செவ்வாய், 27 அக்டோபர், 2015

ஆதியந்தம்

இறை என்ற அடிச்சொல், இறைவன்,இறைவி, இறையன், இறையனார் என்ற வடிவங்களைப்  பிறப்பித்துள்ளது. இவை தாயும் பிள்ளைகளும் போலவே உள்ளன.

இறை என்பதற்கும் ஓர் அடிச்சொல் இருக்கிறது.  அது இறு என்பது. இதன்பொருள்  பொருள் என்ன?  இது பல்பொருளொரு சொல், பல பொருளுள்ளது. பல சொற்களையும் பிறப்பித்துள்ளது.

அவற்றுள் ஒன்றிரண்டையே இங்கு பேசுவோம்.

இறுதல் = முடிதல். இதிலிருந்து முடிதல் என்ற பொருள் உள்ள இறுதி என்ற சொல்லும் பிறக்கிறது.  இறுதிச்சுற்று,  இறுதி நபி,  இறுதியாய்விடுதல் என்று  முன் நீங்கள்  சொல்லாட்சியை எதிர்கொண்டிருக்கலாம்.

இறுத்தல்-  வரி முதலியன செலுத்துதல்.  இதிலிருந்து இறை = வரி என்ற பொருள்தரு வடிவமும் கிடைக்கின்றது.

இறு, இறை, இறைவன் :    இங்கு கண்ட பொருட்சாயல்களால்,  இறைவன் என்ற சொல்லையும் அறிஞர் பல்வேறு  கோணங்களிலிருந்து விளக்கினாலும்,  அவ்விளக்கங்கள் பிழைபடமாட்டா.

இறைவன்:  கடவுள் என்றும்  மன்னன் என்றும்  இடம்  நோக்கிப் பொருள்கொள்ளவேண்டும்.

கடவுள் என்ற பொருளில்  எல்லாவற்றுக்கும் இறுதி அவன் , ஆகவே இறைவன் என்று கொள்ள, சொல்லில் வசதி உள்ளது.

அந்தம் என்பது இறுதி குறிக்கிறது.

அவன் ஒருவனே இறுதியில் இருப்பவன்; இறுதியாகவும் இருப்பவன். இறுதியை  உண்டாக்குகிறவன்.  இங்ஙனம்  எண்ணங்களை விரித்துப் பொருளையும் விரிக்கலாம்.

ஆதியிலும் அவனே இருந்தான். அவன்முன் யாருமில்லை. எதுவுமில்லை. உலகம் ஆதல் பொழுதில் இருந்தமையினால் அவன் ஆதி ஆகிறான்.  உலகம் தொடங்கியதால், அது தொடங்கிய பொழுது அல்லது காலம்,   ஆதி ஆகிறது. பொழுது=  சிறியது. காலம்- நீண்டது. இவை சொற்பொருள்கள்.

எனவே, மெய்யறிஞர்கட்கு   (religious  philosophers) ,  ஆதியுமவன்; அந்தமும் அவன்.

சிவஞான ;போதம் என்ற நூல், அவனை ஆதியந்தம் என்றே குறிக்கிறது.

ஆதி, அந்தம் என்பன காலப்பெயர்கள்.   இவற்றை ஒன்றாகவோ சேர்த்தோ கடவுள் என்ற பொருளில் வழங்கினால், இலக்கணப்படி அது கால ஆகு பெயர் ஆகிறது.

சிவஞான போதப் பாடலை இங்கு காணலாம்:

http://sivamaalaa.blogspot.sg/2015/10/httpsivamaalaa.html

கருத்துகள் இல்லை: