சனி, 30 செப்டம்பர், 2017

புறப்பொருள்: பொருள்மொழிக்காஞ்சித் துறை பொதுவியல் திணை. (சுற்றம் பூட்டும் விலங்கு):

அடுத்து ஒரு சிறு புறநானூற்றுப் பாடலைப் பாடிப் பொருளுணர்வோம்.
நம் முன் இருப்பது 193-வது பாடல். இப்பாடலைப் பாடியவருக்கு இயற்பெயர் யாது என்று தெரியவில்லை. ஆனால் ஓரேருழவர் என்று ஏடுகளில் காணப்படுகிறது. ஓர் ஏர் உழவனின் செய்கையை வரணித்தபடியால் இப்பெயரால் குறிக்கப்பட்டார்.  இவர்பாட்டிலிருந்து இவரது புலமை புலப்படுகின்றது.

இப்பாடலின் திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக்காஞ்சி.
அறிஞர் உரைத்த ஓர் பேருண்மையைப் புலவர் எடுத்துப் பாடுவது பொருள்மொழிக்காஞ்சி என்று கூறப்படும்.  பெரும்புலவர் தாமே அறிஞர் நிலையை எய்தி ஓருண்மையை உலகுக்கு உணர்த்தும் பாடலும் பொருண்மொழிக்காஞ்சி என்றே சொல்லப்படும். இது பொதுவியல் என்னும் திணையின்பாற் படும். பொருளென்பது புரிந்து கண்டது.  எ-டு:
இருளோடு உறவு கொண்டு நில்லாமல் அருளோடு உறவு கொள்வாய் --  என்று பாடினால் அது பொருள்மொழிக்காஞ்சி ஆகிறது.  அஃது ஓர் உலகு போற்றும் உண்மையாம் தகுதி உடைமையினால்.

பிற புறத்திணைகட்கு இது பொதுவாதலால் பொதுவியல் எனப்பட்டது.

இனிப் பாடலைப் பார்ப்போம்.

அதள் எறிந்தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடுமன்;
ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே.

அதள் -  புடைத்துக் கொட்டிய உமி அல்லது தோல்.
எறிந்தன்ன -  வீசியது போல. .
நெடுவெண் – நீண்ட வெண்மையான.
களர் -  களர் நிலம். விளையா நிலம்
ஒருவன் -  வேடன் ஒருவன்
ஆட்டும் = ஓடவைக்கும்;
புல்வாய்  -  மான். (போல)
உய்தலும் கூடுமன் -  ஓடித் தப்பிப் பிழைத்தலும் முடியும்.
ஒக்கல் வாழ்க்கை -  சுற்றத்துடன் வாழும் வாழ்க்கை.
தட்கும் -  கட்டிப்போடும்.  ஆ=  அந்த.
கால் -  நடமாடும் உறுப்பாகிய காலினை.  (ஆ காலே)

பாடலின் பொருள்: புடைத்து எறிந்த தோல் பரப்பியது போலும் காணும்  ஒரு களர் நிலத்தில் தனித்து நிற்கும் ஒரு மான் என்றாலும் அதுவும் ஒரு வேடனிடமிருந்து ஓடித் தப்பிவிடும். யானோ சுற்றத்துடன் கூடி வாழ்கிறேன். இச்சுற்றம் என்னைத் தப்பவும் விடாமல் இங்கு வாழவும் விடாமல்  கால்களைக் கட்டிப்போட்டு   வைத்துவிட்டது. (அதனால் என்னால் இங்கு இருக்கவும் முடியவில்லை; தப்பி ஓடி வாழவும் முடியவில்லை.)

ஒருவனின் சுற்றம் அவன் விரும்பும் வாழ்க்கையை அவனுக்குக் கிடைக்காமற் செய்துவிடுகிறது. இது உலகத்து உண்மையாகும்.  

காதலியை இத்தலைவன் மணக்க இயலவில்லை என்று பாடலிலிருந்து தெரிகிறது. இவனுக்காக இரங்குவதன்றி யாது செய்யலாம்? பொருளாதார ஏற்றத் தாழ்வினாலோ பிற காரணங்களாலோ இத்தகு துன்பமுற்றோர் உலகிற் பலர். சிலரே நினைத்ததை அடைந்து இன்புறுவோர்.  இது உலகினியற்கை.


ஒன்று ஒண்ணு ஒருத்தன் ஒருத்தி - ஆய்வு செய்க



ஒன்றும் ஒண்ணும்.

தலைப்பிலுள்ள இரண்டு சொற்களையும் எண்ணுப் பெயர்கள் என்பர். ஒரே எண்ணின் இரண்டு வடிவங்கள். ஒன்று என்பது எழுத்துமொழியினுடைய வடிவம்; ஒண்ணு என்பது பேச்சு மொழியில் மட்டும் இயல்வது, இரண்டிலும் ஒன்று என்பதே உயர்வான வடிவம் என்பர். அது கற்றோனின் வடிவம்,
ஒலியில் உயர்வான ஒலி, தாழ்வான ஒலி என்பது எதுவுமில்லை. எல்லாமும் மனிதனின் நாவொலிகள் தாம். இவைமட்டுமல்ல, மனிதனால் பலுக்கப்படும் எல்லா ஒலிகளிலும் உயர்வு தாழ்வு என்பதொன்றுமில்லை. உயர்வு தாழ்வு எல்லாம் மனிதனின் காரணமற்ற சிந்தனைகள்>
பேச்சு மொழியே உயிர்மொழியாகும். என்னைப்பொறுத்தமட்டில் நான் எழுத்துமொழியை அறிந்துகொண்டதற்குப் பேச்சுமொழியே காரணமானது. 

இன்று தமிழ் உயிர்மொழியாய் இருப்பதற்கும் அதைப் பலர் பேசுவதே காரணம்.
பாஷை என்பதும் பேசு என்ற சொல்லினின்று வந்ததே. பேசு >  பேசை > பாசை > பாஷை. என வந்ததைத் தமிழறிஞர்  கசுட்டியுள்ளனர். எனவே பேச்சே அடிப்படை அல்லது மூலாதாரம் ஆகும்.
என்றாலும் எழுத்துமொழி வடிவங்களும் போற்றற்குரியனவே ஆகும். நம் முன்னோர்தம் கருத்துக்கள் அனைத்தும் எழுத்துமொழியிலே உள்ளன. இன்றும் நாம் அவற்றை அறிந்து இன்புறுகின்றோம்.
இப்போது விடயத்திற்கு வருவோம். விடுக்க வந்த செய்தியே விடயம்:  விடு > விடை > விடையம் > விடயம். விடுத்தலாவது வெளியிடுதல்.
ஒன்று என்பதில் ஒன்+ து என்னும் இரண்டு துண்டுகள் உள்ளன. ஒன் என்பதே சொல். து என்பது ஒரு விகுதி அல்லது சேர்க்கைச்சொல். விகுதி யாதெனின் மிகுதி.  அறிந்து போற்றுதற்குரிய பொருண்மை எதுவும் அதிலில்லை. எழுத்துவடிவமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல், து ஒட்டிய ஒன் என்பது. நம் முன்னோர் ஏற்றுக்கொண்ட வடிவம். அவ்வளவுதான்;  அதை மதிக்கிறோம்,
து என்பது அஃறிணைப்பொருள் உணர்த்தும் ஒட்டுச்சொல்லாக வருகிறது. ஒன் என்ற அடிச்சொல் உயர்திணைப் பொருள் ஏற்பதில்லை, அதாவது ஒன்+ அன் = ஒன்னன் என்று வரவில்லை. மொழியில் அந்த வடிவமில்லை. ஒன் என்பது ஒர் என்று மாறிப் பின் ஒரு என்ற உகரச் சாரியை பெற்று அதன்பின் வகர உடம்படு மெய் பெற்று அப்புறம்தானே அன் என்ற ஆண்பால் வடிவ விகுதியை அடைகிறது? ஆகவே ஒன் என்பதில் து இல்லாமல் போய்விட்டாலும் ஒன்றும் குடிமுழுகிப்போய்விடாது. து என்பது இல்லாவிட்டாலும் பொருளால் அஃறிணைதானே!   உயர்திணை ஆகிவிடக்கூடிய அபாயம் எதுவும் அதிலில்லை.
எனவே பேச்சு மொழியில் ஒன் என்ற அடிச்சொல் உகரச் சாரியை மட்டும் பெற்று ஒன்னு அல்லது ஒண்ணு என்று வருகிறது.  இது ஒற்றாக –னகரம் வரினும்  -ணகரம் வரினும் ஒன்றுதான். பேச்சில் இந்த வேறுபாடும் ஒன்றும் விளைவுகளை ஏற்படுத்தவில்லை.

ஒருத்தன்,  ஒருத்தி
ஒருத்தன் என்ற சொல்லில் அஃறிணை விகுதியாகிய து வருகிறது.  இப்படிக் கூறினால் திணை மயங்கிய குற்றம் ஏற்படுமாதலால் வேறுவிதமாக து என்ற இடைநிலை வந்துள்ளது என்னலாம். ஒருத்தன் என்ற சொல்லில் த் என்ற ஒற்று மட்டுமே இருக்கிறது. உகரம் தொலைந்தது. த்+ உ என்பதன்றோ து. ஆகவே இடைநிலையாவது து அன்று, த் என்ற ஒற்றுதான் என்னலாம். இலக்கணப்புலவர்களே, மொழியைக் குற்றப்படுத்தாமல் உள்ள எந்த விளக்கமானாலும் ஏற்புடையதுதான். ஒருத்தன் என்பதில் து என்ற அஃறிணை உள்ளது என்று சொன்னால் அப்புறம் இலக்கணம் கொச்சையாகிவிடும். ஒருத்தி என்ற வடிவமும் அத்தகையதே.

இடக்கரான இடங்களை அடக்கிவிடவேண்டியது நம் கடமை.
ஒருத்தன் ஒருத்தி என்பவை ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவங்களாதலாலும் அவை உயர்திணை ஆதலாலும் அஃறிணை நுழைந்துவிட்டதாக இலக்கணம் சொல்லாமல் இயையுமாறு உரைப்பது கடமையாகும்.

ஒன்று என்பதில் று வருவது புணர்ச்சியினால்; அது வேகா நிலையில் ஒன்-து, வெந்த நிலையில் ஒன்று. அவ்வளவே.

இதுகாறும் கூறியவாற்றால் ஒன்னு என்பதற்கும் ஒன்று என்பதற்கும் உயர்வுமில்லை தாழ்வுமில்லை என்பது முடிவு.




வெள்ளி, 29 செப்டம்பர், 2017

மும்பை தொடர்வண்டி நிலைய மரணங்கள்,




கூட்டத்தி னுள்ளேபோய் மாட்டிக்கொண்டால்
குழித்தள்ளப் பட்டாலும் தெரியா தையா!
ஓட்டமொன்றை உள்ளவர்கள் எடுக்கும் போதோ
உன்னைநின்று பார்ப்பதற்கு நேர மேது?
வாட்டமுற வேண்டாமே வாரா நன்மை
வந்திடுமோ உனைத்தேடி கூட்டத் துள்ளே!?
ஆட்டநகர் மும்பாயில் ஆவி நீங்கி
ஐயோமரித் தாரிருபத் தின்மே லோரே.

கல்விழுந்த பாலமதில் காலே நோக
கடுகியந்தக் கூட்டமக்கள் ஓடுங் காலை
உள்விழுந்தார்  தப்பிடவோர் உய்வு கிட்டார்
உயிர்விட்ட பரிதாபம் உருக்கும் நெஞ்சை.
பல்விழுந்தே உயிரிருந்து தப்பி னோரைப்
பக்கல்மருத் துவமனைக்குத் தூக்கிச் சென்றார்
நெல்விழுந்து தரைகாணா நீக்க மற்ற
நீள்கும்பல் என்னிலதை நீங்கிச் செல்லே. 
-----------------------------------------

 பொருள் விளக்கம்:




குழித்தள்ள -  குழிக்குள் தள்ள.
ஆட்டநகர் -  களியாட்ட (மிக்க) நகர்; பல 
மகிழ் நிகழ்வுகளும் கிட்டும் நகர்.
கல்விழுந்த:   மேலிருந்து கல் பெயர்ந்து விழுந்ததனால்
பாலம் இடிந்துவிடும்  என்று அஞ்சி ஓடினார்கள் என்பது 
செய்தி.
மரித்தார் – இறந்தனர்.  மரி > மரணம் அடைதல்.
கடுகி – வேகமாக.
உள்விழுந்து – ஓடும் கூட்ட நெரிகலிலே விழுந்து.
பல்விழுந்தே உயிரிருந்து -  பிழைத்துக்கொண்டவர்கள்
அல்லது காயமடைந்தவர்களைக் குறிக்கிறது.  ஒரு 
வகைப் பிழைத்தோரைக் காட்டி அவர்கள் போலும் பிறவகைக் காயமடைந்தோரையும் உளப்படுத்துவது.
நெல்விழுந்து …….நீள்கும்பல்:  மிக்க இறுக்கமான நெரிசல் குறிக்கும்.
என்னில் அதை -  என்றால் அந்த

 


-------------------------------------------------------------

edited. will review.
Editing will take time as there are also data charges and software blockades by virus and third parties. 
error message:   Posting as B.I Sivamala
An error occurred while trying to save or publish your post. Please try again. Dismiss

காக்கையைத் தேடி



காக்கையைத் தேடி…….
(புதுக்கவிதை)

காக்கையே காக்கையே
காலை மணி ஐந்தேதான்;
காலையிலே என்ன இரைச்சல்
உனக்கே உற்றதென்ன கரைச்சல்?

பார்க்கிறேன் எங்குள்ளாயோ
படு இருட்டில் தெரியவில்லை!
சேர்க்கலாம் உன்வசமாய்
சீராக உண்ணக் கொஞ்சம்
ஏக்கமின்றி உண்கவென்றால்
இருக்குமிடம் மறைவிடமோ!
ஆக்கமின்றிக் கரைந்திடாமல்
அருகினில்வா இதையுண்பாய்……..