவி!
மலைகளைப் பிளப்பாள் கடலில் அளப்பற
அலைகளை  விளைப்பாள்  மனிதரைத் தொலைப்பாள்.
கேட்பதற் காருளர்  வாட்பெரு வீரியை?

கல்லும் மண்ணும் காற்றும் விண்ணும்
நெல்லும் புல்லும் அவட்கா  யுதமே.

புத்தர் பூமியில் வித்தையைக் காட்டினள்

*   *   *    *

நீயிரங் காயோ தேவி நின்னைத்
தாயெனப் பணிந்தனர் நீயணைக் கலையோ?

நின்கடை விழிக்கென ஏங்கியோர்
தம்முடல் உயிர்பொருள் இழந்தனர் காணே.

பத நீர்.

சில உலக வழக்குச் சொற்கள் இலக்கியத்தில் (செய்யுள் வழக்கில்)  இடம்பெறாமல் இருக்கும்படி புலவர்கள் பார்த்துக்கொண்டனர்,  மக்கள் மொழியினின்று சற்று  வேறுபட்ட உயர்தர மொழியையே தாங்கள் பயன்படுத்துவதாகப்  புலவர்கள் பெருமை கொள்ள இது அவர்களுக்கு வசதியைத் தந்தது.  இது தமிழில் மட்டுமா?  Queen's English  என்ற ஆங்கிலம்  உயர்தர வழக்கையே குறிக்கிறது.  

நாமறிந்த மலாய் மொழியிலும்  அரசவையில் கடை ப்பிடிக்க வேண்டிய மரபுகளும்  அரசரிடம் பயன்படுத்தத் தக்க உயர்தர மொழி வழக்குகளும்  இன்னும் உள்ளன.  காமு, லூ,  அவாக்  முதலியவை விலக்கப்பட்டன . அக்கு என்பதினும்  ஸாய என்பதே விரும்பப்படும் சொல்.  
வணிக நிறுவனங்க்களும்கூட  "அண்டா " என்னும் சொல்லையே   பயன் படுத்துகின்றன. 

எல்லாம் மனித நாவினின்றும் எழும் சொற்களே அல்லவோ?

பத நீர் என்ற சொல்லை இப்போது பார்க்கலாம்.  இதைச் சங்க இலக்கியத்தில் தேடிக்  கண்டு பிடியுங்களேன்.  இதை மக்கள் பதனி என்பர்.

நீர் என்பது குறுகும்.

வாய் நீர் >  வானி,  வாணி.
பாய் நீர் >  பாணி.   (பாயும் நீர் :  ஆற்று நீர்.)
கழு நீர்  >  கழனி   (கழனிப் பானை).
தண் நீர்  >  தண்ணி.
வெம் நீர் >  வெந்நீர்.>  வென்னி .

பதம் என்பதும் தமிழே.  பதி + அம்  = பதம்.   இது இந்தோ ஐரோப்பியத்தில்  ( அவஸ்தான் முதலிய  " மேலை" ஆரியத்தில் )  உள்ளதா என்று கண்டுபிடியுங்கள்.  இல்லாவிட்டால்,  சமஸ்கிருதம் இதை உள் நாட்டில் (local)
மேற்கொண்டதாகும்.

வியாழன், 23 ஏப்ரல், 2015

ban on track events over virginity fears


ஓடல் உடற்பயிற்சி   பெண்களுக்  கில்லையெனும்]

காடர் கறைக்கோளிக் காலத்துக் --- கூடுவதோ
மேடேறி நிற்கும்நம் ,மெல்லியலார்  வீழ்ச்சியைத்
தேடி நிலைப்படுத்தும் தீது.

Australia Islamic school 'bans running' over virginity fears


https://sg.news.yahoo.com/australia-islamic-school-bans-running-over-virginity-fears-033224708.html


ஓடல் =  ஓடுதல்,  ஓடும் பந்தயம் அல்லது பயிற்சி.

காடர் =  காட்டு மனிதர் (போன்றோர்)'    சிந்தனையில் முன்னேற்றம்  இல்லாதவர்கள்.
கறை -  கரும்புள்ளி;  தெளிவற்ற.
கோள் = கொள்கை.
கூடுவதோ -  ஒத்துவருமோ.
மேடுஏறி -- முயன்று முன்னேறி.
வீழ்ச்சியை -  முன்னேற்றத் தடையை;
நிலைப்படுத்தும் =(வீழ்ச்சியை) அதிலிருந்து எழ விடாமல் தடுத்துவைக்கும்.
உறுதிப்படுத்தும்

காடு+ அர்   = காடர்     இடைக்காடர்  என்ற புலவர் பெயரும்  திருவெண்காடர் என்ற பெயரும் நோக்குக. 

காடு + ஆன் =  காட்டான்.  இங்கு டகரம்  இரட்டித்தது.

திங்கள், 20 ஏப்ரல், 2015

கிஞ்சித்தும் meaning.

கிஞ்சித்தும் -  பொருள்.

இது கிஞ்சித் என்ற வடசொல்லில், உம் சேர்ந்தது ஆகும்.  உம் என்பதொரு தமிழ் இடைச்சொல்.

இங்கு "கிம்" என்ற ( வட )சொல்லுடன்  "சித்" என்ற வடமொழி விகுதி சேர்ந்துள்ளது.  சுட்டுக்கள் அல்லாத பதிற்பெயர்களில்  (pronouns) இதுவும் ஒன்று.

கிஞ்சித் =  ஏதோ ஒரு பொருள் என்பது.

யாதும் ஐயமில்லை என்பதை,    கிஞ்சித்தும் சந்தேகமில்லை என்று எழுதுவர்.

எனவே இதை விலக்கி  "யாதும்"   "எதுவும்"  என்று எழுதுக.

கிம் என்பது உண்மையில் கொம் என்ற பழந்தமிழ்ச் சொல்லின் திரிபு.

கொம் > கொம்+சு+அம் = கொஞ்சம். சு-வும் அம்-மும் விகுதிகள்.

கிம்+சித் = கிஞ்சித்.   சித் விகுதி.   சு(தமிழ் )> சித். (வடமொழி )  விகுதியும் திரிந்தது.

Compare English:   "whatsoever".

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

பூவுலகு Earth or paradise?

நம் நில உலகுக்குத் தமிழில் சொற்கள் பல உள்ளன. இவற்றுள், பூமி, பூவுலகு (பூலோகம்) என்பனவும் அடங்கும்.

இஸ்லாமிய எழுத்தாளர்கள்  சில அரபிய விவரங்களைச் சுட்டிக்காட்டி  தமிழ் நாடே இறைவன் அளித்த  நலம்பல உடைய
அழகுலகு என்றும் இங்குத்தான்  ஆதாம் ஏவாள் முதலியவர்கள்
உலவினர் என்றும் கூறுவதுண்டு.

பூவுலகு என்பது அழகுலகு என்றும்  பொருள்படும். இதுவே  ஆங்கிலத்தில் பாரடைஸ்   (Paradise) எனப்பட்டது என்று கருத இடமுண்டு.

இதன் தொடர்பில் பூவுலகு  என்பதை ஆய்ந்தால்,  பொருள் மேலும் விளக்கமுறலாம்.

Tamils in Sumeria : Researcher no more.

சுமேரியாவில் தமிழர்கள்  இருந்தனர்  என்பதை பெரும்பேராசிரியர் மறைமலையடிகள்  கூறிச்சென்றார். தமிழர் வணிகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், பல நாடுகட்கும் சென்று தம் வணிகததை வளர்த்து நிலைபெற்றிருந்தனர் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுக் கருத்தாகும்.

இவர்கள் தமிழகத்திலிருந்தோ  குமரி நாட்டிலிருந்தோ அங்கு (சுமேரியா)   சென்றனர் என்பதே  முன் நாம் அறிந்த வரலாறு.

மலேசியா பினாங்கு அறிஞர்  முனைவர் லோக நாதன் என்பார், சுமேரியாவேதமிழர் பிறந்தகம் என்பார். தமிழர் அங்கிருந்து தமிழகம்
சென்றேறினர் என்பார்.

சுமேரிய மொழியிலும் தமிழிலும் காணப்பட்ட சொல்லொற்றுமைகளை அவர்  அடித்தளமாகக் கொண்டு,  அவர் தம் தெரிவியலை (theory)   மெய்ப்பிக்க முனைந்தார்.

இத் தமிழறிஞர் ஏறத்தாழ மூன்று நாட்களுக்கு முன் மறைந்துவிட்டார்  (Age more than 70). நமது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தெரிவியல்கள் யாவும் நன்கு ஆய்தற்குரியனவே.

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

சமஸ்கிருதம் வாங்கியுள்ள கடன்களை............

கீழ் குறித்த ஆய்வாளர்  இந்தி, மற்றும் உருது மொழிகளின் செயற்கையான பிரித்துணர்வைப் பற்றி நூல் எழுதியுள்ளார். ஆஸ்திரிக்  மற்றும் முண்டா மொழிகளிலிருந்து சமஸ்கிருதம் வாங்கியுள்ள கடன்களை விவரித்துள்ளார்.

படித்துப் பயன் பெறலாம்.

நூற்பெயர்:

Urdu/Hindi: An Artificial Divide: African Heritage, Mesopotamian Roots ...

 By Abdul Jamil Khan



1928-ல்  ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில்  டாக்டர்  எஸ்.கே. சாட்டர்ஜீ ( மொழி ஆய்வறிஞர்)  கூறியதையும் இவர் நினைவு கூர்ந்துள்ளார்.  ஆஸ்திரிய மொழிகளிலிருந்து பல சொற்களைச் சமஸ்கிருதம் கடன்கொண்டது.  பின்பு  இது பேசிய மக்கள் .  இந்துக்களாகவும்  முகமதியர்களாகவும் மாறி   ஆரிய மொழிகளைப் பேசும் மக்களாய்  சாதிப்  பிரிவுகளோடு அமைந்துவிட்டனர்  என்று அவர் கூறியது குறிப்பிடப்படுகிறது.



சிந்து நதியின் பெயரில் உள்ள  " ஸ்",  அப்பால் பாரசீகப் பகுதிகட்குள் நுழையுமானால்," ஹ்" என்று  மாறிவிடுமென்பதும்  இங்ஙனமே  சிந்து என்பது ஹிந்து ஆனது என்பதும்,  மேலும் க என்ற ஒலியும் ஹ என்றே மாறும் என்பதும்  சொல்லப்பட்டுள்ளது, இது நேயர்கள்  அறிந்ததே.  ( இந்த சிந்துச் சொல்,  சமஸ்கிருதமன்று, ஒரு மெல்லிய துணிவகையின் பெயர் என்பார்  பி டி சீனிவாச ஐயங்கர்.) , 

சில் என்ற அடிச்சொல் சிறுமை குறிக்கும் தமிழ்ச் சொல்.


சில் > சின் >  சிந்து.  ஒ,நோ:-    


பல் >  பன் > பந்து> பந்தம்.  ( பற்றும் உறவு என்று பொருள்.)


மற்றும்  மன் + திரம்  = மந்திரம்.        ( ன் + து  > ந்து ;   ன்  + தி  = ந்தி   )



கங்கை ஆறு குறிக்கும் கங்கா என்ற சொல்லும்ம் ஆஸ்திரிய மொழியினுடையது என்றும் அது  பலவேறு வடிவங்களில் ஏனைத்  தென் கிழக்காசிய-  கிழக்காசிய மொழிகளிலும் ஊடுருவியது என்றும் விளக்கப்படுகிறது.  இந்த ஆஸ்திரியச் சொல் "ஆறு" என்று மட்டும் பொருள் படுவது.  அதுபின் கங்கை  ஆற்றின் இடுபெயராய் ஆகிவிட்டது என்றும் விளக்கம் அளிக்கிறது   இந் நூல் . சமஸ்கிருதம் இந்த அடைவினைப் பின்பற்றியது. 


(உருசிய மொழியில் ஆற்றுப் பெயர்கள், தமிழினுடன் ஒப்பீடு செய்து நான் முன் எழுதியதை இங்கு  ஒப்பிடுக.)  பொதுப் பெயர்ச் சொல்லாய்   இருந்து பின் இடுபெயராய் வடிவு கொண்டமை அறிக.

  எழுத்து மாற்றங்கள் (பின் திருத்தப்படும்)





புதன், 15 ஏப்ரல், 2015

THE SIGNIFICANCE OF SEVEN

ஏழில்  தொடர்பெழுகை( 7: significance)

இந்தச் சொல்லின் அமைப்பைக் கவனிப்போம்.

ஸப்த =   ஏழு.   (எண்ணுப்பெயர்).   சந்தியில்  இது ஸாப்த என்று நீண்டது.

பாதம் =  அடி.   இதன் அடிச்சொல் பதி என்பதே.   பதிதல் - தமிழ்ச்சொல்.  பதி+அம் = பாதம்.  முதனிலை திரிந்து விகுதி பெற்ற தொழிற்பெயர்.  இது பதம் என்று முதலெழுத்து நீளாமலும் அமையும்.

"பதிபதம் பணிவது நமது கடன்" என்ற வாக்கியத்தை நோக்கவும்.


ஸப்த + பத + இன் + அ
ஸாப்த + பதீ + இன் + அ
ஸாப்தபதீன (ம்).

சந்தியில் பதி  இன்  அ  என்பது பதீன  என்றாயிற்று.

ஸப்த என்பது சமஸ்கிருதச்சொல்.
பத(ம்)  என்பது தமிழ்.   அங்கு சென்ற சொல்.
(காரணம்  பதிதல் தமிழ் வினைச்சொல் .)
இன் என்பது உடைமை குறிக்கும் தமிழ் இடைச்சொல்.
அ என்பதும் உரியது என்று பொருள்தரும் தமிழ் இடைச்சொல்.

ம்(அம்) என்பது வருவிக்கப்பட்டது.

ஆகவே,  "ஸாப்த பதீன(ம்)" தமிழ் கலந்த வடசொல் ஆயிற்று.

முடிவு:  ( தமிழ்ச் சொற் கலப்பு  இருப்பினும்  )  இது வடசொல்.

ஏழு என்னும் எண்ணுப்பெயர், எழுதல் என்னும் வினையடித் தோன்றியிருத்தல் பொருத்தமே.    தொடர்புகள் ஏழில் எழுமென்று தமிழ் எண்ணுப்பெயரின் தோற்றம் கொண்டு  ஊகித்துக்கொண்டு,
 இச்சொல்லுக்கான கருத்தை உருவாக்கியுள்ளனர்.

ஏழில்  தொடர்பெழுகை

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

ஸாப்தபதீனம் ritual

ஒருவனுடன் ஒத்துப்போய்  நட்பு தலைப்படுவதாயின்  அவனுடன் ஏழு அடிகள்  இணைந்து  எடுத்துவைக்கவேண்டும். ஏழாவது  அடி  வெற்றியுடன்  எடுத்துவைத்து முடிக்க  இருவரும் நண்பர்கள் ஆகிவிடுவர்   இப்படி ஒரு வழக்கம்  \பண்டைக்   காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.

பிற்காலத்தில் திருமணங்கள்  அமைவுற்றுச்   சடங்குகள் ஏற்பட்ட ஞான்று
இந்த முறை அவற்றுள்ளும் புகுந்தது .  திருமணம் என்பது ஆடவரும் பெண்டிரும் கூடி வாழ்வு முழுவதும் தொடரும் ஒரு நட்பே ஆதலின்.

மணமகனை நோக்கி வருகின்ற மணமகள் ஏழு அடி எடுத்துவைத்து நடந்து அவனை அடையவேண்டும் ,  தீவலம் வருகையில் இருவரும் இணைந்து ஏழு
அடிகளில் சுற்றிவந்து முடிக்கவேண்டும். குறைதல் கூடாது

இதுவே வடமொழியில் ஸாப்தபதீனம் எனப்பட்டது.




======================================================================

திங்கள், 13 ஏப்ரல், 2015

thAniam a short enquiry

தன்யது என்று  சங்கத மொழியில் சொன்னால்   அதற்கு இடி என்று பொருள். இது உருக்கு வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணப்படும் சொல்தான்.

தனீயஸ் என்று வரும் ஒரு சொல், மிகச் சிறியது என்று பொருள்படுவது.  இவற்றுள்  தானியம்  dhanya  என்பதற்கு மிக்க அருகில் வந்துள்ள சொல் இந்த தனியஸ்  தான்.   தான்ய   dhanya என்ற சொல்  இதனுடன் தொடர்புடையதாய் இருக்கக்கூடும்   

ஆகவே,  தானிய  என்ற சொல்  மூலம்   கண்டுகொள்ள முடியவில்லை என்றாலும்,  நெல்,கொள், எள்  முதலியவை சிறியன ஆதலின்,  தனியஸிலிருந்து தானிய வந்தது என்று வாதமிடவேண்டும்.  ஆய்வு செய்கிறவர்கள், அகரவரிசைக்காரர்கள்  காரணம் ஏதும் கூறாமலே  அது சமஸ்கிருதத்திலிருந்து வந்தது என்று சொல்லிவிட்டால், ஆய்வறிவு இல்லாதவர்கள் உடனே நம்பிவிடவேண்டியதுதான்.

 நிலத்தில் விளைபவை, நிலத்தோடு தொடர்புடையவனுக்குச் சொந்தமானவை. இதுவே பண்டைக் கருத்து ஆகும். ஆகவே,  தான் self என்பதிலிருந்து தானியம் என்ற சொல்  வந்தது என்பதே சரி.

தனக்குச் சொந்தமானவற்றை  "பெர்சனால்டி" personalty  என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோன்ற பொருளமைப்புக் கொண்டதே இது. பெர்சொனல் சட்டல்ஸ் personal chattels  என்று சொல்வதையும் அறியவும்.

வழக்கு:

தானியம் என்பதற்கு நேரான இன்னொரு தமிழ்ச்சொல் கூலம் என்பதாகும். இச்சொல் இப்போது பெரும்பாலும் வழக்கில் இல்லை,கூலவாணிகன் சாத்தனார் போலும் சங்கப் புலவர்களை நினைவு கூர்கையில் மட்டும் அது  வருகிறது.  நவதானியத்தைத் தொண்கூலம் எனலாம் என்பது பல தமிழரும் அறியாததே.


தானியங்கள் நீண்ட காலத்துக்குச் சேமித்து வைப்பதற்கு ஏற்புடையவை அல்ல ;  ஆதலா\ல் அழியுமுன் அவற்றைத் தானமாகக் கொடுத்துப் புகழ் பெறவேண்டும் என்பர்.  தா > தானம் >தான்யம் என்று  சிந்திப்பதும் கூடும்.

--------------------------------------------------------------------

personalty
 noun assetsavailable meanschattelseffectsfundsholdings,investments, perronal property, personal resourcespossessionspropertyresourceswealth ( This appears to be the current legal definition.  This may have become widened over passage of time,  owing to interpretation of the judges. ).
Personalty-  actually this excludes lands and things permanently fixed to lands which are known as real property.  "realty".
Another easier explanation is:  "movable property that a person possesses.  "  For the  recovery of any of such things, you have to sue the person,  as opposed to remedies like foreclosure  which goes against the land.`

தான் - தானியம்;   "தனக்குச் சொந்தமான விளைபொருட்கள். "  அரசுக்கு வரியாகச் செலுத்தப்பட்டது போக எஞ்சியவை தனக்கு ( விவசாயிக்கு)ச் 
சொந்தமானவை .  வேதம் பாடியோர் அவற்றை விவசாயியிட மிருந்தே பெற்றனர்.  கேட்போரிடம்  விளைச்சல் தனது என்று சொல்லற்குரியவன் அவனே.   தனீஸ் , தான்ய , தானியம் முதலியவை தான் என்ற மூலம் பிறப்பித்தவை.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

வாசனின் வாச மங்கை - தொடர்ச்சி II

தொடர்ச்சி....பாகம் 1-ல் இருந்து.

வாசன்  " நண்பர்களுடன் கொஞ்ச நேரம் தனியே பேசவேண்டும் "  என்று சொல்லி,  அந்த வீட்டின் முன்பக்கமாகச் சென்றார்.   நண்பர்களுடன் உடன் போயினர்.  பெண்ணின் அழகைப் பார்த்து  ஒருவாறு மயங்கிய வாசனுக்குக் கல்யாண ஆசை வந்துவிட்டாலும்,  வேறு ஏதோ பேசவேண்டும் போல்  தோன்றியது. "இதெல்லாம் முடிகிற காரியமா?" என்று பேச்சைத்
தொடங்கினார்.

"மணம் தேடுமுன் பணம் தேடி வைத்திருக்க வேண்டும்.   அதனால் பணம் வைத்துக்கொண்டு அப்புறம் இங்கே வருவோம் "  என்றார் வாசன்.   நண்பர்கள் இதற்கு ஒப்பவில்லை.  "அப்புறம் என்றால் நாங்கள் எல்லாரும் ஒன்றுகூடி இங்கே வரவேண்டும். இதே பெண்ணும் கலயாணம் ஆகாமல் இருக்க வேண்டும்.   வேறு யாரும் கலைத்துவிடாமலும்  இருக்கவேண்டும் ...... அதெல்லாம் சரிவராதப்பா"  என்றார் அவர்களில் ஒரு நண்பர்.  " பணக் கவலையை விடு,  செய்து முடித்துவிடலாம் ...... நீயே தெரிந்துகொள்வாய்" என்றார் இன்னொருவர்.   வாசனின் நண்பர்கள் எல்லாமே திருமணம் ஆனவர்கள்.  ஆகக் கடைசியாகக் கல்யாணம்  ஆனவருக்கு ஒரு குழந்தை . மற்றவர்களுக்கு இரண்டு மூன்று  என்றவாறு இருந்தனர். எப்படியும் வாசனின் வாழ்வு வாசனை பெறவேண்டும் என்று விரும்பினவர்கள் அந்த நண்பர்கள்.

ரப்பர் எனப்படும் தேய்வைத் தோட்டங்களில் மணப் பேச்சுக்களை[ப் பெரும்பாலும் இழுத்தடிக்க மாட்டார்கள். இழுத்தடித்து நடைபெறும் திருமணங்களுக்கு  கொஞ்சம் மதிப்புக் குறைவு என்று பேசிக்கொண்டார்கள்.

முடிந்தால் இன்னொரு நாள் தங்கி உறுதி செய்துவிட்டுப் போய்விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் நண்பர்கள்.  வாசனுக்கும் வாசனைத் திரவியங்கள் மணமலர்கள் போய் வங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.  பக்கத்து வரிசையில் உள்ள வீடுகள்  ஒன்றில் இருந்த   சோதிடரும் தம்  வேலைக்குரிய  ஏடுகளுடன் வந்து பொருத்தம் பார்த்து,  மிகவும் பொருந்தியிருப்பதாகச்  சொல்லிப் பச்சை விளக்குப் போட்டார்.  பெண் வீட்டில்  இரவு தங்குவது வழக்கத்துக்கு மாறானது என்பதால்,  அடுத்திருந்த வீடுகள் தொகுதியில் இருந்த   ஓர்  எழுத்தரின் வீட்டில் மாப்பிள்ளை வாசனும் நண்பர்களும் தங்க வைக்கப்பட்டனர்.  வசதிகள் எல்லாம் மன நிறைவு  அளிப்பனவாகவே இருந்தன.
மாறு நாள் குளுவாங்  என்னும் பட்டணத்துக்குப் போய்  சேலை, வேட்டி, பூக்கள், தேங்காய், வாழைப்பழம் , வெற்றிலை பாக்கு என்று பலவற்றை வாங்கினார்கள் நண்பர்கள்.  வாங்கிக்  கொண்டு பெண்வீட்டுக்கு வந்து,  மணத் தொடர்பை உறுதி செய்தனர். வாசனுக்குப்  பட்டு வேட்டி.  பெண்ணுக்கு அழகிய சேலை.   பெண்ணின் கண்ணிலிருந்து புறப்பட்ட ஒரு மின்னல்,  வாசனின் இதயத்தைத் தொட்டது.  வாசன் வெளியில் காட்டாமல் சமாளித்துக் கொண்டார். அப்படியே செய்தாள் அந்த அழகியும்.   தேவகி என்பது அவள் அழகான பெயர். நண்பர்கள் அந்த "மின்னலைக்" கண்டு கொண்டனரோ என்னவோ ?

இனி விருந்து காத்துக்கொண்டிருந்தது.  பெண்ணின்  உறவினர்கள் சிலர், ஊர்மக்கள் ஆகியோர் கலந்துகொண்டு,  வாசனுக்கும் தேவகிக்கும் தம் நெஞ்சங்களின் வாழ்த்துக்களைச் சொற்களால் சிலரும் புன்னகையால் சிலரும், கண்களால் சிலரும் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
பின் வாசனும் நண்பர்களும் சிங்கையைநோக்கிப்  புறப்பட்டனர்.y

thodarum தொடரும்

Will edit later, as this feature is now unavailable.

புதன், 8 ஏப்ரல், 2015

Ways of referring to poverty

எழுத்துமொழியில் வறுமைக்கு மற்றொரு சொல் தரித்திரம் என்பது

நல்குரவு என்பதும் அது.

வறுமையை நல்குரவு என்பது   ஓர்  இடக்கர் அடக்கல் ஆகும்.

வறியோன் ஒருவனைப் பார்த்து  அவன்றன் வறுமையைக் குத்திக்காட்டுதலைப் பண்டைத் தமிழர் வெறுத்தனர்/ அதனால் அதனை அடக்கிச் சொன்னார்கள்  நல்குரவு என்று.

வறியோன் நன்றாகவும் உடுத்திருக்கமாட்டான். அவன் உடுத்திருக்கிறான் என்று தான் சொல்ல வேண்டும்.

தரித்தல் என்றால் உடுத்தல்.  தரி+ திரம் :  தரித்திரம் ஆகும்.

வறுமையில் செம்மை கடைப்பிடிக்க வேண்டும்.  வறுமையும் ஒரு நோய் என்று கருதினர். உற்ற நோய் நோன்றல் என்றார் வள்ளுவனார்;  ஆதலின் அது பொறுத்தல் கடன். தரித்தல் என்பது பொறுத்தல் என்றும் பொருள்தரும் ஆதலினாலும்  தரித்திரம்  என்றது இரட்டைப் பொருத்தமானது. பொறுத்தற்குரிய துன்பம் என்ற பொருளிலும் இச்சொல் அமைந்துள்ளது.

மக்கள் வழக்கில் இது தரித்திரியம் என்றும் வழங்கும். இது ஏடுகளில் காணப்படவில்லை/
தரி :உடுத்தல்.
திரி:  மாற்றம்/
அம்:  அழகு மற்றும் விகுதியும் ஆகும்.
தரித்திரியமாவது:  உடுத்தலில் மாற்றம் என்றபடி.
இங்ஙனம் மக்கள் வேறுவகையில் வறுமையைக் குறித்தனர்.

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

தமிழ்த் தென்றலில் கலந்தவை

தமிழென்ப  தே ஒரு  தென்றல்---- அது
தரணியெல் லாமுலவும்  தடைதானும்  உண்டோ?
அமைந்துள்ள அரண்களுள் போகும்  --- பின்போ
அவைநீங்கிக்  கானகம் வெளிகளில்  ஏகும்.

உலவுதல் புரிகின்ற பொழுதில் --அதன்
உராய்வினில்  அயல் நின்ற பொருள்கூடி வீசும்
சிலவந்து கலந்திட்ட போதும் ---- அண்ணே
தென்றல் வேறாம்சேர்ந்த பிறவேறு கண்டீர்

தென்றலில் வருகின்ற இன்பம் --- அண்ணே
சேர்ந்துவீ     சும்மவற்  றிடைகண்ட   துண்டோ
மன்றிடும் மகரந்த  மணமோ---- அதன்
மாண்புவே   றாம்பிற   மாசுவே   றாகும்.

edited.

இத்தகைய கவிதைகளைப் பெரும்பாலும் வெண்டளையில் எழுதுவர். இதை யான்  கருதாமல் கைக்கு வந்தவாறு எழுதியுள்ளேன் .  செதுக்கி  வெண்டளை என்னும் உறைக்குள் இடலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் செயல் படுத்தவில்லை. எப்படி வந்ததோ  அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்  இதன் விளைவு சிலவிடங்களில் சந்த முறிவு. முறிவு விலக்குவதாயின் :

(எ-டு )

"தரணி உலாவத் தடைதானும் உண்டோ ? " என்று இரண்டாம் அடியில் வரவேண்டும். பிறவும் அன்ன

தரணி உ /   லாவத் த /  டை  தானும் /  உண்டோ

என்று வகையுளிப் படுத்தி  அறிக.

Well if you are a grammar enthusiast, then I have left it in its crudest form. Just read, understand and discard.



வாசனின் வாச மங்கை a story

வாசன்  ஓர் கடின உழைப்பாளி.  இந்தியாவிலிருந்து  மலாயாவுக்கு ஜப்பான் போர்  தொடங்குமுன் வந்தவர். போர் முடிந்தபின் தன் சொந்தச் சிற்றூருக்குச் சென்று பார்த்தவருக்குப் பேரதிர்ச்சிதான் காத்திருந்தது. தான் அன்புடன் அணைத்து மகிழ்ந்த மனைவி இன்னொருவருடன் குடும்பம் பண்ணிக்கொண்டு இரண்டு பிள்ளைகளையும் பெற்றுக்கொண்டு மகிழ்வுடன் வழ்ந்துகொண்டிருந்தாள்

"நீ  மலாயாவில் ( இப்போது மலேசியா) குண்டுபட்டு இறந்துவிட்டதாகக் கேள்விப் பட்டுத்தான் அவன்  மறு புருசனை எடுத்துக்கொண்டாள். யாருடைய தவறும் இல்லை"  என்று ஊர்ப் பெரியவர்கள் சொல்லவே,  ஒரு தென்னை மரத்தடியில் இருந்து தனியே அழுதுவிட்டு,  அடுத்த கப்பலிலேயே ஏறி சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்.

நண்பர்கள் பரிந்துரையின் பேரில் நல்லவேளையாக அவருக்கு வெள்ளைக்காரனின் போர்க்கப்பல்களில் குழாய்கள் சீர்ப்படுத்தும் ஒரு வேலை கிடைத்தது. கொஞ்சம்  நல்ல சம்பளமும் கிடைத்தது.  கல்யாணமும் வேண்டாம் கத்திரிக்காயும் வேண்டாம் என்றிருந்த்தவர்,  அங்கு இருந்த மணிமேகலை சாப்பாட்டுக் கடையில் நல்ல இலைச் சாப்பாடு சாப்பிடுவதும்
பாய்போட்டு நன்றாக உறங்குவதும் வேலைக்குப்போவதுமாக இருந்தார்.

"இப்படியே இருந்துவிட்டால்  எப்படி இருக்கும் எதிர்காலம்?" என்றொரு கண்ணதாசன் பாட்டு வானொலியில் வருவதுண்டு.  அந்தப் பாட்டு வானொலியில் யார்செவியிலும் ஏறாத அந்தக்காலத்திலேயே வாசனின் நண்பர்கள் வாசனிடம் வந்து உரையாடும் போதெல்லாம் "இப்படியே இருந்துவிட்டால்  எப்படி இருக்கும் எதிர்காலம்?"  என்று துளை துளை என்று துளைக்கத் தொடங்கிவிட்டார்கள். யாரும் மகிழ்ச்சியாகக்  காலங்கழித்தால்  விடமாட்டார்களே!
வாசனும்  அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காதவராய் " இந்தப் பொம்பிளைகளே எனக்கு உதவாது.  தனியாகவே இருந்து செத்துப் போகிறேன் " என்று பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்.  விட்டுவிடுவார்களா ?
ஒரு நாள் அவரை ஒருவாறு மடக்கிப் பிடித்து  அந்தக் காலத்து "ஆஸ்டின்" வண்டிக்குள் போட்டு  மலாயாவில்   பாலோ என்னும் இடத்திற்குக் கொண்டு போனார்கள்.  
ஒரு பெண்ணைக் காட்டினார்கள்.  சிவந்த மேனி,  பலாப்பழம் நிறத்து உதடுகள் ,இவருக்கு ஏற்ற நல்ல  உயரம்,  பிறை போலும் நெற்றியில் வாள் போன்ற கண்கள், முத்துப்பல்  வரிசை .........யாரும் வேண்டாம் என்று ஒதுக்க முடியாத வாட்டசாட்டம்...
என்ன கட்டிக்கொள் ... என்றார்கள் நண்பர்கள்.  பெண்ணின் தகப்பனார், தாயார் உடன்பிறப்புகள் எல்லாம் வாசன் எப்படி வாய்மலர்ந்து எல்லோரையும் மகிழ்விப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்......பெண்ணுக்கும் வாசனைப் பிடிக்கத்தான் செய்தது.  சரி சொல்லமாட்டாரா என்று உள்ளே அறையில் கொஞ்சம் சரிந்தே படுத்துக்கொண்டிருந்தாள் பெண் .  அவருக்குக் காப்பி கலக்கிக் கொடுத்த போதே அவரை நன்றாகக் கவனித்துக்கொண்டாள்.

இரண்டாம்  பாகத்தில் தொடர்கிறது......

will edit as necessary later.


திங்கள், 6 ஏப்ரல், 2015

Where did you hide yesterday



எப்போதும் சில்லென்று வீசுவாய் திரைத்துணி
எழவும்பின் விழவும் நீ இயன்றபடி செய்குவாய்.
தப்பேதும் இல்லைஎன்றன் தாவணியும் நகர்த்துவாய்
தனியேனென் றெண்ணாமல் தழுவிடுதல் புரிகுவாய்


தளிர்களையும் இலைகளையும் தலையசைத்தே அயர்த்துவாய்
தண்ணீரில் அலைகளெழத்  தாமரைக் குளம் தவழுவாய்
குளிர் நுகர நான்மகிழக்   காற்றினியாய் உலவுவை
குளிர்வேண்டி ஏங்கினேனே  நேற்றெவண் நீ ஒளிந்தனை?


சில் -  ஜில் வடவெழுத்து  நீக்கப்பெற்றது .
காற்றினியாய் -  இனிய  காற்றே 
 .

சனி, 4 ஏப்ரல், 2015

உபத்திரவம்

இனி உபத்திரவம் என்ற "சமஸ்கிருதச்" சொல்லை   ஆய்ந்தறிவோம்.

முதல் வேலையாக இது சமஸ்கிருத அகரவரிசையில் உள்ளதா என்று பார்த்தல் கடனாகும்.

எமக்குத் தெரிந்தவரை   நாம் கருதவேண்டிய "உபத்ர...."  எனல் தொடக்கத்துச் சொற்கள் இரண்டே  அகரவரிசையில்  உள்ளன.  அவை வருமாறு:-

1 உபத் ர ட் .
2 உபத்ற்ண்ய 

உபத்ரட்  என்பது  துளைத்தல் என்று பொருள்படும்.   இதிலிருந்துதான் வந்திருக்குமோ?  காலை கையை உடலை. மனத்தைத் துளைக்கின்ற விடயம் என்கிற பொருளில்  நேரடியாகக் கடன்பெறாமல், அதிலிருந்து பொருள் பெறப்பட்டு  அமைந்த சொல்லாய் இருக்குமோ?

உபத்ரண்ய என்பது பாம்பு குறித்தது.  பம்புபோல் நெளியும் விடயம் என்றபடி வந்திருக்குமோ? அப்படியானால் அது இன்னும் வந்துசேராத உபத்திரவத்தைக் குறித்திருக்குமோ?  இது பொருத்தமில்லையே!

சமஸ்கிருதத்தில் "உப" என்பதன் பொருள் இருக்கட்டும்.  தமிழைப் பொறுத்தவரை,  உவ-  என்றால்  முன்னிருப்பது.  இது உகரச் சுட்டடிச் சொல்.  ஆனால் உது,  உவன் என்பன இலக்கண நூல்களில்மட்டுமே கணப்படுவது .  வழக்கொழிந்துவிட்டது.

ஆனால் அது அவன், இவன் இது என்பன இன்னும் உள்ளன. சுட்டுக்கள் மூன்று, அவை அ, இ, உ ஆகும்.

உபத்திரவம் என்பதில் திரவம் என்பது உண்மையில் துருவுதல் என்னும் வினையிலெழுந்த துரவம் ஆகும்.  துருவு> துருவு + அம் = துரவம்  (ரு >ர  திரிபு ) ஆம்.   துருவம் என்பது அதே அடிப்பிறந்த இன்னொரு தொடர்புடைய சொல் ஆகும்.

ஆக,துருவு+அம் = துருவம்  (இதில் "வு " என்பதன் உகரம் கெட்டது .)
துருவு+ அம்  = துருவம் >  துரவம் > திரவம் . முழுச்சொல்லின் பகுதியாய் வருகையில்  துருவம் என்ற பகுதிச்சொல்  இத்திரிபுகளை அடைந்தது. 


 உவ + துருவம் =  உவத்துருவம் > உவத்திரவம்> \
 உவத்திரவம்    என்றால்  உங்கள் முன் தோன்றி உங்களைத் துளைக்கும் துன்பம்

ஏனைச் சொற்களைப்  பிரித்தல் போல்   உப + திரவம்  என்பது  பிறழ்பிரிப்பு ஆகிவிடும்.   அப்படிப் பிரித்தால்  கிடைக்கும்  பொருள்  supporting liquid என்பது. அது பொருளன்று. .

உவத்  துருவு  :இதுவே சமஸ்கிருதத்தில் உபத்ற்ட்  என்று திரிந்து நிற்கின்றது.

பேச்சு வழக்கில்  ஒவத்திரியம் என்றும் வழங்கும் 

----------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு:
ப - வ  திரிபு:  என் முன் இடுகைகள் காண்க.   உப = உவ. இந்த உப என்பது  "துணை"  என்னும் பொருள் உடையதன்று.

துருவுதல் =  துளைத்து வெளிப்படல்.

இது பேச்சு வழக்கிலிருந்து சங்கதம் சென்றது.  மிகத் திரிந்துவிட்டது.

வியாழன், 2 ஏப்ரல், 2015

பரிதியும் நிலவும்


பரிதிலீ  குவான்யூவும் மறைந்த போதும்
பாரிலொளி ஏற்றொளிரும் நிலவாய் நின்றார்
அரிதினீ டுலகுபெறு செல்வ மான
அவர்பெற்ற நன்மகனார் என்றால் உண்மை
சுருதியோ டிழைகின்ற இலயம் போலும்
சூழ்தருவ தனைத்தும்நன் கிணக்கிச் செல்வார்
கருதியோர் சிங்கையுல கின்முன் செல்லும்
காண்பரொரு நாடிதனில் ஐய முண்டோ.

அரும்பொருள்:


பாரில் ஒளி  ஏற்று ஒளிரும் :  அச் சூரிஅனின் ஒளியைப் பெற்றதனால்  குளிர்ந்த  ஒளி வீசுகின்ற;

நிலவாய் நின்றார் : அரசியலில் ஒரு மதியாக நிலை கொண்டார்.

அரிதின் ஈடு உலகு பெறு:  உலகம் அரிதாக  ஈடாக ப் பெறுதலை உடைய

கருதியோர் :  சிந்தனை செய்வோர்

சிங்கை உலகின்முன் செல்லும் நாடு; கருதியோர் இது காண்பர்; இதில்  ஐயம் உண்டோ என்றபடி மாற்றுக

புதன், 1 ஏப்ரல், 2015

ராஜ ராஜன் படை -சதுப்பு நிலத்தீவான சிங்கப்பூருக்கு

(Numbers refer to footnote numbering)

சுமத்திராவில் பாலிம்பாங்கில்  வெற்றியை  ஈட்டியபின்  இராஜராஜனின்  படையணி ஒன்று சதுப்பு நிலத்தீவான  சிங்கப்பூருக்கு வந்து கரை தொட்டது.  அந்த அணியின் தலைவன்  நீல உத்தம சோழன்.   இவன் ஓர்  அழகிய மலாய்ப் பெண்ணைக் கட்டிக்கொண்டு இங்கேயே  தங்கிவிட்டான் என்கிறார்கள். 1  மலாய் வரலாற்றில் Sang Nila Utama   'பணிதற்குரியவர்".  ( சங்க் )  2

சதுப்பு நிலங்களை மீட்கும்பணி  கிழக்கிந்தியக் குழும்பின் (கம்பெனியின்)  காலத்திலிருந்து சிங்கையில்  நடைபெற்றுக்கொண்டு வந்திருக்கிறது. 1950-வாக்கில்  கொலம் ஆயர் பகுதியில் ஒரு பேரடுப்பு  (Incinerator)  இருந்தது.  நகரத்தில் எடுக்கப்படும்  குப்பைகள் இங்கு கொண்டுவரப்பட்டு எரிக்கப்பட்டு அவற்றின்  சாம்பலை அடுத்திருந்த  சதுப்பு நிலங்களில்  கொட்டிக்கொண்டிருந்தார்கள்.  இந்த அடுப்பு தொடர்பான வேலைகளில்  ஈடுபட்டோர் பலர் அருகிலுள்ள சிற்றுரில்  (kampong) தங்கள் குடும்பங்களுடன்  வாழ்ந்தனர்.  கோழி, ஆடு, மாடு முதலியவற்றையும் வளர்த்து வந்தனர்.  நாளடைவில் இந்த சதுப்பு நிலம் மீட்கப்பட்டது.

நில  மீட்பு நல்லதுதான்.  அங்கு நண்டு மீன் பிடித்து  குழம்பு வைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்த பல குடும்பங்கள் அருகில் இருந்த மெக்பர்ஸன்  சந்தையில்  இவற்றைக்  காசு கொடுத்து வாங்கவேண்டிய தாயிற்று.  ஆண்டு:  1952.

வளர்ச்சிக்கும் ஒரு விலை கொடுக்கவேண்டுமே !

தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் படிக்க மெய்யப்ப செட்டியார் சாலையில் உள்ள பள்ளிக்குப் போகவேண்டிய திருந்தது.  அந்தப்பகுதிக்குத் தமிழர் :  மண்ணுமலை என்றனர். மலய் மொழியில் "போத்தோங்  பாசிர்." 3  அங்கு ஓடும் ஆற்றுக்குச் செங்கமாரி ஆறு என்றனர். ஆங்கிலத்தில் காலாங் ரிவர். (Not a translation of the term "SengkamAri"). மண்ணுமலைப் பகுதியில் எருமைகள் குளிக்க நல்ல வசதிகள் இருந்தன.

அப்போதும் அப்பர் சிராங்கூன்  சாலை  வண்டிகள் அதிகம்  ஓடும்  சாலைதான்.
இப்போது இங்கு மின் தொடர்வண்டி  நிலையம்  உள்ளது.
(அறிந்தோர்வாய்க் கேட்டு எழுதப்பட்டது.)


------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு:

1.  இதை ஒரு சீனச் செய்தியாளர்  தம் ஆங்கிலக் கட்டுரையில்  குறிப்பிட்டு
எழுதியது  நினைவிற்கு வரும்.  (சிங்கப்பூர்  வானவூர்தி 1ஒன்று பாலிம்பாங்க்
(சுமத்திராவில்) விழுந்து நொறுங்கியபோது.  பாலிம்பாங்குக்கும்  சிங்க்கப்பூருக்கும்  தொடர்பு  நீங்கவில்லை  என்பதாக  எழுதியிருந்தார். )

2.  சங்க்  :  சம்ஸ்கிருதம் - சாந்த்   saint.  "Sant Fateh Singh"  :  this usage of the word can be a modern example.
There was a Malay Secondary School in the name of  Sang Nila Utama.

3  மண்ணுமலை .     Potong -   வெட்டு,   பாசிர் =  மணல்.   மண்ணுமலை என்பது
மக்கள் மொழிபெயர்ப்பு. மலாய்த்  தொடருக்கு  "மணல்வெட்டி  மலை" என்று பொருள்.  இங்கு அமைந்த  புது நகரில்தான்  "சிவ துர்க்கா  ஆலயம் "  உள்ளது,
4 செங்கமாரி  ஆறு  இப்போது தூய்மைப் படுத்தப்பட்டு  அழகு பெற்றுள்ளது.  எருமைகள்  போய் வெகு  காலம் சென்றுவிட்டது.
ஆ ற்றில் மீன் உண்டு என்கிறார்கள்.

Recommended reading for old history of Malaysia and Singapore

மலாயா   தேச சரித்திரக் காட்சிகள்:.   பிரமச்சாரி  கைலாசம் ,  இராமகிருஷ்ண  மடம்  வெளியீடு.


vellaza



வெள்ளாளர் என்ற சொல்  -ளர்  என்று முடிகிறதே யன்றி,  -ழர்  என்று முடியுமாறு இப்போது எங்கேயும் எழுதப்படுவதில்லை.

சோழர் என்பது உண்மையில் சோளர்  என்பதிலிருந்து  வந்ததென்று ஆய்வாளர் சிலர் கூறியதுண்டு.  அதிகமான சோளம் விளைந்த நாட்டுக்கு உரியோர்  என்று பொருள்தரும் சோளர்  என்பதே சோழர் என்று மருவிற்று  என்றனர்.   ள  >  ழ  ஆகும் என்றனர்.

12-ம் நூற்றாண்டுக்  சோழர்  கல்வெட்டு ஒன்று "வெள்ளாளர் " என்பதை  வெள்ளாழர்  என்கிறது. இவ்வடிவம் நூல்களில் இல்லையென்று தெரிகிறது.

எவ்வாறாயினும்  ள  > ழ  திரிபினை  மனத்தில் இருத்துங்கள்.

பேச்சு வழக்கில்  ழ என்பது ள  ஆவது யாண்டும் கேட்கப்படுவது ஆகும்.